/

பழனி மலைக்கோயிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்துக்கு பில்லிங் முறை அறிமுகம்

பழனி மலைக்கோயிலிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2014, 3:08 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி மலைக்கோயிலிலில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் பில்லிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

     பழனியின் முக்கிய திருக்கோயில் பிரசாதமாக வழங்கப்படுவதும், விற்பனை செய்யப்படுவதும் பஞ்சாமிர்தம் ஆகும்.  இந்த பஞ்சாமிர்த விற்பனை பழனிக்கோயிலின் வருவாயில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.  கடந்த பசலியில் பஞ்சாமிர்தம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  பழனிக்கோயிலில் பஞ்சாமிர்தம் வின்ச் நிலையம் அருகே தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் மையத்தில் தயாரிக்கப்பட்டு மலைக்கோயில், அடிவாரம், வின்ச் நிலையம், ரோப்கார் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  பிளாஸ்டிக் டப்பா, சீல்டு டப்பா மற்றும் கிப்ட் பேக் என மூன்று வகையான பேக்கிங்குகளில் பஞ்சாமிர்தம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ள நிலையில் பஞ்சாமிர்தம் விற்பனை சூடுபிடித்துள்ளது.  பக்தர்களுக்கு மலைக்கோயிலில் பஞ்சாமிர்த இருப்பு, தினமும் செய்யப்படும் விற்பனை குறித்த விபரங்கள் தினமும் மாலை பணியாளர்களால் பஞ்சாமிர்த நிலையத்துக்கு எழுத்து மூலமாக வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் தடையின்றி கிடைக்கும் வகையிலும், தினமும் இருக்கும் இருப்பு விபரத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் வெள்ளிக்கிழமை முதல் பஞ்சாமிர்தம் பில்லிங் முறையில் விற்பனை செய்ய திருக்கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  இதுகுறித்து பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) இராஜமாணிக்கம் தெரிவித்ததாவது,

பழனிக்கோயிலில் பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ள நிலையிலும், தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிக அளவு வரும் நிலையிலும் பஞ்சாமிர்தம் தினமும் போதிய அளவு இருப்பு இருக்கும் வகையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் வேண்டும் அளவு பஞ்சாமிர்தத்தை திருக்கோயில் வழங்கி வருகிறது.  இருப்பு. விற்பனை ஆகியவற்றை எளிதாக கணக்கிடவும், பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கவும் தற்போது இ.பில்லிங் முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம். 

இதன்படி மலைக்கோயிலில் பக்தர்கள் வெளியே வரும் வழி, அன்னதான கூடம் அருகே உள்ள இடம், ரெட்டை வினாயகர் கோயில் படிவழிப்பாதை மேலே உள்ள இடம் என நான்கு பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.  இந்த நான்கு கடைகளில் எதில் பில்லை வாங்கினாலும் மலைக்கோயிலில் உள்ள எந்த கடையிலும் பஞ்சாமிர்தத்தை வாங்கிக் கொள்ளலாம்.  மலைக்கோயிலில் வாங்கும் பஞ்சாமிர்த பில்லை கீழே கொண்டு போனால் கடைகளில் செல்லுபடியாகாது.   இதனால் மலைக்கோயிலில் பஞ்சாமிர்த விற்பனை சரியாக கணக்கிட ஏதுவாகிறது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.