ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தமிழில் உயர்கல்வி: என்ன சிக்கல்? என்ன தீர்வு?

தமிழில் உயர்கல்வியை எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிய தொடர்..

News image
தமிழில் பாடப் புத்தகங்கள்- DPS
Updated On :14 மார்ச் 2026, 4:59 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் தொழில்கல்வி பட்டம் பெற்று வேலைக்குத் தயாராகின்றனர். ஆனால் வேலைவாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கான திறன்களை சோதிக்கும்போது, பெரும்பகுதியினரிடம் இருந்து எதிர்மறையான முடிவுகள்தான் வேலையளிப்போருக்கு கிடைக்கிறது. இதனால், வேலைவாய்ப்பு சந்தையில் திறன்மிக்க மனிதவளத்துக்குப் பற்றாக்குறை என்பது நீடித்துக் கொண்டே இருக்கிறது.

கற்றலில் இருக்கும் குறைபாடுதான் திறன்மிக்க பட்டதாரிகளாக உருவாக முடியாததற்கான முக்கிய காரணமாக உள்ளது. புரிதல் இல்லாமல் தொழில் கல்வியைக் கற்கும் மாணவர்களால், திறன்களை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை.

இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தாய்மொழியில் கற்கும்போது பாடங்களை புரிந்து படிக்க முடியும். இதனால் கற்றல் திறன் அதிகரித்து, மாணவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்வது சாத்தியமாகிறது.

கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ் வழிக் கல்விக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது, மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் உயர்கல்வியை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது. அதேநேரம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் வழியில் பொறியியல் கல்வி அறிமுகம் செய்யப்பட்டாலும் மாணவர்களை ஈர்க்கவில்லை. பொறியியல் பட்டதாரிகளில் பெரும்பகுதியினர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். இச்சூழலில் தமிழ் வழியில் படித்தால் வேலைவாய்ப்பு சாத்தியமாகுமா என்ற தயக்கம் மாணவர்களிடம் இருந்து வருகிறது.

அதோடு, மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் அளிப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இவற்றை ஆராய்ந்து, அவற்றைச் சரிசெய்த பிறகே தமிழ் வழியில் தொழில்கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். அவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் இதோ:

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? துறை வல்லுநர்கள், மொழி அறிஞர்கள் ஒருங்கிணைப்பு சாத்தியமாக்கும் கல்வியைத் தாய்மொழி வாயிலாகப்பெறவேண்டும்; இதுவே கற்றலுக்கான முழுப் பயனையும் தரும் என்பதை வல்லுநர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

தொன்மை மிக்க தமிழ் மொழிக்கும் இதுபொருந்தும் என்றாலும், சாத்தியமா?' என்னும் வினா எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, உயர்கல்வி தொடர்பாகவே இவ்வினா மீண்டும் மீண்டும் எழுப்பப்படுகிறது. இந்த வினாவை எழுப்புவதற்கான காரணிகளாக இருப்பவை:

உயர்கல்வித் துறைகளில், உயர்நிலை மற்றும் துறைசார்ந்த தரவுகளைத் தெரிவிப்பதற்கான கலைச்சொற்கள்/துறைச்சொற்கள் போன்றவை உள்ளனவா என்னும் ஐயம்; சொற்கள் இருப்பினும், அவற்றைக் கொண்டு, தகவல்களையும் தரவுகளையும் முழுமையாகக் கற்பிக்க முடியுமா, நுணுக்கங்களையும் நுட்பங்களையும் எடுத்துக்கூறுகிற வகையில் அத்தகைய சொற்களும் சொற்றொடர்களும் உள்ளனவா, என்பன போன்ற நெருடல்கள்;

அப்படியே தமிழ் மொழியில் கற்பித்தாலும், பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் நவீன மேம்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், வேகமாகக் கற்பிக்க இயலுமா என்னும் தவிப்பு.

