ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊர்களில் வீட்டிற்கு ஒரு வேல், ஒரு முருகன் இருந்தார்கள். பண்டைக் காலத்திலிருந்தே வேல், முருகனுடன் சேர்த்தேப் பேசப்பட்டு வந்திருக்கிறது. குறிஞ்சி நிலத்தலைவனான முருகன், கையில் வேலுடன் யானை மீது அமர்ந்து வந்திருக்கிறான்.
வேலின் தண்டுப்பகுதிப் பெரிதும் இரும்பினால் ஆனதாக இருந்திருக்கிறது. அப்படிக் கனம்பொருந்திய ஆளுயர வேலைத் தூக்கி எறிய வேண்டுமானால் ஆண்மகனின் கைகளில் எந்த அளவிற்கு ஆற்றல் இருந்திருக்கும், எந்த அளவிற்கு அவனது உடல் அமைந்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளலாம். சங்க இலக்கிய வாசிப்பில் வேல் எறிந்து ஒரு யானையைக் கொல்ல முடியுமா என்று எழும் ஐயம் வேலின் வடிவம், அதன் எடை, அதனை எறிந்த கையின் ஆற்றல் ஆகியவற்றை அறியும்போது நீங்கிவிடும்.
தமிழரின் பண்பாட்டுடன் ஒன்றிப்போன வேல் பற்றிய ஆய்வு நூலாக அமைந்திருக்கிறது இந்நூல். அதிகம் பக்கங்களைக் கொண்ட சில பெரிய நூல்களை எளிதில் எழுதி முடித்துவிடலாம். மாறாக, குறைவான பக்கங்களைக் கொண்ட சில சிறு நூல்களை எழுதுவதற்குக் கூடுதல் உழைப்புத் தேவைப்படும். அப்படி ஆய்வு நோக்கில் அதிகம் உழைத்து உருவாக்கிய நூலாகவே நான் 'வடிவேல் எறிந்த வான்பகை' நூலைப் பார்க்கிறேன்.
சங்ககாலத் தமிழர்களால் பயன்படுத்தப்பட்ட வேல் பற்றியதாக இந்நூல் அமைந்திருக்கிறது. சங்க இலக்கியப் பாடல்கள் மட்டுமல்லாமல் சிலப்பதிகாரம், முத்தொள்ளாயிரம், 'செம்மொழி' ஆகியவற்றிலிருந்தும் வேல் பற்றிய தரவுகளைத் திரட்டி இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது.
'ஆளுயர வேல்' பற்றியதாக முதல் அத்தியாயம் அமைகிறது. "பழந்தமிழ் இலக்கியங்கள் வியந்து போற்றும் வேல் எனும் கருவி ஒரு கலைப்படைப்பு. அதன் அளவு வடிவம் ஆகியவை எந்த நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளதோ அதே நுட்பம் தமிழ் மொழியின் ஒலிக் கட்டமைப்பிலும் உள்ளது என்று சான்றுகளின் வழியே தெரிய வருகிறது." தென்னன் மெய்ம்மனின் கருத்து பண்டைத்தமிழர் வாழ்வியல், மொழியியல் பற்றிய புதிய ஒளியைப் பாய்ச்சுகிறது.
"இலைப்பகுதி, பலகை அல்லது மடை, தண்டுப்பகுதி மற்றும் கருங்கடை என நான்கு உறுப்புகளால் அவ்வப்போது பொருத்தப்பட்டு ஒரு புனைகலமாக வேல் பயன்படுத்தப் பட்டிருக்கிறது" என்று வேலின் வடிவம் விளக்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் வீடுகளில் பயன்படுத்தும் பெரிய குத்து விளக்குகூட வேலின் மாறுபட்ட வடிவமாக உருவாக்கப்பட்டிருக்குமோ என்னும் ஐயம் எனக்கு எழுகிறது.
