தொழிலக பாதுகாப்பு படைக்கு கடிவாளம் போடுமா என்எல்சி நிர்வாகம்

நெய்வேலி என்எல்சி நிறுவனம் 3 இடங்களில் சுரங்கம் ஏற்படுத்தி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இங்கு உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் இப்போது 2,490
Updated on
2 min read

மத்திய தொழிலக பாதுகாப்பு படை அத்துமீறல்களால், தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதோடு, என்எல்சி நிறுவனத்துக்கும் இழப்பு ஏற்படுகிறது.

நெய்வேலி என்எல்சி நிறுவனம் 3 இடங்களில் சுரங்கம் ஏற்படுத்தி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மேலும் இங்கு உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் இப்போது 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த 1956 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், ஒரு குறுநில மன்னர்போல், தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே நிர்வகித்து வருகிறது.

சுமார் 30,000 பேர் பணியாற்றும் இந்த நிறுவனத்தில், கடந்த 1992 ஆம் ஆண்டு வரை பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படவில்லை. 1992-ஆம் ஆண்டில் என்எல்சி பாதுகாப்புக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை இங்கு பணியமர்த்தப்பட்ட பிறகு தொழிலாளர்களுக்கும், இப்படை வீரர்களுக்கும் இடையேயான மோதல்கள் வாடிக்கையாகிவிட்டது.

இங்கு பணியாற்றும் தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், ஏதோ நாட்டின் எல்லையை பாதுகாக்கும் பொறுப்பை தமக்கு அளித்துள்ளதாக கருதி, அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் நிறுவனத்தின் அருகில் உள்ள மக்களிடம் அடாவடித்தனமாக நடந்துகொள்கின்றனர்.இதனால் அடிக்கடி அங்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. கடந்த 1992, 1997 ஆம் ஆண்டுகளில் வேலை முடிந்து வெளியில் வந்த தொழிலாளர்களிடம் அவமரியாதையாக பேசி தாக்கியதாக, தொழிலாளர்களுக்கும், தொழிலக பாதுகாப்பு படை வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது. அப்போதும் தொழிலக பாதுகாப்பு படை மற்றும் தமிழக போலீஸார் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியதால், தொழிலாளர்கள் பலர் படுகாயமடைந்தனர்.

தொழில் பாதுகாப்பு படையினரின் இதுபோன்ற அடாவடி செயல்களை கட்டுப்படுத்த என்எல்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால்தான்,  இப்போது தொழிலாளியை சுட்டுக்கொல்லும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது. தொழிலகத்தில் திருட்டை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ல் நியமிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு படை, இப்போது தொழிலாளர்களை வேட்டையாடும் வேட்டைக்கும்பலாக மாறியுள்ளது என்கின்றனர் தொழிற்சங்க நிர்வாகிகள்.

தொழிலக பாதுகாப்பு படையின் அராஜகத்தை கட்டுப்படுத்த, என்எல்சி நிர்வாகம், இந்த படை தங்களுக்கு தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுத வேண்டும் எனவும், அப்போது உள்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்போது, வீரர்களின் அடாவடி செயல்களை விளக்க வேண்டும்.அதன்மூலம் இந்த படை வீரர்களின் அதிகார வரம்பு, செயல்பாடுகள் குறித்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு வகுக்கும். அதுவரை என்எல்சி நிர்வாகம் உள்துறை அமைச்சகத்துக்கு எத்தனை கடிதம் எழுதினாலும், எந்த பலனும் ஏற்படப்போவதில்லை என்கின்றனர் தொழிலாளர்கள்.

 2,500 வீரர்களை கொண்ட மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் அடாவடி செயல்கள், நிறுவனத்தில் பணியாற்றும் 30,000 ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தொழிலக பாதுகாப்பு படை வீரர்களின் அத்துமீறல்களால் அருகில் உள்ள கிராம மக்களும், பெண்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதனால் அவர்களுக்கு எதிரான போராட்டம் என்றால் தொழிலாளர்களோடு கிராம மக்களும் இணைந்துகொள்கின்றனர்.  இதனால் பிரச்னை பெரிதாகி சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தி விடுகிறது.

மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அத்துமீறல்களால் கடந்த 32 ஆண்டுகளில் 8 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்துள்ளது. இந்த போராட்டம் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தால், ஏறத்தாழ ரூ.5 கோடி அளவுக்கு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.நிறுவனத்தின் மிக முக்கியமான வளமாக கருதப்படும் தொழிலாளர்களை, எதிரி நாட்டு படை வீரர் போல் நினைக்கும், தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், இனிமேலும் அதே மனநிலையில் இங்கு பணியை தொடர்ந்தால், மேலும் பல பிரச்னைகள் உருவாககூடும்.

இதனால் தொழிலக பாதுகாப்பு படையை அங்கிருந்து வெளியேற்றவோ அல்லது அவர்களுக்கு பணி வரன்முறைகளை உருவாக்கவோ என்எல்சி நிர்வாகம் உரிய நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பது என்எல்சி தொழிலாளர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com