ஆம்பூர் அருகே ரூ.60 லட்சம் மதிப்புள்ள மருந்து லோடுடன் லாரியை 5 பேர் கொண்ட கும்பல் சனிக்கிழமை நள்ளிரவு கடத்திச் சென்றது.
ஆற்காடு அருகே மேட்டுக்குடிசை கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி (41). இவர் தனக்கு சொந்தமான லாரியை வாடகைக்கு ஓட்டும் தொழில் செய்து வருகிறார். பெங்களூரை சேர்ந்த ஒரு மருந்து கம்பெனியின் கிடங்கு ஒசூரில் உள்ளது. அந்த கிடங்கிலிருந்து மருந்து, மாத்திரைகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். மருந்து, மாத்திரைகளின் மதிப்பு ரூ.60 இலட்சம் ஆகும்.
நள்ளிரவு ஆனதால் ஆம்பூரை அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தேசிய சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு கந்தசாமி லாரியிலேயே படுத்து உறங்கியுள்ளார். அப்போது திடீரென லாரியின் முன்பக்க கதவை யாரோ தட்டி அவரை எழுப்பியுள்ளனர். அவர் எழுந்து பார்த்தபோது சேலத்திற்கு எந்த சாலை வழியாக செல்ல வேண்டுமென ஒரு நபர் கேட்டுள்ளார். இவர் பதில் சொல்வதற்குள் அந்த நபருடன் சேர்த்து சுமார் 5 பேர் கொண்ட கும்பல் அவரை பலமாக தாக்கி அவருடைய இரு கைகளையும் பின்பக்கமாக வைத்து அட்டை பெட்டியை ஒட்டும் பிளாஸ்டிக் டேப்பால் சுற்றி ஒட்டியுள்ளனர். வாயை கையால் பொத்தியுள்ளனர். நள்ளிரவு 12.30 மணியானதால் அவ்வழியாக எவரும் செல்லாததால் கடத்தல்காரர்களுக்கு சாதகமாக இருந்துள்ளது.
அதனால் மருந்து லோடுடன் லாரியை கடத்தியுள்ளனர். மாதனூருக்கு ஒரு சில கிலோ மீட்டர் தொலைவில் சாலையோரம் கந்தசாமியை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்றுள்ளனர். சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு அவர் கை கட்டுகளை அவிழ்த்துக் கொண்டு அவ்வழியாக சென்ற ஒரு லாரியை பிடித்து மாதனூர் சென்றுள்ளார். அங்கிருந்து ஆம்பூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக வேலூர் மாவட்டம் முழுதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். தேசிய நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.காவேரிபாக்கம் பகுதியில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக கடத்தப்பட்ட லாரி சென்றதை பார்த்த போலீஸார் அதனை பிடிக்க விரட்டிச் சென்றனர். போலீஸாரின் ஜீப்பையும் இடித்துவிடுவது போல லாரியை கடத்திய நபர் ஓட்டியுள்ளார். இருந்த போதிலும் காவேரிபாக்கம் போலீஸார் விடாமல் விரட்டிச் சென்று லாரியை வழிமறித்து நிறுத்தி லாரியை ஓட்டிச் சென்ற நபரை பிடித்தனர். மற்ற நபர்கள் லாரியிலிருந்து குதித்து தப்பியோடி தலைமறைவானார்கள்.
மருந்து, மாத்திரை லோடுடன் லாரி ஆம்பூர் தாலுகா போலீஸில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல்காரர்களால் தாக்குதலுக்கு உள்ளான லாரியின் டிரைவர் கந்தசாமி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து ஆம்பூர் டிஎஸ்பி கணேசன் கூறியதாவது, போலீஸார் லாரியை விடாது விரட்டிச் சென்று வழிமறித்து மடக்கி பிடித்தனர். லாரியை ஓட்டிச் சென்ற ஒரேயொரு நபர் மட்டும் பிடிபட்டுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாக உள்ளனர்.லாரி கடத்தலில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பழனி, சரவணன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாரிடமிருந்து தப்பியிருந்தால் உடனடியாக லாரியில் இருந்த மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்திருப்பார்கள். லாரியை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்திருப்பார்கள். போலீஸாரின் விரைவான முயற்சியால் கடத்தப்பட்ட லாரி மற்றும் மருந்து, மாத்திரைகள் உடனடியாக மீட்கப்பட்டது. கடத்தல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட மற்ற நபர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.