வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

குடிநீர் தேவைக்காக பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் 300 கனஅடி தண்ணீர் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை தீர்க்கும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 300 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2014, 10:47 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுபாட்டை தீர்க்கும் வகையில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 300 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

தாமிரவருணி பாசனத்தில் வடகிழக்கு பருவமழை 12.6 சதவிகிதம் குறைவாக பெய்த காரணத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய பிரதான அணைகளின் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.எனினும் அவ்வப்போது பெய்த மழையால் பிசான பருவ சாகுபடிக்கு அணைகளில் இருந்து முழுமையாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் ஏழு கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனத்தில் 2586 ஏக்கரும் பாசனம் செய்யப்பட்டது. மேலும் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி மற்றும் அடவிநயினார் உள்ளிட்ட 4 அணைகள் மூலம் 32,000 ஏக்கர் நிலங்களும் பாசனம் செய்யப்பட்டது.

பிசான பருவ சாகுபடி அறுவடை தொடங்கிய காரணத்தாலும், மார்ச் மாதம் முதல் வாரத்தில் இம்மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததாலும் அணைகள் மூடப்பட்டன. நிகழ் வடகிழக்கு பருவத்தில் மழை குறைந்ததால் பிரதான அணைகளின் நீர்மட்டமும் குறைந்து காணப்பட்டது.இதனிடையே அணைகளில் இருந்து தண்ணீர் திறக்காததால் தாமிரவருணி ஆற்றில் நீர்வரத்து குறைந்து குடிநீர் திட்டங்களுக்கு தேவையான நீர் ஆதாரம் இல்லாமல் இம்மாவட்டத்தில் பரவலாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 300 கனஅடி தண்ணீர் தாமிரவருணி ஆற்றில் திறந்து விடப்பட்டு்ள்ளது.

புதன்கிழமை அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 50.00 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 63.42 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 73.13 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 36.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும் இருந்தது.பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 130.11 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 30 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 9.80 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 10 கனஅடியும் நீர்வரத்து இருந்தது. பாபநாசம் அணையில் இருந்து 204.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் 100 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுபாடு:

கடனாநதி அணையில் இருந்து 15 கனஅடி மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குறைந்த அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால், கருணை ஆற்றில்சகதி கலந்து கிடைக்கும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் மன்னார்கோவில், காக்கநல்லூர், வாகைகுளம், பிரம்மதேசம் ஊராட்சிப் பகுதியில் குடிநீர் தட்டுபாடு எழுந்துளளது. தாமிரவருணி குடிநீர் திட்டம் மூலம் மேற்கண்ட ஊராட்சிகளில் ஒரு சில பகுதிகளுக்கு மட்டும்  குடிநீர் விநியோகம் செய்யலாம். பிற பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத நிலை உளளது. ஒவ்வொரு முறையும் கோடை காலங்களில் குடிநீர் தட்டுபாடு காரணமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார் மன்னார்கோவில் ஊராட்சித் தலைவர் பி. சண்முகவேல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.