மேற்கூறியவற்றுக்கு ஆம்/இல்லை' முறையில் விடைகூற வேண்டுமென்றால், இப்படிக்கூறலாம்: உள்ளன / இல்லையென்றாலும் உருவாக்கிக்கொள்ளலாம்; முடியும்; இயலும்.

இவ்வளவுதானே, வினாக்களுக்கெல்லாம் விடைகள் கிடைத்துவிட்டனவே, இதற்குமேல் என்ன என்கிறீர்களா? இனிமேல்தான் இன்னும் சிலவற்றைச் சிந்திக்க வேண்டும்.

துறைகளுக்கு ஏற்ப சொற்களையும், சொற்றொடர்களையும் தோற்றுவித்தல் இருபது முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்த துறைகளைக்காட்டிலும், இன்றைய அளவில் புதுப்புதுத் துறைகள் தோன்றியுள்ளன, பெருகியுள்ளன. மெகட்ரானிக்ஸ், ரோபாடிக்ஸ், ஜியோஸ்பேஷியல் இண்டெலிஜன்ஸ், க்ரோனோபயாலஜி, எத்னோபயாலஜி, லிம்னாலஜி, காஸ்மோகெமிஸ்டரி, ஃபெம்டோ கெமிஸ்டரி என்றெல்லாம் பேசிய காலங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன.

மேலும் மேலும் புதிய துறைகளும் ஒருங்கிணைப்புத்துறைகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நானோடெக்னாலஜி, பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், ஆஸ்ட்ரோபயாலஜி, பயோஃபிஸிக்ஸ் போன்ற துறைகளைக் குறிப்பிடலாம். ஆர்டிஃபேக்ட்ஸ்சயன்ஸ், ந்யூட்ரிஜினாமிக்ஸ், க்ளியோடைனமிக்ஸ், க்வாண்டம் பயாலஜி, எக்ஸோமீடியராலஜி, ஸிந்தடிக்பயாலஜி, மீமிடிக்ஸ், ரிகாம்பினன்ட்மீமிடிக்ஸ், ஆர்கானிக் எலக்ட்ரானிக்ஸ், காக்னிடிவ் இகனாமிக்ஸ், பிஹேவியரல் இகனாமிக்ஸ் போன்றவை வந்து கொண்டே இருக்கின்றன. பெயர்களே வாயில் நுழையவில்லையே, இவற்றுக்கான கலைச்சொற்கள் உள்ளனவா? உள்ளன;

இல்லையென்றாலும் உருவாக்கிக் கொள்ளலாம். புதிய துறைகளோ, செயல்பாடுகளோ தோன்றும்போது, அனைத்திற்குமான சொற்கள், ஏற்கெனவே இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலசமயங்களில், புதியசொற்களைஉருவாக்க வேண்டியிருக்கும்.

பலவகையான வாகனங்கள் உருவாக்கப்பட்டபோது, பேருந்து' என்று நாம் இப்போது அழைக்கும் வாகனமும் உருவானது. ஆங்கிலத்திலும் ஐரோப்பிய மொழிகளிலும், இவ் வாகனத்தை பஸ்' என்றழைத்தார்கள். ஆம்னி பஸ்' என்னும் லத்தீன் மொழிச் சொல்லுக்கு அனைவருக்கும்' என்பதே பொருள். நீளமான, நிறைய இருக்கைகள் கொண்ட வாகனம் அனைவருக்குமானது என்று குறிப்பதற்காக இப்படிச் சொல்ல ஆரம்பித்து, காலப்போக்கில், ஆம்னி' விடுபட்டு, பஸ்' என்றானது. ஆங்கில மொழியில், பஸ் என்னும் சொல், 1830-களில்தான் புழக்கத்திற்கு வந்தது. இயந்திர சக்தியால் உந்தப்படுகிற வாகனம் என்னும் பொருளில், தமிழில் பேருந்து என்னும் சொல் உருவானது. இப்போது இதுவெகுவாகப் புழங்குகிற சொல்லாகிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.