காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமை கரையை கடந்ததால், அதிக வேகத்தில் வீசிய காற்றினால், கடலூர் அருகே உள்ள கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில், வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.
கடலூர் அருகே பத்திரக்கோட்டை, சி.என்.பாளையம், குமளங்குளம், சிலம்பிமங்கலம், வடக்கு ராமாபுரம், கிழக்கு ராமாபுரம், எஸ்.புதூர், எம்.புதூர், வெள்ளக்கரை உள்ளிட்ட கிராமங்களில் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.இந்த கிராமங்களில் சுமார் 200 ஏக்கரில் வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதம் அடைந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர். இவைகள் இன்னும் ஒரு மாதத்தில் முதிர்ந்து, அறுவடை செய்ய வேண்டிய நிலையில் இருந்தவை என்றும் விவசாயிகள் கூறினர். இதுகுறித்து வேளாண் துறையில் விசாரித்தபோது, வாழை மரங்கள் சேதம் குறித்து விவரம் அறிய, உதவி வேளாண் அலுவலர்கள் பாதிக்கப்பட்ட கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்வார்கள் என்றனர்.
ஆட்சியர் அலுவலகம் பகுதியில் 5 மணி நேரம் மின் தடை
சனிக்கிழமை காலையில் சூறைக்காற்று வீசியதால், காலை 8 மணிக்கு பிறகு 10 மணி வரை, கடலூரில் பெரும்பாலான பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது. மற்ற பகுதிகளுக்கு காலை 11 மணிக்கு மின் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால் ஆட்சியர் அலுவலகம் உள்ள மஞ்சக்குப்பம், அருகில் புதுப்பாளையம் பகுதிகளுக்கு மதியம் 1 மணிக்கு பிறகே மின் விநியோகம் செய்யப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, மஞ்சக்குப்பம் பகுதியில் மரக்கிளை ஒடிந்து மின் கம்பியில் விழுந்ததால் ஆட்சியர் அலுவலகத்துக்கு மின் விநியோகம் வழங்க கால தாமதம் ஏற்பட்டதாக கூறினார்.
பஸ்கள் நிறுத்தம்
காலையில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், புதுச்சேரி, விழுப்புரம், விருத்தாசலம், சிதம்பரம் செல்லும் தனியார் பஸ்கள் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை நிறுத்தப்பட்டன. இதுபோல் கடலூரிலிரிலிருந்து கிராமப்புறங்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பெரும்பாலனவை மதியம் வரை இயக்கப்படவில்லை. மக்கள் வெளியில் செல்லாததால் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பாதிப்பு இல்லை என்றனர் போக்குவரத்து அதிகாரிகள்.
நெல் பயிர் பாதிப்பு: இரண்டு நாட்களுக்கு பிறகே விவரம்
கடலூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது.12 மணி நேர தொடர் மழைக் காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன என்றனர் விவசாயிகள்.இதுகுறித்து வேளாண் அதிகாரிகளிடம் கேட்டபோது, தற்போது மழை நின்று விட்டதால், வயலில் சூழ்ந்த மழை நீர் வடியத் துவங்கியுள்ளது. மழை நீர் வடிந்த பிறகே சேத மதிப்பு தெரிய வரும். வேளாண் அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு இரண்டு நாட்களில் சேதம் குறித்த முழுமையான தகவல் கிடைக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.