ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நெல்லையில் கோடை மழை: நீர்பிடிப்பு பகுதியில் வறட்சி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

News image
Updated On :3 மே 2014, 12:34 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடி அறுவடை முடிவடைந்த நிலையில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்பட்டதால் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து 300 கனஅடி மட்டும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தற்போது அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து காணப்படுவதால் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. கோடை மழையின் மூலம் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வழக்கத்தை விட 103 டிகிரி வெப்பம் காணப்பட்டது.

இதனிடையே கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, தென்காசி, அம்பாசமுத்திரம், கடையம், களக்காடு, ஆய்க்குடி, மூலக்கரைப்பட்டி உள்பட பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை பிற்பகலில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், முன்னீர்பள்ளம், மானூர் பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது.

சனிக்கிழமை நிலவரப்படி பாளையங்கோட்டையில் 13.6 மி.மீ மழையும், களக்காட்டில் 19.2 மி.மீ மழையும், மூலக்கரைப்பட்டியில் 4.1 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 18.6 மி.மீ மழையும் பதிவாகியிருந்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 33.15 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1.85 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து 105 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 45.93 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 62.44 அடியாகவும் இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 9 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் குடிநீர் தேவைக்காக 200 கனஅடி தாமிரவருணி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

கடனாநதி அணையின் நீர்மட்டம் 26.40 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 25.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 24.60 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 16.25 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 2.00 அடியாகவும் இருந்தது. இந்த அணைகளுக்கு நீர்வரத்து இல்லாததால் வறண்டு மூடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.