இந்தியா, ஜப்பான் இரண்டுமே பழம்பெருமையும் பாரம்பரியச் சிறப்பும் மிக்க நாடுகள். இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகள், பண்டைக் காலந்தொட்டே இருந்துள்ளன.
பண்பாட்டு ரீதியாக, இந்தியாவுக்கும் ஜப்பானுக்குமான உறவுகள் அலாதியானவை. எளிமை, உண்மை, உழைப்பு, மூத்தோரை மதித்தல், மரபுகளைக் காத்தல் போன்ற விழுமியங்கள், இரண்டு சமுதாயங்களுக்கும் பொதுவானவை என்பது மட்டுமல்லாமல், வாழ்வியல் ஆதாரங்களாக மதிக்கப்படுபவை.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு, எப்போது தொடங்கியது என்று கணக்கிடுவது கடினம். இந்தியாவில் தோன்றிய பெüத்தம், சீன நாட்டின் வழியாக ஜப்பான் சென்றது என்பது ஆய்வாளர்கள் கருத்து. எனினும், ஜப்பானின் இயல்பு வழிபாட்டு முறையான ஷிண்டோவுக்கும் இந்திய வழிபாட்டு முறைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் ஏராளம்.
ஷிண்டோ தெய்வத்துக்கு காமி என்று பெயர். இயற்கையின் ஆற்றல்கள் முதல், நிலப்பரப்பு வகைகள் வரை, பலவற்றுக்கும் காமி-க்கள் உண்டு. காமி-க்களுக்கான வீட்டு வழிபாட்டிடத்துக்கு "காமிதானா' என்றும், பொது வழிபாட்டிடத்துக்கு "ஜின்ஜா' என்றும் பெயர்கள். ஜின்ஜாவில், கன்னுஷி என்னும் பூசாரி, குறிப்பிட்ட காமிக்கான படையலை மேற்பார்வையிட்டு வழிப்பாட்டை நடத்துவிப்பார்.
இந்திய வழிபாட்டு முறையில் இயற்கையையும் இறைவனையும் எவ்வாறு பிரிக்கமுடியாதோ, அவ்வாறே ஷிண்டோவிலும் காமி-க்களையும் இயற்கையையும் பிரிக்க முடியாது. அண்டத்தில் ஊடுருவியிருக்கும் ஆற்றலின் வெளிப்பாடுகளான காமி-க்களின் உயர் நிலையை நோக்கிச் செல்வதற்கு மனித வாழ்க்கை முயல வேண்டும்.
குடும்ப முன்னோரைக் குலதெய்வங்களாக நாம் வழிபடுவதுபோலவே, பல்வேறு குலங்களின் முன்னோர்களே காமி-க்களாக வழிபடப் பெறுகிறார்கள். பூமியில் வாழும்போது, காமி-க்களுக்கான நற்குணங்களைச் செயல்படுத்த முடிந்தவர்கள், இறந்தபின்னர் காமி-க்களாகின்றனர் என்னும் நம்பிக்கையும் உண்டு.
இந்தியாவின் வேதமரபுக்கு நிறுவனர் என்றும், கொள்கை நூல் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல யாரும் / எதுவும் இல்லாததைப் போன்று, ஷிண்டோவுக்கும் நிறுவனரோ, கொள்கை நூலோ கிடையாது. இந்தியக் கடவுளர்கள் பலரையும் ஜப்பானியப் பிரதிபலிப்புகளில் காணலாம்.
விநாயகரின் ஜப்பானிய வடிவம் காங்கிடென். ஷோடென், பினாயக, கணபசி, கணஹட்டை போன்ற பெயர்களும் கொண்ட இவர், வேண்டியதைத் தவறாமல் வழங்குவார் என்னும் நம்பிக்கை உள்ளது. எனினும், இவருடைய வடிவங்களைப் பொது இடங்களில் ஆடம்பரமாக வெளிப்படுத்துவதில்லை; தகுதி பெற்ற தவசிகளால் மட்டுமே இவருக்கான சடங்குகள், பொதுக் கண்களுக்கு அப்பாற்பட்டுச் செய்யப்படும். அவலோகிதேஸ்வரரோடும் தொடர்புபடுத்தப்படுகிற இவருக்கு ஜப்பானிய பெüத்த முறைகளிலும் இடமுண்டு.
