காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 21-ம் தேதி சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கம், தமிழக உழவர் முன்னணி, உலகத் தமிழர் பேரமைப்பு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழக இளைஞர் முன்னணி, முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம், அக்னிச் சிறகுகள் சேவை அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அங்கம் வகிக்கும் காவிரி உரிமை மீட்புக் குழு ஆலோசனைக் கூட்டம் சிதம்பரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி மாவட்டத் தலைவர் அ.கோ.சிவராமன் தலைமை வகித்தார். காவிரி உரிமை மீட்புக் குழு மையக்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் மா.கோ. தேவராசன், பி.விநாயகமூர்த்தி, கோ.வி.தில்லைநாயகம், கு.சிவப்பிரகாசம், வை.இரா.பாலசுப்ரமணியன், சுந்தரவிநாயகம், தங்க.கென்னடி, அ.மதிவாணன், கோ.வெங்கடாஜலம், கோ.நாராயணசாமி, வி.ராஜேந்திரன், ராஜா, மு.முருகவேள், பி.லச்சுமிகாந்தன், மு.சம்பந்தம், தே.குணா, அ.சிவா, கு.கலியமூர்த்தி, எஸ்.பிரபாகரன், மதியழகன், கு.ஆனந்ததாண்டவம், ஆ.குபேரன், வே.சுப்பிரமணியசிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொறியாளர் என்.ஜெயபாலன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற்றத் தர மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் வரும் ஜூலை 21-ம் தேதி சிதம்பரம் வடக்குவீதி தலைமை அஞ்சலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும், முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், கீரப்பாளையம், குமராட்சி உள்ளிட்ட பகுதிகளில் விரிவான பரப்புரை மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.