பொதுவாக வேல் அவரவர் உயரத்தின் அளவுக்குச் சமமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. "வேலைப் புனைவதும், பயன்படுத்துவதும், பிரித்துவைப்பதும் தமிழர்களுக்கென்றே தனித்த பண்பாட்டு அடையாளம் கொண்ட நாள்முறை வாய்ப்பாட்டின்படி அறிவிப்புச் செய்யப்பெற்ற நாள்களில் நடந்தேறியிருக்கிறது என்பது தெரிய வருகிறது. நோன்பும் இடப்பெயர்வும் கூடித்தொழில் செய்யும் வழக்கமும் உடைய தமிழர்களின் அகவாழ்விலும், புறவாழ்விலும் போற்றுதற்குரிய பங்களிப்பைச் செய்திருக்கிறது வேல்" பண்டையத்தமிழர் வாழ்வில் வேல் வழிபடு பொருளாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டிருக்கிறது என்றும் நாம் புரிந்துகொள்ளலாம்.
'வேலும் தமிழும்' எனும் துணைத் தலைப்பில் வேலின் புனைவு வடிவமும் தமிழ்மொழியின் கேளா ஒலிப்புனைவு வடிவமும் மிக நெருங்கிய தொடர்பு உடையன. அதனால் உரிய நாளில் உரிய முறையில் வேல் பொருத்தப்பட்டுவிட்டால் அதனை ஓர் உயிர்ப் பொருளாகவே கருதிப் போற்றிப் பயன்படுத்தினர் பழந்தமிழர் என்று தெரிகிறது." வேல் பற்றிய தென்னன் மெய்ம்மனின் இந்த அறிவியல் கருத்து சிந்திக்கத்தக்கது.
"வேல் என்ற கருவி பல தனித்தனி உறுப்புகளை ஒன்றுசேர்த்து உருவாக்கப்படும் அணிகலன் போன்றதொரு போர்க்கலன். எந்த உறுப்புக்கும் தனியாக 'வேல்' என்னும் பெயர் கிடையாது" என்று இலக்கியச் சான்றுகளுடன் நிறுவுகிறார். ஆனாலும், எங்கள் ஊர்களில் பலர் வீடுகளிலும் வேல்க்கம்பு இருந்தது. அது ஆளுயரக் கம்பின் நுனியில் கூர்மையான இலைவடிவக் கத்தி செருகப்பட்டிருக்கும். கத்தியும் கம்பும் தனித்தனியாகவே இருக்கும். என்றாவது தேவைப்படும்போது கத்தியை கம்பில் செருகுவார்கள். இங்கு இலைவடிவக் கத்தி வேல் என்று அழைக்கப்பட்டிருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம். ஏனெனில் பண்டைய வேலின் இலை, பின்னாளில் வேல் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கலாம்.
நுதி என்பது நுனி அல்லது முனை என்னும் பொருளில் வழங்கப்பட்டிருக்கிறது. வேல் நுதிக்குச் சான்றாகச் சொல்லப்பட்டிருக்கும் 349-வது புறநானூற்றுப் பாடலில். 'இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று' என்னும் வரி வருகிறது. இந்தப்பாடல் வரியில் இடம்பெற்றிருக்கும் 'படிவம்' என்னும் சொல் 'பாவை' என்ற பெண்பாற் சொல்லுக்கு நிகரான ஆண்பாற் சொல் என்று கருதலாம் என்கிறார் தென்னன் மெய்ம்மன். இது புதிய செய்தி.
பண்பாட்டு நிலையில் வேல் தரையில் ஊன்றப்படுவது இல்லை. வீரவணக்க வழிபாடாக நடுகல்லுக்கு அருகில் வேல் ஊன்றப்பட்டிருக்கிறது. அந்த வேலும் ஒரு பலகையின் மீதுதான் ஊன்றப்பட்டிருக்கிறது. அது 'வேல் ஊன்றுப் பலகை' எனப்பட்டிருக்கிறது.
நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்
மொழிபெயர் தேஅயம்"
(அகம். பாடல் 67)
அலகை என்பது என்ன?
"மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழிய
அலகைப்போயிச் சிதைந்து வேறு ஆகிய
பலகை அல்லது களத்து ஒழியதே
சேண் விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர் வாய் உளானே"
(புறம். 282)
போரில் மாண்ட வீரன் ஒருவனைப் பற்றிய பாடல். வேலின் அலகையும் பலகையும் வேறுவேறாக சிதைந்ததுபோல உடல் சிதறி இறந்து புலவர் நாவில் புகழ் வடிவில் உள்ளான் என்று பொருளாகிறது. இந்தப்பாடலில் நான்காவது அடி இல்லாமல் பாடல் சிதைந்துள்ளது. அதனால் அலகை என்பது எதைக் குறிக்கிறது என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை என்று தென்னன் மெய்ம்மன் கூறுகிறார். அவர் மேலும் கூறும்போது அலகை என்பது வேலின் இலை அல்லது ஊசியான கருவியைக் குறித்திருக்கலாம் என்கிறார். அக்கருத்துச் சரிதான் என்று சொல்வதற்குச் சான்றுகள் உள்ளன. நா. கதிரைவேற் பிள்ளையின் தமிழ் அகராதி, அலகு என்பதற்குக் கத்தியின் கூர்ப்புறம் என்று பொருள் சொல்கிறது. அலகை என்பதற்குக் காட்டுக்கற்றாழை என்கிறது. கற்றாழை என்றாலே கூர்மையான முள்தானே நம் நினைவுக்கு வரும். அதனால் கற்றாழை முள்போன்ற கூர்மை உடைய வேல்நுதி (நுனி) என்றும் பொருள் கொள்ளலாம்.
"வேல் பற்றிய அறிவு பொய்யா மரபு வகையைச் சார்ந்தது. தமிழ்ப் புத்தாண்டு பற்றிய அறிவு பணியா மரபு வகையைச் சேர்ந்தது. தமிழ் மொழியானது இலக்கணக் கட்டமைப்பால் மயங்கா மரபு வகையைச் சார்ந்தது. பெருங்கலைகள் காணா மரபு வகையைச் சார்ந்தன. ஊழிப்போக்கில் காலம் கனியும் வேளையில் இவை ஒன்றுக்கொன்று ஊட்டிக்கொண்டு உயிர்த்து எழும் இயல்புடையன" என்று 'செம்மொழி நூலில் வேல் - பட்டியல் அறிமுகம்' என்னும் அத்தியாயத்தின் முகப்பில் சொல்லப்படுகிறது.
அரிதிலும் அரிதாகத் தமிழறிஞர்களால் தொகுத்து வெளியிடப்பட்டது என்று 'செம்மொழி' நூலை அடையாளப்படுத்துகிறார். செம்மொழி நூலில் இடம்பெற்றுள்ள வேல் பற்றிய குறிப்புகளில் 459 மட்டும் இந்நூலில் பட்டியல் இடப்பட்டுள்ளன.
குரவை
குரவைப்பாடல் என்னும் விளையாட்டு வானவியல் அடிப்படையில் ஆனது. ஒரு குறிப்பிட்ட நோக்கத்தைக் குரவை என்று அழைப்பதும் வழக்கமாக இருந்திருக்கிறது. சிலப்பதிகாரம் ஒரு புனை கதைதான். சோழர்களையும், பாண்டியர்களையும் மட்டுப்படுத்திச் சேர மரபிற்கு உயர்வுத் தோற்றும் நோக்கம்கொண்ட சிலப்பதிகாரம் என்னும் சமண நூல் பாண்டியன் செங்கோல் வளைந்ததாகக் கூறுகிறது. அப்படியெல்லாம் செங்கோல் வளைவதில்லை என்று தென்னன் மெய்ம்மன் கருத்துரைக்கிறார்.
