புதிய வியூகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ்
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் செய்யாத வகையில், வன்னியர் சமுதாய மகளிரை குறி வைத்து புதிய


நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ச.ராமதாஸ் எந்த அரசியல் கட்சி தலைவர்களும் செய்யாத வகையில், வன்னியர் சமுதாய மகளிரை குறி வைத்து புதிய வியூகத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சி சற்று வித்தியாசமாக இத்தேர்தலில் முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து முன்கூட்டியே பிரசாரத்தையும், தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி வருகிறது. இத்தேர்தலில் மதுவை ஒழிப்போம். ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவோம். கல்வி, மருத்துவம், விவசாயம் ஆகியவை மட்டும்தான் இலவசமாக வழங்குவோம் என்ற கோஷத்தை டாக்டர் ச.ராமதாஸ் கையில் எடுத்து வன்னியர் சமுதாய மகளிரிடம் வாக்குகளை பெற முயற்சி மேற்கொண்டுள்ளார். மேலும் வித்தியாசமான பிரசாரத்தையும் தற்போது தொடங்கியுள்ளார்.
ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வன்னியர் சமுதாய மகளிரை அழைத்து, மகளிர் மாநாடு நடத்துகிறார். அம்மாநாட்டில் அரசியல்வாதி பேசுவது போன்று இல்லாமல், சாதாரணமாக திண்ணை பேச்சு போன்று பேசி, தங்களது குடும்ப நிலை என்ன? மதுவினால் என்ன தீமை நடந்தது என கேட்டறிகிறார். இதனை வன்னியர் சமுதாய பெண்கள் மிகவும் உன்னிப்பாக கேட்டு வருகின்றனர். மேலும் மதுவினால் பாதிக்கப்பட்ட பெண்களை அழைத்து மைக்கில் பாதிப்புகள் குறித்து பேச சொல்கிறார். மதுவினால்தான் நமது சமுதாயம் சீரழிந்து வருகிறது. நான் சொல்வதை ஒருமுறை கேட்டு அனைவரும் வாக்களிங்கள் பாமக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை மூடிவிடுவோம் என கூறி சற்று வித்தியாசமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சேத்தியாதோப்பில் நடந்த மகளிர் மாநாட்டில் ராமதாஸ் பேசுகையில் 'மதுவினால் 30 வயது பெண்கள் கூட தனது கணவனை இழந்து விதவையாக தவிக்கிறார்கள். மதுக்கடையை ஒழித்து விட்டால் நாம் அனைவரும் முன்னேறி விடலாம். எனவே மதுக்கடையை ஒழிக்க நீங்கள் பா.ம.க.வுக்கு ஓட்டு போட வேண்டும். நீங்கள் மட்டும் பா.ம.க.வுக்கு ஆதரவளிக்க முடிவு செய்து விட்டால் பா.ம.க. 15 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் 5 கோடி வாக்காளர்களில் 2 கோடியே 75 லட்சம் வாக்காளர்கள் பெண்கள் எனவே பா.ம.க.வுக்கு ஆதரவாக பெண்கள் முடிவு எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
நெய்வேலி இந்திராநகரில் நடந்த மகளிர் மாநாட்டில் அவர் பேசுகையில் உங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்றால் மாம்பழத்திற்கு வாக்களியுங்கள், குடிக்க வேண்டும் என்றால் மற்ற கட்சிகளுக்கும் வாக்களியுங்கள். பெண் நினைத்தால் எதையும் சாதித்துவிட முடியும். உலகத்தையே மாற்றக்கூடியது சக்தி பெண்களுக்கு உள்ளது. ஆவதும் பெண்ணாலே, ஆவப்போவதும் பெண்ணாலே என ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் இந்த புதிய வியூக பிரசாரம் வன்னியர் சமுதாய மகளிரிடையே எடுபட்டு வெற்றி பெறும் என பாமக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.ராமதாஸின் மகளிர் குறி வைத்து இந்த புதிய வியூக தேர்தல் பிரசாரம் வெற்றி பெறுமா? என்பது தேர்தலுக்கு பிறகுதான் தெரியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...