/

ரூ.20 கோடியில் புவனகிரி வெள்ளாற்றில் புதிய பாலம்: நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தகவல்

சிதம்பரம் அருகே புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே ரூ.20 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க வருகிற பிப்.15-ம் தேதிக்குள்ள திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசு அனுப்பப்படும் என தேசிய

News image
Updated On :27 ஜனவரி 2014, 10:42 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே ரூ.20 கோடி செலவில் புதிய பாலம் அமைக்க வருகிற பிப்.15-ம் தேதிக்குள்ள திட்டமதிப்பீடு செய்யப்பட்டு அரசு அனுப்பப்படும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே புவனகிரி வெள்ளாற்று பாலம் பழுதடைந்து தற்போது சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புவனகிரி பகுதி வர்த்தகர்சங்கம், ஊழல் எதிர்ப்பு இயக்கம் மற்றும் அனைத்து கட்சியினர் பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும், தரைப்பாலம் அமைத்து தர வேண்டும், புதிய பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வருகிற ஜன.28-ம் தேதி சாலைமறியல் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் வட்டாட்சியர் எம்.விஜயா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் ராஜேந்திரன், உதவிப் பொறியாளர்கள் சிவக்குமார், சுபா, புவனகிரி வர்த்தக சங்க செயலாளர் ரத்தினசுப்பிரமணியன், ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணன், சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் குணசேகரன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வருகிற மார்ச் 31-க்குள் பாலத்தில் 6 தூண்கள் சீரமைப்பு பணியை முடித்து 50 டன் எடையுள்ள வாகனங்கள் செல்ல போக்குவரத்திற்கு திறப்பது; தற்காலிகமாக 10 நாட்களில் தரைப்பாலம் அமைத்து கார் மற்றும் பள்ளி வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுப்பது; புதிய பாலம் ரூ.20 கோடி செலவில் கட்ட 2014-15ற்குள் ஒப்புதல் பெற்று கட்டுவது; பாலத்தின் மீது தொலைபேசி கேபிள்கள் இணைப்பு செல்ல அனுமதிப்பது இல்லை; விருத்தாசலம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் புவனகிரி நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும் என்றும், புவனகிரி-கடலூர், கடலூர்-புவனகிரி, புவனகிரி-சிதம்பரம் ஆகிய மார்க்கங்களில் டவுன்பஸ் இயக்க போக்குவரத்துக்கழகத்திற்கு பரிந்துரை செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.