வடிவேல் எறிந்த வான்பகை
பெரும்பாலான தமிழர்களேகூட பரவலாகத் தொட்டுப் பேசிடாததும், தமிழில் உயராய்வு மேற்கொள்ளும் இளைய தலைமுறையினரே கூட இன்னமும் உடைத்துப் பேசிடாததும் ஆன அரியவகை இலக்கியச்சான்றே "வடிவேல் எரிந்த வான் பகை" என்று சொல்கிறார் மெய்ம்மன்.
இச்சொற்றொடர் சிலப்பதிகாரம் காடுகாண் காதையில் இடம்பெற்றுள்ளது.
"வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை
ஊழிதொறு ஊழிதொறு உலகம் காக்க
அடி இற்றன்ன அளவு அரசர்க்கு உணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை யாண்ட தென்னவன் வாழி"
(சிலம்பு. காடுகாண் காதை, 15-22)
தெற்கில் பஃருளி ஆற்றுடன் பன்மலை அடுக்கமும், குமரி மலையும் கடலில் மூழ்கியதால் தென்திசை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியன் வடதிசையில் கங்கையையும், இமயத்தையும் வெற்றிகண்டுத் தனது நாட்டு எல்லையை விரிவுப்படுத்தினான் என்று சொல்கிறது இச்சிலம்பு வரிகள்..
இதே கருத்து ஒரு முல்லைக் கலிப்பாடலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"மலிதிரைஊர்ந்துதன் மண்கடல் வௌவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்பட
புலியொடு வில்நீக்கி புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"
(கலித்தொகை, பாடல் 104 , வரிகள் 1-4)
தனது நாட்டின் தென்புலத்தைக் கடல் கொண்டதால் சோர்வுறாது வடபுலத்தில் இருந்த சேரர், சோழரை வென்று மீன் கொடியை நாட்டித் தனது நாட்டை விரிவுபடுத்தினான் பாண்டியன் நெடுஞ்செழியன் என்று பொருளாகிறது. 'இடம்பட' என்பதற்கு 'விரிவுபடுத்தல்' என்று பொருளாகும். 'புலிக்கு இடம் வலம் தெரியுமா?' என்னும் எனது கட்டுரையில் (வையம், ஆகஸ்ட் 2024) இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். 'இடம்பட' என்னும் சொல், எனக்குத் தெரிந்து, சங்க இலக்கியத்தில் இந்த ஒரு பாடலில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொன்று 'அடி இற்றன்ன அளவு' என்பது, அது முளைக்குச்சியின் நண்பகல் நிழலின் மிகக்குறைந்த அளவு என்றும், பகலவனின் வட செலவு தென் செலவு எல்லைகளைக் கண்டறியப் பயன்பட்டது என்றும் தெரிகிறது என்கிறார் தென்னன் மெய்ம்மன்.
இது ஓர் அறிவியல் நிகழ்வு. இந்நிகழ்வு பத்துப்பாட்டில் ஒரு பாட்டான நெடுநல்வாடையில் விரிவாகச் சொல்லப்படுகிறது. பாண்டிமாதேவிக்கு அரண்மனை கட்டுவதற்காக சித்திரை மாதத்தில் திசை கண்டறிந்ததைச் சொல்லும் வரிகள்.
