/

பழனியில் மழைவேண்டி தீர்த்தக்காவடி குழுவினர் யாகசாலை பூஜை

பழனியில் பங்குனி உத்திரம் நிறைவு பெற்றாலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து மூலவருக்கு தீர்த்தம் செலுத்தியவண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் தீர்த்தக்காவடி எடுத்து வந்த

News image
Updated On :27 ஏப்ரல் 2014, 11:55 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் தீர்த்தக்காவடி குழுவினர் மழைவேண்டி சிறப்பு யாகசாலை பூஜை நடத்தினர்

பழனியில் பங்குனி உத்திரம் நிறைவு பெற்றாலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொடுமுடி தீர்த்தக்காவடி எடுத்து மூலவருக்கு தீர்த்தம் செலுத்தியவண்ணம் உள்ளனர்.  இந்நிலையில் தீர்த்தக்காவடி எடுத்து வந்த பாதயாத்திரை குழுவினர் தமிழகத்தில் நிலவி வரும் வறட்சி நீங்கி வளம் பெற மழைவேண்டி சிவனடியார்களுடன் வந்திருந்து சிறப்பு யாகங்களை நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருள்மிகு பழனிமுருகன் தீர்த்தக்காவடி குழுவை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கடந்த வியாழக்கிழமை மாலை உடுமலை ஶ்ரீகாமாட்சியம்மன் கோயிலில் இருந்து கொடுமுடி சென்று அங்கு காவிரிஆற்றில் தீர்த்தம் முத்தரித்து விட்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தனர்.  அங்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்திவிட்டு வெள்ளிக்கிழமை இரவு பழனிக்கு பாதயாத்திரை கிளம்பினர்.  24ம் ஆண்டாக நடைபெற்ற இந்த பாதயாத்திரையின் போது வயலூரில் தனியார் மண்டபத்தில் மெய்யார்பூஜை நடத்தப்பட்டது. 

சனிக்கிழமை பழனி வந்த குழுவினர் அடிவாரம் அங்காளஈஸ்வரி திருமண மண்டபத்தில் தங்கி ஞாயிற்றுக்கிழமை மகாயாக வேள்விபூஜை மேற்கொண்டனர்.  உலக சுபிட்சம், மழை மற்றும் விவசாய செழுமை வேண்டி நடைபெற்ற இந்த யாகவேள்வியின் போது சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை இசையுடன் பாடினர்.  யாகபூஜை முடிவில் பூர்ணாஹூதி நடத்தப்பட்டது.  முன்னதாக தீர்த்தக்கலசங்களுக்கும் பூஜை நடத்தப்பட்டது.  மாலையில் கலசங்கள் மேளதாளம், செண்டை வாத்தியம் முழங்க கிரிசுற்றப்பட்டு மெய்யார் பூஜையுடன் நிறைவு பெற்றது. 

இன்று (திங்கள்கிழமை) கந்தர்சஷ்டி பாராயணம் செய்யப்பட்டு காவடிகள் மலைக்கு கொண்டு செல்லப்பட்டு மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்.  பூஜைக்கான ஏற்பாடுகளை உடுமலை அருள்மிகு பழனி முருகன் தீர்த்தக்காவடி குழு ஆலோசனைக்குழு தலைவர் ஜெகதீசன், தலைவர் பஞ்சலிங்கம், செயலர் ஆறுச்சாமி, பொருளாளர் சண்முகம் மற்றும் நிர்வாகக்குழு கிருஷ்ணகுமார், ஐயப்பன், செயற்குழு முத்துக்குமார் மற்றும் உடுமலை 24மனை தெலுங்கு செட்டியார்கள் மகளிர் வழிபாட்டுக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.