சரஸ்வதியின் ஜப்பானிய வடிவம், பென்ஸôய்டன். வடமொழியிலுள்ள ஸ்வர்ணப்ரபாச சூத்ரங்களின் சீன மொழிபெயர்ப்புகளின் வழியாக, 7-8-ஆம் நூற்றாண்டுவாக்கில், சரஸ்வதி ஆராதனை ஜப்பானுக்குச் சென்றிருக்கக்கூடும். தொடர்ந்து, ஷிண்டோ காமி-க்களில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். "பென்ஸாய்டன்' என்னும் பெயருக்கு, பெரும் சொல்லாற்றல் தேவதை என்பதே பொருள்.
பிவா என்னும் இசைக் கருவியைக் கையில் ஏந்தியிருக்கிறாள். சில சமயங்களில் வாள் அல்லது சிந்தாமணிக் கல் ஆகியவற்றையும் ஏந்தியிருக்கக்கூடும். சுபிட்ச தேவதையாகவும் வழிபடப்பெறுகிற பென்ஸôய்டன், ஷிசிஃபுகுஜின் என்றழைக்கப்படும் அதிருஷ்டக் கடவுளர் எழுவரில் ஒருவளுமாவாள்.
சிவனாரின் ஜப்பானிய வடிவம் டைகோகுடென். இவரும் அதிருஷ்டக் கடவுளர் எழுவரில் ஒருவர். டைகோகுடென் என்னும் பெயருக்குப் பெரும் கருந்தெய்வம் என்பது பொருள். நம்முடைய மகாகாளரிலிருந்து (சிவபெருமானின் மகாகாள வடிவம்) உருவான டைகோகுடென், ஷிண்டோ தெய்வமான ஓகுனினுஷி என்பாரிடமிருந்தும் சில இயல்புகளை ஏற்றுக் கொண்டார். செல்வம், அதிருஷ்டம், வேளாண்மை, வளமை, பிள்ளைப்பேறு ஆகியவற்றின் அதிபதியான இவர், சில நேரங்களில் போர்க் கடவுளாகவும் செயல்படுவார்.
லட்சுமியின் ஜப்பானிய வடிவம் கிசியோடென் அல்லது கிஷோட்டென். நன்மைக்கும் ஐஸ்வர்யத்துக்கும் அதிதேவதை. ஞானத்துக்கும் நீண்ட ஆயுளுக்கும் அதிபதியான ஃப்யுகுரோகுஜு என்பவருக்குப் பதிலாக, அதிருஷ்டக் கடவுளர் எழுவரில் கிஷோட்டென் இடம் பெறுவதுண்டு. கெய்ஷா கலைஞர்களின் அதிதேவதையாகவும் போற்றப்படுகிற இவர், பிஷமான்டென் என்னும் காமி-யின் சகோதரியும் ஆவார்.
இந்தப் பட்டியல் இன்னமும் நீளும். பொன்டென் வடிவமான பிரம்மா, டைஷாகுடென் வடிவமான இந்திரன், வைச்ரவணன் (குபேரன்) வடிவமான பிஷமான்டென், யம வடிவமான என்மா ஆகியோரும் இதில் அடங்குவர்.
வழிபாட்டு வடிவங்களிலும் வழிபாட்டு முறைகளிலும் மட்டுமா ஒற்றுமை! அன்றாட வாழ்வியல் நடைமுறைகளிலும் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. மூத்தோரையும் பெரியவர்களையும் கண்டவுடன் தலைகுனிந்து பணிந்து உடல் வளைத்து வணங்குதல் முதல் காலணியைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் புகுதல் வரை, ஒரே வகையான சிந்தனைகளையும் செயல்தன்மைகளையும் காணலாம். பெரியோருக்கான மரியாதை விளி, சமுதாய ஒருங்கிணைப்பு போன்ற பண்பு நலன்களிலும் ஒற்றுமைகள் பலவுண்டு.
பழகியவராயினும் புதியவராயினும், ஒருவரைக் கண்டவுடன் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும் முறைமை, இந்திய நாடு முழுவதிலும் உண்டு. வணக்கம் கூறுதல், வரவேற்றல், கடவுளை வணங்குதல், மன்னிப்புக் கோரல் போன்ற தருணங்களில் நாம் பயன்கொள்கிற "அஞ்சலி ஹஸ்தம்' (கைகூப்பல்) முத்திரை, இதே போன்ற தருணங்களில் ஜப்பானியராலும் கைக்கொள்ளப்படுகிறது. இந்த முத்திரைக்கான ஜப்பானியப் பெயர் "கஷ்ஷோ' என்பதாகும்; ஒன்று சேர்ந்த உள்ளங்கைகள் என்பதே இதன் பொருள். இந்திய ஜப்பானியக் கூட்டுறவு என்னும்போது, ஒரு சில பெயர்களை மறந்துவிட இயலாது.
