/

மிடாப்பாடியில் ஆத்மலிங்க சனீஸ்வர பகவான் சன்னதி கும்பாபிஷேகம், சனிப்பெயர்ச்சி விழா

பழனி அருகே மிடாப்பாடி அருள்மிகு சக்திபுரி இடைச்சீஸ்வரி அம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆத்மலிங்க சனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள்

News image
Updated On :16 டிசம்பர் 2014, 1:11 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே மிடாப்பாடி அருள்மிகு சக்திபுரி இடைச்சீஸ்வரி அம்மன் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு ஆத்மலிங்க சனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது.

பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சனிப்பெயர்ச்சி வெகு சிறப்பாக வழிபட்டப்பட்டது.  பழனியை அடுத்த மிடாப்பாடி சக்திபுரி கோயில் வளாகத்தில் உள்ள ஆத்மலிங்க சனீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் மற்றும் பெயர்ச்சியை முன்னிட்டு அதிகாலை முதலே ரோமரிஷி சித்தாகமப்படி யாகம் நடைபெற்றது.  யாகபூஜையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தீர்த்த கலசங்களை கொண்டு வந்தும், மலர்களை கொண்டும் வழிபாடு நடத்தினர். யாககுண்டத்தில் ஏராளமான மூலிகைப் பொருட்கள், பழவகைகள், தானியங்கள், பட்டாடைகள் மற்றும் தங்கம் உள்ளிட்டவை இடப்பட்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டது.  யாகசாலை பூஜையை யோகீஸ்வரர் ஶ்ரீசக்திகணேஷ் சங்கர் சுவாமிகள் செய்தார்.

தொடர்ந்து மேளதாளம் முழங்க கலசங்கள் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  தொடர்ந்து நூற்றுக்கணக்கான லிட்டர் பால், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட பலவகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. மதியம் சிறப்பு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. பழனி அருகே அ.கலையமுத்தூர் அருள்மிகு கல்யாணி அம்மன் சமேதர் கைலாசநாதர் சன்னதியில் உள்ள சனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டது.  இருகோயில்களின் சனிப்பெயர்ச்சி பூஜைகளின் போது அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.  நிகழ்ச்சியில் சோமனூர் எஸ்கேவிஎம் குழும நிறுவனர் முருகசாமி, ஆடிட்டர் சரோஜினி, அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், அதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன், நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகரன், லட்சுமணன், தங்கராமு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பழனி அருள்மிகு திருஆவினன்குடி கோயிலில் உள்ள தனி சனீஸ்வரர் சன்னதியில் உள்ள சனீஸ்வரருக்கு மதியம் முதலே பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம் சார்த்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.  நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.  கோதைமங்கலம் பிரசிடெண்ட் தோட்டத்தில் உள்ள சனிபகவான் தனி சன்னதியில் சனீஸ்வரருக்கு அதிகாலை முதல் இரவு வரை வாக்கிய பஞ்சாங்கப்படி விசேஷ பூஜைகள், ஏகதின லட்சார்ச்சனை, ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஆயுஸ்ய ஹோமம் ஆகியன நடைபெற்றது.  விழா ஏற்பாடுகளை வாழிய உலக நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். தவிர, சித்தாநகர் அருள்மிகு கைலாசநாதர் கோயில், அருள்மிகு பட்டத்து வினாயகர் கோயில், அருள்மிகு பெரியாவுடையார் கோயில், அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயில்களிலும் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.