

2016ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் இந்த தேர்தலில் ஒத்திகை பார்க்கிறார்கள் என்றார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் ஞாயி்ற்றுக்கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வள்ளல்பெருமான் ஆகியோரை ஆதரித்து அவர் பேசியது: 47 ஆண்டுகள் தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக கட்சிகளுக்கு தங்களுடைய எல்லை எது என்று தெரியவில்லை. திமுக, அதிமுக கட்சிகளின் எல்லை தமிழ்நாடுதான். தமிழ்நாட்டை விட்டு வெளியில் வேட்பாளரை நிறுத்தவும் முடியாது, வெல்லவும் முடியாது.
முதல்வர் ஜெயலலிதா பாராளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்னரே, பாராளுமன்றம் வடிவிலான கேக்கை வெட்டி, நான் தான் பிரதமராக வருவேன் என்றார். அதிமுகவினரும் அம்மா தான் அடுத்த பிரதமர் என்றார்கள். 15 நாட்களுக்கு பிறகு கொஞ்சம் சுருதி இறங்கி, அதிமுக அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் அமையும் என்றார்.
எந்த அரசில் அங்கம் வகிக்கிறீர்கள்? யாருடைய அரசுக்கு ஆதரவு? உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்ட கேள்விகளுக்கு இதுவரை ஜெயலலிதா பதில் சொல்லவில்லை.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுருதி குறைந்து ஜெயலலிதா, தான் பிரதமர் பதவிக்கோ, அமைச்சர் பதவிக்கோ ஆசைப்படவில்லை. தமிழ்நாட்டின் நலனே முக்கியம் என்று கூறியிருக்கிறார். எந்த கோட்டையை பிடிப்பதற்காக தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்? நாடகம் நடத்துவதற்கு ஒத்திகை பார்ப்பார்கள். அதேபோன்று தான் 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவும், அதிமுகவும் இந்த தேர்தலில் ஒத்திகை பார்க்கிறார்கள்.
வாஜ்பாய் 1994-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தார். ஆனால் 13 நாட்கள் கூட ஆட்சி நடத்த முடியவில்லை. 1998-ம் ஆண்டு மீண்டும் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி அமைந்தது. ஆனால் 16 மாதங்களிலேயே ஆட்சி கலைந்தது.
இந்தியாவில் நிலையான ஆட்சி அமைக்கக்கூடிய சக்தி காங்கிரஸ்க்கு மட்டும்தான் உள்ளது. வரும் தேர்தலில் ஒரு வேளை காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றால் பாஜக தலைமையிலான ஆட்சி தான் அமையும். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
ஆட்சிபொறுப்பேற்றவுடன் சட்டமன்றத்தில் 6 மாதத்தில் மின்தடையை போக்குவேன் என்று வாக்குறுதி அளித்தார். தமிழகத்தை மின்மிகை மாநிலமாக ஆக்குவேன் என்றார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு பிறகும் மின்தடை 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்று உயர்ந்து கொண்டே வருகிறது. 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், ஆனால் மின்தட்டுப்பாட்டை உருவாக்க யாரோ சதி செய்கிறார்கள் என்றும் ஜெயலலிதா கூறுகிறார்.
மின்சாரத்தை யாராலும் சேமிக்க முடியாது. தண்ணீரை போன்று தேக்கி வைக்க முடியாது. தமிழ்நாடு மின்சார வாரியம் உங்கள் வாரியம். மின்சார அமைச்சர் உங்கள் அமைச்சர், மின்சார ஊழியர்கள் உங்கள் ஊழியர்கள் அப்படி இருக்கையில் யார் வந்து சதி செய்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். மின்சாரத்தில் சதி செய்யமுடியாது. தொட்டால் ஷாக் அடிக்கும்.
உங்கள் ஓட்டுக்களை, மற்ற கட்சியினருக்கு அளித்து, ஓட்டை வீணாக்காதீர். நம் நாடு மிகப் பெரிய சவால்களை எதிர் நோக்கி உள்ளது. ஆனால், பட்டினி இல்லை. ஆண்டுக்கு, 30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
அம்பேத்கர் அரசியல் சாசனம் மூலம் தலித்களுக்கு இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணா ஆகியோர் போராடி பெற்றுக்கொடுத்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து தேர்தல் அறிக்கையில் இல்லை. அதேபோல் இலங்கை தமிழர் பிரச்னை குறித்து இதில் ஏதும் இல்லை.
பாஜக தேர்தல் அறிக்கையில், ராமர் கோவிலை கட்டுவோம். பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று கூறப்பட்டிருக்கிறது. கரசேவைக்கு ஆள் அனுப்பிய ஜெயலலிதா பாஜக ஆட்சிக்கு வந்துவிடும் என்று கருதி, அக்கட்சியின் பி டீம் போல் செயல்படுகிறார். தமிழகத்தில் அதிமுக வேட்பாளர்கள் எத்தனை பேர் வெற்றிபெற்றாலும் பாஜகவுக்கு தான் ஆதரவு அளிப்பார்கள்.
இதனால் மத்தியில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
முன்னாள் எம்பி பிஆர்எஸ்.வெங்கடேசன், மாவட்ட தலைவர் எம்ஆர்ஆர்.ராதாகிருஷ்ணன், ராகுல்காந்தி இளையோர் பேரவை மாநில தலைவர் பி.வி.சிவக்குமார், எம்பி செய்திதொடர்பாளர் என்.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.