பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.71 லட்சம் கையாடல்: மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை விசாரணை

News image
Updated On :15 ஜனவரி 2014, 11:35 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர்களின் ஊதியம், சேமநலநிதி உள்ளிட்டவை சுமார் ரூ.71 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் கடலூர் மாவட்ட குற்ற புலணாய்வுத்துறையினர் வழக்குப் பதிந்து இளநிலை உதவியாளர் ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகம் இயங்குகிறது. இந்நிலையில் சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலக ஆவணங்கள் அறை நவ.26-ம் தேதி மர்மமான முறையில் தீவிபத்தில் எரிந்து முற்றிலும் சேதமுற்றது. தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதமுற்றது தெரியவந்து வருவாய்த்துறை மற்றும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முதல் கட்டமாக ஆதிதிராவிட நலத்துறையில் மறைந்த ஆசிரியர்களின் பெயரில் ஊதியம் மற்றும் சேமநல நிதி பிடித்தம் செய்யப்பட்டு ரூ.4.70 லட்சம் முறைகேடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு கீரப்பாளையத்தைச் சேர்ந்த அலுவலக இளநிலை உதவியாளர் விமல் (34) என்பவர் கடலூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். 

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக ஆவண அறை தீவிபத்து குறித்தும், ஆசிரியர்கள் பணம் முறைகேடு செய்யப்பட்டது தொடர்பாக மாநில குற்ற புலணாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பினர் உதவிஆட்சியர் எம்.அரவிந்திடம் மனு அளித்து கோரிக்கை விடுத்தனர்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு), தனி வட்டாட்சியர் கே.ராஜவேலு ஆகியோர் சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கணக்குகளை தணிக்கை செய்தனர். தணிக்கையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் விமல், இறந்து போன ஆசிரியர்களின் ஊதியத்தொகை, பணியாற்றுவதாக பல ஆசிரியர்களின் பெயரில் ஊதியம் ஆகியவற்றை கணக்கில் வரவு வைத்து, தனது வங்கிக் கணக்கில் ரூ.71 லட்சம் தொகையை வரவு வைத்து கையாடல் செய்துள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் உத்தரவின் பேரில் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராக நவம்பர் மாதம் முதல் பொறுப்பு வகிக்கும் கே.ராஜவேலு கடலூர் மாவட்ட குற்ற புலணாய்வுத்துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றப் புலணாய்வுப்பிரிவு டிஎஸ்பி சேகர் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து பணம் கையாடல் செய்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் விமலை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். ரூ.71 லட்சம் கையாடல் செய்யப்பட்டதில் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலத்தில் உள்ள அதிகாரி ஒருவர் மற்றும் துணைக்கருவூலத்தில் உள்ள அலுவலர்கள் உள்ளிட்ட 14 பேருக்கு தொடர்பு உள்ளதாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே சிதம்பரம் நகராட்சியில் மக்கள் வரிப்பணத்தை வங்கி கணக்கில் பணம் செலுத்தாமல் ரூ.1 கோடி 30 லட்சம் கையாடல் செய்யப்பட்டு, நகராட்சி காசாளர் பாலு என்பவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆணையின் பேரில் சிபிடிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் நகராட்சியில் ரூ.1 கோடி 30 லட்சம் கையாடல் செய்யப்பட்டுள்ள நிலையில், சிதம்பரம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.71 லட்சம் கையாடல் செய்யப்பட்டது தெரியவந்ததால் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சிதம்பரம் துணைக் கருவூலத்தில் இதுபோன்று ரூ.2 கோடிக்கு மேல் ஆசிரியர்கள், அலுவலர்களின் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்தும் கடலூர் மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.