" ----------------------------------------------------------- மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறற் சாரா அரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிரிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து
ஒருங்குடன் வளைஇ ஓங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரியத்"
( நெடுநல்வாடை வரிகள் 72 – 80)
பரந்து விரிந்து, தனது கதிர்களைப் பரப்பும் பகலவன், சித்திரைத் திங்கள் பத்தாம் நாள் தொடங்கி, இருபதாம் நாள் முடிய நிகழும் நாள்களில், ஏதேனும் ஒரு நாளில், நண்பகலில் நிலத்தின் நடுவில் இயங்கும். அப்படி இயங்குவதை, இரண்டு செவ்விய கோல்களை நட்டு. கிழக்கில் உதிக்கும் சூரியன், மேற்கு நோக்கி உயர்ந்து எழுந்து, உச்சியை அடையும் நண்பகல் வேளையில், கோள்களின் நிழல்கள் எப்பக்கமும் தரையில் விழாமல், அந்த கோள்களிலேயே அடங்கி நிற்பதை, ஆய்ந்து அறிந்து, அந்த நாளில், சிற்பக்கலை பற்றிய நூல்களைக் கற்றுத் தேர்ந்த தச்சர்கள் துல்லியமாக நூல் கொண்டு அளந்து, திசைகளைத் தெரிந்து, அத்திசைகளுக்கு உரியத் தெய்வங்களை வணங்கி, மனையும், மன்றமும், மண்டபமும், படை வீடும், கருவூலமும் இன்ன பிறவும் கூறுபடுத்திக் குறித்துத் திருமுளைச் சார்த்து செய்து, மாமன்னர்கள் வாழ்வதற்கு ஏற்ற விதத்தில் உருவாக்கப்பட்ட அரண்மனை போன்றே பட்டத்தரசியின் அரண்மனையும் கட்டி முடிக்கப்பட்டது என்பதாகப் பாடல் கூறுகிறது.
இது முற்றிலும் பண்டைத் தமிழரின் பட்டறிவு சார்ந்த விண்ணியல் அறிவு. மற்ற நாள்களில், நண்பகல் 12 மணிக்கு, நாட்டப்பட்ட கோலின் நிழல், வடக்கில் அல்லது தெற்கில் சாய்ந்திருக்கும். ஏனெனில் சூரியன், நேர்மேலே இல்லாமல், வடக்கில் அல்லது தெற்கில் சாய்ந்திருக்கும் என்பதால். கோள்களின் நிழல் வடக்கிலோ அல்லது தெற்கிலோ சாயாத அந்த வேளையில் என்று பாடல் கூறுகிறது. அதனைத்தான் 'அடி இற்றன்ன அளவு அரசருக்கு உணர்த்தி' என்னும் சிலம்பு வரியும் உணர்த்தி நிற்கிறது.
இதுபற்றிய ஓர் அறிவியல் கருத்தைப் பதிவுசெய்வதுக் கூடுதல் புரிதலை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். பூமியைச் சுற்றி கிழக்கு - மேற்காகக் கற்பனையாக வரையப்படும் இணைகோடுகள், 'நிலகுறுக்குக் கோடுகள்' எனப்படும். பூமியின் மையத்திலிருந்து 23 டிகிரி 27 மினுட் வடக்கில் உள்ள நிலகுறுக்குக்கோடு, 'கடக வட்டம்' என்றும், 23 டிகிரி 27 மினுட் தெற்கில் உள்ள நிலகுறுக்குக் கோடு, 'மகர வட்டம்' என்றும் அழைக்கப்படுகின்றன.
பூமி, சூரியனை, நீள்வட்டப் பாதையில் சுற்றி சுற்றி வரும் போது, பூமியின் சுழற்சி அச்சு 23 டிகிரி 27 மினுட் சரிந்துள்ளதன் காரணமாக, சூரியன் வடக்கில் கடக வட்டத்திற்கும், தெற்கில் மகர வட்டத்திற்கும் இடையில் மாறி மாறி அலைகிறது. புறநானூற்றில், கபிலர் பாடிய பாடலில் (புறம்-8) "மாறி வருதி" என்கிற குறிப்பு. சூரியன், தெற்கும் வடக்கும் மாறி மாறி அலைகிறது என்கிற அறிவியல் கருத்தையே சுட்டுகிறது. இதன் காரணமாகவே, முற்பகல் மேற்கிலும், பிற்பகல் கிழக்கிலும் விழும் கோள்களின் நிழல்கள், வடக்கில் அல்லது தெற்கில் சாய்கின்றன. உண்மையில் சூரியன் நகரவில்லை. பூமிதான் நகர்கிறது. நமக்குச் சூரியன் நகர்வதுபோலத் தோன்றுகிறது.
