பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை யார் நிர்வகிப்பது குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஆதரவும், எதிர்ப்பும்

ஸ்ரீநடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது. பழைய நடைமுறைப்படி தீட்சிதர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பு பக்தர்கள் மத்தியில் பெரும்

News image
Updated On :6 ஜனவரி 2014, 12:25 pm

ஜி.சுந்தரராஜன்

ஸ்ரீநடராஜர் கோயிலை தமிழகஅரசு நிர்வகிக்க முடியாது. பழைய நடைமுறைப்படி தீட்சிதர்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அளித்த தீர்ப்பு பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயத்தில் பொதுமக்களிடையே எதிர்ப்பும் பெற்றுள்ளது.

சைவ சமயாச்சாரியர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரால் போற்றப் பெற்றதும், ஐம்பூதங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்குவது சிதம்பரம் ஶ்ரீநடராஜர் கோயில். தரிசித்தால் முக்தியளிக்கும் ஸ்தலமாக விளங்குகிறது சிதம்பரம்.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை பல நூற்றாண்டுகளாக தில்லைவாழ் அந்தணர்கள் என்றழைக்கப்படும் பொதுதீட்சிதர்கள் வைதீக முறைப்படி 6 கால பூஜையுடன் நிர்வகித்து வருகின்றனர். 6 கால பூஜைகளையும், திருவிழா பூஜைகளை தீட்சிதர்கள் சிறப்பாக நடத்துகிறார்கள் என்பதில் பொதுமக்களிடமும், பக்தர்களிடம் எவ்வித ஐயமும் இல்லை. ஆனால் சமீபகாலமாக தீட்சிதர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் குறைந்தே காணப்படுகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் சரியான அனுகுமுறை இல்லாததும், தரிசனத்தை காலதாமதமாக நடத்துவதும், கோயிலுக்கு வரும் பக்தர்ளுக்கு எவ்வித வசதி இல்லாததாலும் தற்போதையை சூழலில் மக்கள் மத்தியில் அவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தீட்சிதர்களுக்கு ஆதரவாக வந்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பினால் தினமும் கோயிலுக்கு சென்று வரும் பக்தர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மத்தியிலும் வரவேற்பு பெறவில்லை என்பதே உண்மை.

இந்நிலையில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஸ்ரீநடராஜர் கோயிலை உயர்நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத்துறை கடந்த 2009-ம் ஆண்டு பிப்.2-ம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. பின்னர் பிப்ரவரி 5-ம் தேதி சித்சபை எதிரே முதன்முதலாக கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிபடியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டது.

நிர்வாக அலுவலர் நியமித்ததை எதிர்த்து பொதுதீட்சிதர்கள் புதுதில்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு விசாரணை முடிவுற்று திங்கள்கிழமை நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் விசாரித்து  தீர்ப்பு வழங்கினர். அதில், கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால் அதனை தமிழக அரசு நியமித்த செயல் அதிகாரி விசாரிக்கலாமே தவிர, கோயிலை நிர்வகிக்க முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தீட்சிதர்கள் உள்ளிட்டோரின் கருத்துகள் விபரம் வருமாறு:

எம்.காசிராஜதீட்சிதர் (பொதுதீட்சிதர்களின் செயலர்)- இத்தீர்ப்பு நடராஜர் கொடுத்த வெற்றி, ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு நாங்கள் உண்மையாக பூஜை செய்ததற்காக கொடுத்த பரிசாக இத்தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். மேலும் தீர்ப்பின் முழுவிபரம் வந்து சேரவில்லை. அதன் பின்னர் கோயில் நிர்வாகம் குறித்து முடிவெடுப்போம்.

மு.செங்குட்டுவன் (இந்து ஆலய பாதுகாப்புக்குழு)- உச்சநீதிமன்ற தீர்ப்பை நங்கள் வரவேற்கிறோம். தினமும் 6 கால பூஜைகளுடன் மிகச்சிறப்பாக தீட்சிதர்கள் கோயிலை தொன்று தொட்டு நிர்வகித்து வருகின்றனர். தீர்ப்பினை ஏற்று அறநிலையத்துறை உண்டியல் தொகையை எண்ணி தீட்சிதர்களிடம் ஒப்படைத்துவிட்டும், பிரசாத கடைகளை மூடிவிட்டு கோயிலை விட்டு வெளியேற வேண்டும்.

