/

பழனியருகே தனியார் நெல்வயலில் காட்டு யானைகள் அட்டகாசம்

பழனியருகே தனியார் நெல்வயலில் காட்டுயானைகள் கூட்டமாக அட்டகாசம் செய்ததில் நெற்கதிர் விளையும் நேரத்தில் முற்றிலும் சேதமானது. இதைத் தொடர்ந்து வயலில் டிராக்டர்களை நிறுத்தி இயக்கி

News image
Updated On :1 டிசம்பர் 2014, 1:58 pm

என்.​ அங்​கு​பாபு

பழனியருகே தனியார் நெல்வயலில் காட்டுயானைகள் கூட்டமாக அட்டகாசம் செய்ததில் நெற்கதிர் விளையும் நேரத்தில் முற்றிலும் சேதமானது. இதைத் தொடர்ந்து வயலில் டிராக்டர்களை நிறுத்தி இயக்கி யானைகளை விரட்டும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழனியை அடுத்த மேற்குமலைத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் மா, வாழை, கொய்யா தோப்புகளும், நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, சோளம் மற்றும் பிறதானியங்கள் பயிர் செய்யப்பட்டும் உள்ளது.  மலையடிவாரப் பகுதிகளில் கடந்த பல வருடங்களாக காட்டுயானைகளால் விளைநிலங்கள் சேதம், உயிர்சேதமும், மனிதர்களால் யானைகள் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது.  கடந்த இரு வருடங்களாக மழையில்லாததால் பலரும் விவசாயத்தை கைவிட்டிருந்த நிலையில் காட்டுயானைகள் நடமாட்டமும் யாராலும் கண்காணிக்கப்படாமல் இருந்தது.  இந்நிலையில் தற்போது பெய்த மழை காரணமாக விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனர்.  

இதைத் தொடர்ந்து காட்டுப்பகுதியில் இருந்த யானைகள் தற்போது உணவு தேவைக்காக விவசாய நிலங்களை நாடி வருகிறது. சனிக்கிழமை இரவு பொருந்தல் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்த யானைக்கூட்டம் மரங்களை சாய்த்து குருத்தை ஒடித்து சாப்பிட்டு விட்டு சென்றது. இதனால் வனத்துறையினரும், அதிகாரிகளும் அங்கு சென்று பட்டாசுகளை வெடித்து, சப்தத்தை எழுப்பியதால் யானைகள் இடம் பெயர்ந்தன. ஆனால் இடம் பெயர்ந்த யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு பாலசமுத்திரத்தை அடுத்த ரங்கசாமி பாதம் கோயில் அருகே உள்ள ராஜாங்கம் என்பவர் நெல்வயலில் புகுந்து இரவு முழுக்க நெல்பயிரை சாப்பிட்டும், வயலில் நடந்தும் சென்றதால் பெரும் சேதம் ஏற்பட்டது. காலையில் வயலுக்கு சென்று பார்த்த போது யானைக்கூட்டம் நடந்ததால் வயலில் வரப்புகள் உடைந்தும், வயல்முழுக்க யானை சாணமும் இருந்தது. 

இதுகுறித்து ராஜாங்கம் கூறுகையில், இரண்டு வருடம் விவசாயம் இல்லாமல் இருந்தது.  சமீபத்தில் பெய்த மழையால் விவசாயத்தை துவங்கினோம். சுமார் நான்கரை ஏக்கரில் இரண்டரை மாதமாக பாடுபட்டதில் நெல்பயிர்கள் நன்கு விளைந்திருந்தது. இன்னும் பத்து, பதினைந்து நாட்களில் கதிர் பிடிக்கவுள்ள நிலையில் யானைக்கூட்டம் புகுந்து சேதம் செய்ததால் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அரசு இழப்பீடு வழங்கினால் மட்டுமே தாங்க முடியும்.  மேலும், இந்த யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். 

இந்நிலையில் யானைகளை விரட்ட வனத்துறையினரும், விவசாயிகளும் யானை வரும் பகுதிகளில் பட்டாசுகளை வெடித்தும், டயர்களில் தீயை பற்ற வைத்தும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.  வித்தியமாசமான முயற்சியாக டிராக்டர்களை ஆங்காங்கு நிறுத்தி வைத்து அவற்றின் சைலன்சர்களை கழற்றி விட்டு இயக்கும் போது ஏற்படும் பயங்கர சப்தத்தை வைத்தும் யானைகளை விரட்டும் பணி மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.