சூரியன் தெற்கில் பயணத்தை முடித்துக்கொண்டு வடக்கு நோக்கி நகரும்போது ஒரு குறிப்பிட்ட நாளில் நண்பகலில் தலைக்கு நேர்மேலே இருப்பதால் தரையில் நாட்டப்பட்ட கோள்களின் நிழல்கள் எந்தப் பக்கமும் விழாமல், கோள்களுக்குள்ளேயே அடங்கி நிற்கும். அன்று சூரியன் கிழக்கிலிருந்து மேற்காக ஒரே நேர்கோட்டில் நகரும். நமக்கு மிக அருகாமையிலும் இருக்கும். அந்தக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடம் 'உள் சூரியப்புள்ளி' என்று அழைக்கப்படுகிறது. பாண்டி நாட்டில் அந்த நாள் சித்திரைப் பத்திலிருந்து இருபதுக்குள் வந்திருக்கிறது. சூரியன் வடக்கில் செல்வதுதான் வட செலவு. போலவே சூரியன் வடக்கில் கடக வட்டத்தை அடைந்த பிறகு திரும்பி தெற்கில் பயணம் செய்யும். அது தென் செலவு. அப்போதும் ஒரு குறிப்பிட்ட நாளில் சூரியன் தலைக்கு நேர் மேலே வருவதுண்டு. அந்த நாள் ஆவணியில் வரக்கூடும். என்றாலும் கட்டடங்கள் கட்டுவதற்கு சித்திரையில் வரும் நாளே எடுத்துக்கொள்ளப்படுகிறது. கோடையில் வரும் இந்த நாளைத்தான் இன்று அறிவியலாளர்கள் 'நிழல் இல்லா நாள்' என்று கொண்டாடி வருகின்றனர்.
கண்ணகி மதுரையை எரித்தாளா?
"முருகனின் அருளால் இருமுறை காணும் இயல்பு கண்ணகிக்கு இருக்கிறது என்றும், அதனால் அவளது நேர்கொண்ட பார்வையை 'அம்சுடர் நெடுவேல்' என்றும் குறிப்பிடுகிறது சிலம்பு. முருகனின் அருளால் ஒரு பெண்பெற்ற அம்சுடர் நெடுவேல் அதே மரபின் தென்பாண்டிய மன்னனைச் சாய்க்குமா என்று ஆய்வாளர்களை எண்ணிப்பார்க்கச் சொல்கிறார், தென்னன் மெய்ம்மன். வரலாறு மயங்கும் இடமும் அதுதான் என்று அவர் மேலும் கூறுகிறார். 'வேல்வேல் வெற்றிவேல்' என்று தொடங்கும் தென்னன் மெய்ம்மன் இயற்றியிருக்கும் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. 'வேல் போற்றி' என்னும் தலைப்பில் 400 வரிகளைக் கொண்ட பட்டியல் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் தென்னன் மெய்ம்மன் பல நாள் உழைத்து உருவாக்கியிருக்கும் செறிவான ஆய்வு நூல் என்று இந்நூலைச் சொல்லலாம். தமிழ்மொழி மீதுப் பற்றுகொண்ட அனைவரும் வாங்கி, படித்துப் பாதுகாக்க வேண்டிய நூல்.
வடிவேல் எறிந்த வான்பகை - பெருந்தச்சன் முனைவர் தென்னன் மெய்ம்மன், பக்கங்கள் - 102, விலை - ரூ. 120, வெளியீடு - வேர்களைத் தேடி பதிப்பகம், கோயம்புத்தூர். தொலைபேசி: 95244 39008
நூல் கிடைக்கும் இடம் - F3 ஜெயந்த் வளாகம், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர். தொலைபேசி: 82704 50565
Introduction and Review of the book on Vadivel Erintha Vaanpagai written by perunthachchan munaivar thennan meimman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அல்லி நகரத்து மண்வாசனை...

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

குறிஞ்சிக்கலியில் தலைமகனின் ஆளுமைப் பண்புகள்!

தவெக, திமுக, அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாத மாவட்டங்கள்
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope




