5 நாட்களில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் நகர் மன்ற கவுன்சிலர்கள் போராட்டத்தை விலக்கிகொண்டனர்.
கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வரும் 10-ம் தேதி நகர் மன்ற கூட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.கடலூர் நகர்மன்றத் தலைவராக இருப்பவர் சி.கே.சுப்பிரமணியன். இவருக்கும் அதே கட்சியைச் சேர்ந்த துணைத் தலைவர் சி.ஜெ.குமாருக்கும் தேர்தல் முடிந்த காலத்திலிருந்தே பிரச்னைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
மொத்தமுள்ள 45 கவுன்சிலர்களில் 32 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இதில் 30 பேர் துணைத் தலைவருக்கு ஆதரவாக உள்ளனர். நகர்மன்றம் மூலம் மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பணிகளை தலைவரின் உறவினர்கள்தான் செய்கின்றனர் என்று துணைத் தலைவரின் அணியில் உள்ளவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.மேலும் மாதம்தோறும் கூட்டம் நடத்தப்படாததால் அடிப்படைத் தேவைகளான குடிநீர், தெரு விளக்கு, சாலை மேம்பாடு, சாக்கடை கால்வாய் போன்ற பணிகளுக்கு மன்ற அனுமதி பெறமுடிவதில்லை. இதனால் மக்களை சந்திக்க அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் நகர்மன்ற தலைவர், ஆணையர் மற்றும் அதிகாரிகளை கண்டித்து அனைத்து கட்சி கவுன்சிலர்களும் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.இதனைத்தொடர்ந்து ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, கவுன்சிலர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வரும் 10-ஆம் தேதி நகர்மன்ற கூட்டத்தை நடத்த வேண்டும்.
கூட்டத்தில் முன் அனுமதி தீர்மானங்கள் இடம்பெறக்கூடாது என்றும், மேலும் நாய், பன்றிகளை பிடிப்பது, சாக்கடை கால்வாய்களை தூர்வாருவது, குடிநீர் குழாய் சீரமைப்பு, தெரு விளக்குகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை 5 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கவுன்சிலர்கள் நிபந்தனை விதித்தனர்.இந்த நிபந்தனைகளை நகர்மன்ற தலைவர் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு கவுன்சிலர்கள் உண்ணாவிரத போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.
பிச்சைப்பாத்திரம் ஏந்தி போராட்டம் நடத்திய கவுன்சிலர்:
15-வது வார்டு அதிமுக கவுன்சிலர், டி.பஞ்சாயுதபாணி, பிச்சைப்பாத்திரம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். நகராட்சி நிர்வாகம் தன்னுடைய வார்டுகளில் எந்த பணியையும் செய்யவில்லை. இதனால் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பிச்சை எடுக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதனை நகராட்சி நிர்வாகத்துக்கு உணர்த்தவே, பிச்சைப்பாத்திரம் ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றதாக பஞ்சாயுதபாணி தெரிவித்தார்.
கோரிக்கைகள் நிறைவேற்றவிட்டால் மீண்டும் போராட்டம்:
கவுன்சிலர்களின் கோரிக்கைகளை பொங்கல் பண்டிக்கைக்கு முன்பு நிறைவேற்றவிட்டால், பொங்கல் பண்டிகை தினம் முதல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும், மேலும் 10-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் முன் அனுமதி தீர்மானங்கள் இருந்தால் கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்றும் கவுன்சிலர் வி.கந்தன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.