ரூ. 1.75 கோடியை திரும்ப தராததால் விரக்தி: நெல்லை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் மனைவி, மகளுடன் தற்கொலை
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே தொழில் ரீதியாக கொடுத்த கடன் ரூ. 1.75 கோடியை திருப்பி தராததால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனது, மனைவி,


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே தொழில் ரீதியாக கொடுத்த கடன் ரூ. 1.75 கோடியை திருப்பி தராததால் மனமுடைந்த ரியல் எஸ்டேட் அதிபர் தனது, மனைவி, 12 வயது மகளுடன் காரில் பெட்ரோல் ஊற்றி சிலிண்டரை வெடிக்கச் செய்து தீவைத்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது: பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் தனியார் பள்ளி எதிரில் உள்ள ரவிசங்கர் நகரில் வசித்து வருபவர் சுடலைமுத்து மகன் பரிபூரணம் என்ற கண்ணன் (39). இவரது தந்தை சுடலைமுத்து என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். பாளையங்கோட்டை, சாந்திநகர், ரகுமத்நகர் பகுதியில் வீடுகள் சுடலைமுத்துதான் கட்டி கொடுத்துள்ளார்.
தந்தை சுடலைமுத்துக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பரிபூரணம் என்ற கண்ணனும், இவரது சகோதரர்கள் நாகராஜன், செல்வம் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தனராம்.
இந்த நிலையில் பரிபூரணம் என்ற கண்ணன் சனிக்கிழமை பிற்பகலில் மனைவி மல்லிகா (33) வுடன் ஆம்னி வேனில் பாளையங்கோட்டையில் 6 ஆம் வகுப்பு படித்து வரும் மகள் சுமதி (12) யை பள்ளியில் இருந்து அழைத்து கொண்டு வந்தாராம்.
பின்னர் திருநெல்வேலி தூத்துக்குடி பிரதான சாலையில் இருந்து வலது புறமாக சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள சாந்தினிநகருக்கு சென்றார். அங்கு கண்ணன், வீட்டில் இருந்து கொண்டு வந்த காஸ் சிலிண்டரை திறந்தும், காரில் இருந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டனராம்.
அருகில் அரை கி.மீ தொலைவில் குடியிருப்பில் வசித்தவர்கள் கார் வெடித்த சப்தம் கேட்டு வந்த பார்த்தனர். அப்போது கார் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்புத்துறை உதவிக் கோட்ட அலுவலர் ரா. குமரேசன், பாளையங்கோட்டை நிலைய அலுவலர் ச. வெட்டு்ம்பெருமாள் மற்றும் தீயணைப்புபடையினர் சென்று தீயை அணைத்தனர்.
இதில் கார் முற்றிலும் எரிந்து காணப்பட்டது. காரில் இருந்த பரிபூரணம் என்ற கண்ணன், மல்லிகா, சுமதி ஆகியோர் எலும்புக்கூடாக காரில் பின் இருக்கையில் இருந்தனர். மாநகர காவல் உதவி ஆணையர் க.ச. மாதவன், பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் பெ. கிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்களது உறவினர்கள் காரில் எலும்பு கூடாக இருந்த அவர்களை பார்த்து கதறி அழுதனர். போலீஸார் மூவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தற்கொலை செய்து ஏன்?: தொழில் ரீதியாக பரிபூரணம் என்ற கண்ணன், ஏரல், மங்களாக்குறிச்சியை சேர்ந்த தனது நண்பர்களுக்கு ரூ. 1.75 கோடி பணம் கொடுத்திருந்தாராம். கொடுத்த பணத்தை இருவரும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மனமுடைந்து காணப்பட்ட கண்ணன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடிதம், ஆவணங்கள் சிக்கியது: இதனிடையே பரிபூரணம் என்ற கண்ணன், தனது கைப்பட எழுதிய கடிதத்தில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தேன். உடல்நலம் பாதிப்பு காரணமாக தொடர்ந்து தொழில் செய்ய முடியாததால், ஏரல் சிவகளை கிராமத்தை சேர்ந்த உறவினருடன் சேர்ந்து தொழில் செய்தேன். அவர் அறிமுகம் செய்த வைத்து இருவருக்கு சீட்டு எடுத்து ரூ. 1.70 கோடியும் ரொக்கப்பணம் ரூ. 5 லட்சமும் சேர்த்து ரூ. 1.75 கோடி கடன் கொடுத்தேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொடுத்த பணத்திற்கு வட்டியும் தரவில்லை. அசல் தொகையையும் திரும்பத் தரவில்லை. என்னை ஏமாற்றி விட்டார்கள். ஆகையால் அவமானம் தாங்காமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாகவும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாராம். பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...