திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

சிதம்பரம் வி.சி. கட்சிப் பிரமுகர் மரணம்: அமைதிப் பேச்சுவார்த்தை முடிவில் உடலை பெற்ற உறவினர்கள்

சிதம்பரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அண்ணாதுரை மரணம் குறித்து சிதம்பரம் உதவிஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை அடுத்த உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அவரது உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.

News image
Updated On :26 மே 2013, 1:14 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் அண்ணாதுரை மரணம் குறித்து சிதம்பரம் உதவிஆட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்பட்டதை அடுத்த உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை அவரது உடலை பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர்.

சிதம்பரம் அருகே வண்டிகேட் வாய்க்கால் மேட்டுத்தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை (52). விவசாய கூலித்தொழிலாளியான இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் சிதம்பரம் அருகே வண்டிகேட் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை மரத்தில் உடலில் காயத்துடன் தூக்கு மாட்டிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இறந்து போன அண்ணாதுரை மீது கிள்ளை காவல் நிலையத்தில் கடந்த மே 20-ம் தேதி வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் பிரமுகர் கே.ஐ.மணிரத்தினத்தால் திறக்கப்பட்ட நீர் மோர் பந்தலை தீ வைத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2வது நபர்.

இந்நிலையில் உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அண்ணாதுரை அடித்துக் கொலை செய்யப்பட்டு, தூக்கு மாட்டப் பட்டுள்ளார். எனவே போலீஸார் விசாரணை மேற்கொண்டு கொலை வழக்காத பதிவு செய்து, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் வண்டிகேட்டில் கடலூர் தெற்கு  மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்டனர். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அண்ணாதுரை உடலை பெற மறுத்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து அண்ணாதுரையில் உடல் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை மதியம் சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வட்டாட்சியர் எம்.விஜயா, ஏடிஎஸ்பி ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், பி.முருகானந்தம், தனிப்பிரிவு தலைமைக்காவலர் செந்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், மாநில துணைச் செயலாளர் திருமாறன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாநில துணைச் செயலாளர் ரா.காவியச்செல்வன், நிர்வாகிகள் நீதிவளவன், அதியமான், குறிஞ்சிவளவன், நிலவழகன், அண்ணாதுரை மனைவி சாரதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விசாரணைக்கு பின் மருத்துவப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பது, இறந்தவரின் மனைவிக்கு அரசால் வழங்கப்படும் விதவை உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுப்பது, இறந்தவரின் குடும்பத்தின் வறுமை நிலையை கருதி தமிழக முதல்வர் சிறப்பு நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் பெற்று வழங்க பரிந்துரை செய்வது, இறந்தவரின் உடலை பெற்று நல்லடக்கம் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அண்ணாதுரையின் உடலை பெற்றுச் சென்று அவரது உறவினர்களும், கட்சி நிர்வாகிகளும் அடக்கம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.