கி.வெங்கட்ராமன் (தமிழ்தேசப் பொதுவுடைமை கட்சி)- உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு இவ்வழக்கில் உரிய முறையில் கையாள அக்கறை காட்டவில்லை. மூத்த வழக்குரைஞர்கள் யாரையும் நியமித்து வாதாட முன்வரவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழகஅரசின் ஆணையை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளனர். கோயிலில் முறைகேடுகள் நடந்திருந்தால், அதுகுறித்து தமிழகஅரசு விசாரிக்கலாமே தவிர, நிர்வாக அலுவலரை நியமிக்க முடியாது என நீதிபதிகள் கூறியிருப்பது இந்த வழக்கின் அடிப்படையையே அணுகாத தீர்ப்பாக உள்ளது.

வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் தீட்சிதர்கள் தனி வகையறாவினர் (Denomination) அல்லர் என்பதையோ. இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்து பல கட்டடங்கள் விரிவாக்கப்பட்டது வரை அரசுகளின் பணியாக இருந்தனவே தவிர, இவற்றில் தீட்சிதர்களின் பங்கு எதுவும் இல்லை என்ற உண்மையை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இந்த உண்மையை முன் வைத்து தமிழகஅரசு வலுவாக வாதாடாமல் போனது இத்தீர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.  இத்தீர்ப்பை சட்டமுறையில் எதிர் கொள்ளும் வகையில் தமிழகஅரசு சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தனிச்சட்டம் இயற்றி சட்டப்பேரவையில் நிறைவேற்றுவதே ஒரே வழி.

வழக்குரைஞர் சி.ராஜூ (மனித உரிமை பாதுகாப்பு மையம்)- தமிழகஅரசு, சுப்பிரமணியசாமி, தீட்சிதர்கள் ஆகிய மூவரும் கள்ளக்கூட்டு வைத்து உச்சநீதிமன்றத்தில் அரசு சரியாக வழக்குரைஞரை நியமித்து வாதாடாததால் தீட்சிதர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகஅரசின் இந் நடைமுறையை வன்மையாக கண்டிக்கிறோம். வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தமிழகஅரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். தீண்டாமை, மொழி உரிமை ஆகியவற்றை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை திறக்க வேண்டும். அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவ வேண்டும். நடராஜர் கோயிலை மீண்டும் தமிழகஅரசு ஏற்று நடத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

கே.பாலகிருஷ்ணன் (சிதம்பரம் எம்எல்ஏ)-  ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, டிவிஷன் பெஞ்ச் ஆகியவை நடராஜர் கோயில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என தீர்ப்புகள் வழங்கியுள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் எந்த அடிப்படையில் தீட்சிதர்கள் நிர்வகிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது என தெரியவில்லை. மிகப்பெரிய கோயிலை தனியார் நிர்வகிப்பது எப்படி சாத்தியமாகும். கோயில் புணரமைப்பது, கும்பாபிஷேகம் நடத்துவது எப்படி செய்ய முடியும்.

அரசு நிர்வாக அலுவலர் நியமித்த பிறகு வைத்த உண்டியல்களில் ரூ.1 கோடிக்கு மேல் காணிக்கை தொகை கிடைத்துள்ளது. கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை யார் மேற்பார்வையில்லாமல் எப்படி தனியார் நிர்வகிக்க முடியும். மேலும் நடராஜர் கோயிலுக்குள் வைணவக் கோயிலான பெருமாள் கோயில் உள்ளது. தீட்சிதர்கள் நிர்வகித்தால், பெருமாள் கோயிலை யார் நிர்வகிப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழகஅரசு கட்டுப்பாட்டின் கீழ் கோயில் இருப்பதுதான் பொருத்தமாகும்.

எனவே தமிழகஅரசு மேல்முறையீடு செய்தோ அல்லது சட்டம் இயற்றியோ கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.