மகா சிவராத்திரி விழா: ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் லட்ச தீபம் ஏற்றி வழிபாடு
மகா சிவராத்திரி விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலையில்


மகா சிவராத்திரி விழாவையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலையில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
திருமால், பிரம்மனுக்கிடையே யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டது. இவ்விருவரும் போரிட, பேரழிவுகள் ஏற்பட்டு, உலகில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் துன்பப்பட்டனவாம். இதையடுத்து இருவரும் சிவனிடம் முறையிட, நான் என்ற அகந்தை அடங்கினாலன்றி எவ்வளவு சிறப்புடையவர்களாக இருப்பினும் சிவ பரம்பொருளைக் காண முடியாது என்ற உண்மையை திருமால், பிரம்மன் உள்ளிட்ட உலக மக்களுக்கு உணர்த்த சிவபெருமான் விரும்பினார்.
இதையடுத்து, மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று அடி முடி காணமுடியாத ஜோதிப் பிழம்பாக ஸ்ரீசிவபெருமான் காட்சியளித்தார். இதன்பிறகே, திருமாலும், பிரம்மனும் தங்களது அகந்தையை நீக்கி சிவபெருமானை வணங்கினர் என்பது வரலாறு.
மகா சிவராத்திரி:
சிவபெருமான் அடி முடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த தினமே மகா சிவராத்திரி திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி உருவானதாகக் கூறப்படும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் இவ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை (பிப்ரவரி 27) அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.
லட்சார்ச்சனை:
தொடர்ந்து, அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மூலவர் சன்னதியில் ஏராளமான மலர்களைக் கொண்டு லட்சார்ச்சனை நடைபெற்றது. மேலும், ராஜகோபுரத்தில் இருந்து கோயில் மூன்றாம் பிரகாரம் வரையில் உப்பு, மலர்கள், பல்வேறு வண்ணங்களைக் கொண்டு சிவனின் உருவங்கள், சிவனின் லீலைகள் வரையப்பட்டிருந்தன. இதை, ஏராளமான பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கினர்.
லட்ச தீபம்:
மாலை 6 மணிக்கு கோயில் பிரம்ம தீர்த்தக் குளம் உள்ளிட்ட கோயில் வளாகம் முழுவதும் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். திரும்பி திசையெல்லாம் ஏற்றப்பட்டிருந்த லட்ச தீபங்கள் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோயில் முழுவதும் லட்ச தீபங்களால் ஜொலித்தது.
நான்கு கால பூஜைகள்:
மகா சிவராத்திரியையொட்டி, வியாழக்கிழமை இரவு 8.30, இரவு 11, அதிகாலை 3, அதிகாலை 4 ஆகிய நேரங்களில் முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. நள்ளிரவு 12 மணிக்கு கோயில் கருவறையின் மேற்குத் திசையில் உள்ள ஸ்ரீலிங்கோத்பவ மூர்த்திக்கு தாழம்பூவைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கலை நிகழ்ச்சிகள்:
கோயில் கலையரங்கில் மாலை 6 மணிக்கு தேவாரப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி, இரவு 7.05 முதல் 11 மணி வரை பல்வேறு நாட்டிய குழுக்களின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள், இரவு 11 முதல் அதிகாலை 2 மணி வரை சென்னை சாக்சபோன் புகழ் சிவநாதன், ஆர்.குருவின் சத்யபாமா குழுவினரின் சாக்சபோன் மற்றும் பக்திப் பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கிரிவலம்:
வியாழக்கிழமை அதிகாலை முதல் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டமும், கிரிவலம் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தொடர்ந்து, விடிய விடிய ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.
அமர்வு தரிசனம் ரத்து:
மகா சிவராத்திரி விழாவுக்கு வந்த பல லட்சம் பக்தர்களின் தரிசனத்துக்கான சிறப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையரும் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையருமான ந.திருமகள் மற்றும் அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர். கோயிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...