/

சிதம்பரத்தில் விவேகானந்தர் சைக்கிள் எழுச்சி பேரணிக்கு தடை: போலீஸார் வழக்குப் பதிவு

சிதம்பரத்தில் உதவிஆட்சியர் தொடங்கி வைத்த விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழா விழிப்புணர்வு ஆசிரியர்-மாணவர் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுத்தும், தடையை மீறியதாக நகர போலீஸார்

News image
Updated On :26 ஜனவரி 2014, 12:57 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் உதவிஆட்சியர் தொடங்கி வைத்த விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழா விழிப்புணர்வு ஆசிரியர்-மாணவர் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுத்தும், தடையை மீறியதாக நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஜன.26-ம் தேதி குடியரசுதின விழா அன்று சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்-மாணவர்கள் கொண்ட 10 குழுக்களாக 150 கிராமங்களுக்கு சைக்கிள் பேரணியாக நடத்துவதாக அறிவித்து போலீஸாரிடம் அனுமதி கேட்டனர். பாதுகாப்பு நலன் கருதி இந்த பேரணிக்கு டிஎஸ்பி ஆர்.ராஜாராம் அனுமதி மறுத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் போலீஸார் அனுமதி மறுத்ததை மீறி விவேகானந்தர் 150-வது பிறந்தநாள் விழா ஆசிரியர்-மாணவர் சைக்கிள் எழுச்சி பேரணி கீழவீதி-வடக்குவீதி சந்திப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது. பேரணியை உதவிஆட்சியர் மா.அரவிந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாளாளர் சி.ஆர்.லட்சுமிகாந்தன், பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் தில்லைசீனு, முதல்வர் ஜி.சக்தி, சிறப்பு பள்ளி முதல்வர் மீனாட்சி, பள்ளிக் கல்விக்குழு ஆலோசகர் டி.சந்திரசேகர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.  பேரணியில் விவகானந்தரின் உருவப்படங்கள் மற்றும் பொன்மொழிகள் அடங்கி பதாதைகளுடன் கிராமங்களுக்கு சென்று விவேகானந்தரின் கருத்துகள் மற்றும் பெருமைகளை துண்டு பிரசுரங்கள் வழங்கியும், வீடியோ காட்சி மற்றும் பாடல்கள் வாயிலாக எடுத்துரைத்தனர்.

போலீஸார் வழக்குப் பதிவு: தடையை மீறி பேரணி நடத்தியதாக நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் காமராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை மீது நகர போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூகஆர்வலர்கள் கண்டனம்: விவேகானந்தரின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் விழிப்புணர்வு பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்தது வேதனைக்குறியது என சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.