பாளையங்கோட்டையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இடத்திற்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கூலித் தொழிலாளி திங்கள்கிழமை குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாளையங்கோட்டை ஆயுதப்படை செயின்ட் தாமஸ் சாலையில் வானவாமலை மகன் பாலசுப்பிரமணியன் (60) புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து 40 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார். கூலித் தொழிலாளியான இவர் தான் குடியிருக்கும் வீட்டு மனைக்கு பட்டா வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார்.
தொடர்ந்து கடந்த 40 ஆண்டுகளாக பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் பாலசுப்பிரமணியன் திங்கள்கிழமை தனது கோரிக்கையை நிறைவேற்றுமாறு கோரி மனைவி வேலம்மாள், மாற்றுத்திறனாளி மகன் மணிகண்டன் ஆகியோரும் வீட்டு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர் கூறியதாவது: நான் வசித்து வரும் குடியிருப்புக்கு பட்டா வழங்குமாறு கடந்த 40 வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகிறேன். அரசு புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமித்து குடியிருந்து வரும் வீட்டு மனைகளை சிறப்பு திட்டத்தின் கீழ் வரைமுறை செய்து அங்கு குடியிருந்து வருபவர்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கோரிக்கை மனு அளித்தேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பாளையங்கோட்டை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் என்னிடம் நேரில் விசாரணை நடத்தினர். எனினும் எனது கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. எனது கோரிக்கை குறித்து அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளவில்லை என்றார் அவர்.
பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திற்கு அருகில் வசிக்கும்
பாலசுப்பிரமணியன் தனது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழியில்லை என வேதனையுடன் குறிப்பிட்டார்.