தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் மட்டும்தான் இந்தளவுக்கு டாஸ்மாக் கடைகளில் பணம் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மோசடி நடந்துள்ள கடைகளின் மேற்பார்வையாளர்கள் தங்கள் கடைகளில் உள்ள மதுப் பாட்டில்களை விற்பனை செய்துவிட்டு தணிக்கைப் பிரிவு ஊழியர்கள் தணிக்கை செய்ய வரும்போது விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் விற்பனையாகாமல் இருப்பு உள்ளதாக கணக்கு காட்டி விற்பனைப் பணத்தை கையாடல் செய்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மோசடிக்கு தனியார் தணிக்கை நிறுவன ஊழியர்கள் மற்றும் சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் சிலரும் உடந்தையாக இருந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இந்த மோசடி சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும் ஏற்கனவே மாவட்ட டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் அதிகாரிகள் மட்டத்தில் பணியாற்றியவர்கள் அவர்களது பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிதாக அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந் நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு மதுக்கடைகளிலும் படிப்படியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த மோசடி சம்பவங்களில் அந்தந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து இம் மாவட்டத்தில் நடந்துள்ள டாஸ்மாக் கடை விற்பனைப் பணம் மோசடி சம்பவம் தொடர்பாகவும் இனி கடைகளில் நடத்தப்படும் ஆய்வில் பண மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த கடைகளின் மேற்பார்வையாளர்கள் தான் முக்கியமாக சிக்குவார்கள் எனவும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டாஸ்மாக் நிறுவன வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.