விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தை பேரத்தில் ஈடுபட்ட 3 பாதுகாவலர்கள் நீக்கம்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு விலைபேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மூவர் பணி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் எல்.டி. துளசிராம்

News image
Updated On :30 ஜூன் 2014, 10:01 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 3 மாத குழந்தைக்கு விலைபேசியதாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மூவர் பணி நீக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் எல்.டி. துளசிராம் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஆலங்குளம் உடையாம்புளி இசக்கியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் இசக்கி மகன் சுடலைமணி (27). தனியார் ஆலையில் வேலை செய்து வருகிறார். சுடலைமணி சில தினங்களுக்கு முன் வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட தனது மகன் இசக்கிராஜை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

மகன் இசக்கிராஜூடன், சுடலைமணி, தாய் ராமலட்சுமி, 3 மாத ஆண் குழந்தையுடன் மருத்துவமனையில் தங்கியிருந்தனர்.இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு வந்த வசதி படைத்த ஒருவர், தனக்கு குழந்தை இல்லை. எனவே வளர்ப்பதற்கு ஒரு குழந்தை வேண்டும் என மருத்துவமனையில் பணியில் இருந்த தனியார் நிறுவன பாதுகாவலர்கள் மூவரை சந்தித்து தெரிவித்தாராம். குழந்தை கிடைத்தால் பணம் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு சம்மதித்த பாதுகாவலர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுடலைமணியை சந்தித்து அவரது 3 மாத ஆண் குழந்தையை விலைக்கு தருமாறு கேட்டு வற்புறுத்தினராம். சுடலைமணிக்கு மறுத்ததாக கூறப்படுகிறது. அப்போது சுடலைமணிக்கும், பாதுகாவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த மருத்துவமனையில் இருந்த சுடலைமணியின் உறவினர்கள், பொதுமக்கள் பாதுகாவலர்களின் நடவடிக்கையை கண்டித்தனர்.

அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவலர்கள் குழந்தையை பேரம் பேசி விற்க முயன்ற சம்பவத்தை அறிந்த நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது. இதனிடையே குழந்தையை பேரம் பேசி விற்க முயன்ற காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திங்கள்கிழமை அரசு மருத்துவமனை டீன் எல்.டி. துளசிராம் கூறியதாவது: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுடலைமணியின் 3 மாத ஆண் குழந்தையை பேரம் பேசி விற்கும் முயற்சியில் ஈடுபட்ட பாதுகாவலர்கள் ஆறுமுகம், பாலன், ராஜசேகர் என்ற மதன் ஆகிய மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் பணியில் இருக்கும் தனியார் பாதுகாவலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதுகாவலர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.