/

சென்னை வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து பழனியில் பலத்த பாதுகாப்பு

பழனியில் சென்னை ரயில்நிலைய வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து ரயில்நிலையம், மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

News image
Updated On :2 மே 2014, 2:13 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் சென்னை ரயில்நிலைய வெடிகுண்டு வெடிப்பைத் தொடர்ந்து ரயில்நிலையம், மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை வெடிகுண்டு வெடித்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க முக்கிய நகரங்கள், கோயில் ஸ்தலங்களுக்கு பாதுகாப்புப் பணியை அரசு முடுக்கி விட்டுள்ளது.  தமிழகத்தின் முக்கிய கோயில் நகரான பழனியில் வியாழக்கிழமை காலை முதலே ரயில்நிலையம், பேருந்து நிலையம் மற்றும் மலைக்கோயிலில் கூடுதல் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 பழனி ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை சார்பு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான ரயில்வே போலீஸார் ரயிலில் இருந்து வரும் பயணிகள், ரயிலில் ஏறும் பயணிகள் என அனைவரும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.  பழனியில் இருந்து சென்னை, திண்டுக்கல் மதுரை, திருச்செந்தூர் செல்லும் ரயில்களும், அதே போல எதிர்மார்க்கத்தில் இருந்து வரும் ரயில்களிலும் பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

மேலும், ரயில்களில் துப்பாக்கி ஏந்திய இரு போலீஸாரும் பாதுகாப்புக்காக சென்றனர்.  பழனி பேருந்து நிலையத்திலும், மலைக்கோயிலிலும் டிஎஸ்பி., சண்முகசுந்தரம் தலைமையில் போலீஸார் மூலம் கூடுதல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.  மலைக்கோயிலில் ரோப்கார், வின்ச் நிலையங்களில் பக்தர்களின் பைகள் ஹேண்ட் மெட்டல் டிடெக்டரில் ஆய்வு செய்யப்பட்டனர். 

படிவழிப்பாதை உள்ளிட்ட பல இடங்களிலும் டோர்பிரேம் டிடெக்டர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  மலைக்கோயிலில் தங்கரதம், தங்ககோபுரம் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளும், பக்தர்களும் அச்சமின்றி கடமைகளை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.