நொபொரு கராஷிமா- இந்திய வரலாற்றை, குறிப்பாக, தென்னிந்திய வரலாற்றை நுணுகி ஆய்ந்தவர்; சோழப் பேரரசு மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்திய கல்வெட்டுகள், பதிவுகள் குறித்த இவரின் ஆய்வுகள், பற்பல புதிய தகவல்களை வெளிக் கொணர்ந்தன.
ஹஜிமே நகமுரா- சம்ஸ்கிருத மற்றும் பாலி மொழிகளின் வல்லுநரான இவர், வேதங்கள் குறித்தும் இந்திய தத்துவம் குறித்தும் நிரம்ப எழுதினார். இந்தியாவை "ஜப்பானின் பண்பாட்டுத் தாய்' என்று வர்ணித்தார். தமக்கும் நகமுரா-வுக்கும் இடையிலான திருநீறு, சைவம், அத்வைதம் குறித்த விவாதங்கள் குறித்து, காஞ்சி மஹாஸ்வாமிகள் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒககூரா டென்ஷின்- இந்தியாவில் இரண்டாண்டுகள் வாழ்ந்தவர்; இந்தியப் பண்பாட்டின் கூறுகளை நன்கு பயின்றவர். சுவாமி விவேகானந்தருடனும் ரவீந்திரநாத் தாகூருடனும் கலந்துரையாடிய டென்ஷின், "ஆசியா முழுமையும் ஆன்மிகத்தால் இணைந்ததாகும்' என்று வலியுறுத்தியவர்.
ஷூ ஹிகோஸகா- இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வாழ்ந்து, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களை நன்கு பயின்று, மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர். சங்க இலக்கியத்தில் பரிச்சயம் மிக்கவர். தமிழ்நாட்டின் பொதிகை மலையில்தான் அவலோகிதேஸ்வரர் இன்னமும் வாழ்கிறார் என்று நம்பியவர் ஹிகோஸகா.
டோமியோ மிúஸôகாமி- ஹிந்தி, உருது, தமிழ், வங்காளம், பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகள் பலவும் அறிந்தவர். பஞ்சாபி இலக்கிய ஆய்வாளர். குரு கிரந்தத்தின் பகுதியான ஜப்ஜி சாஹிப்-பை ஜப்பானிய மொழிக்குப் பெயர்த்தவர். இவரும்கூட, காஞ்சி மஹாஸ்வாமிகளைச் சந்தித்து உரையாடியவர்.
இந்த வரிசையானது, திரை இயக்குநர் யுகோ ஸகோ, ஓவியக் கலைஞர்கள் ஃபுகு அகினோ, மெகுமி ஸககிடா, அறிஞர் கெஞ்சன் சஸôகி என்று இன்னும் நீளமாகத் தொடரும்.
நூற்றாண்டுகால இந்திய-ஜப்பான் உறவுகளில், 20-ஆம் நூற்றாண்டுக்குச் சிறப்பிடம் உண்டு. 1915-ஆம் ஆண்டு, பிரியநாத் தாகூர் என்னும் பெயரில் ஜப்பான் சென்றடைந்தார் ராஷ் பிஹாரி போஸ். இந்திய விடுதலைக்காகவும், ஆசிய ஒற்றுமைக்காகவும் இவர் ஆற்றிய பணிகள், வரலாற்றின் பொன் அத்தியாயங்கள். கலை போஷகராகவும் மனித நேயராகவும் திகழ்ந்த ஐஸோ ஸோமா, அவர்தம் திருவாட்டியார் கொக்கோ úஸôமா ஆகியோரின் மகளான டோஷிகோ úஸôமாவை மணந்து, ஜப்பானியக் குடியுரிமை பெற்று, பின்னர் இந்திய தேசிய ராணுவத்தைத் தொடங்கிய அப்பெருமகனாரை, இந்தியத் திருநாடு என்றென்றும் போற்றி வணங்கும்.
இந்திய உணவு வகைகளை ஜப்பானில் புகுத்திய ராஷ் போஸை, நகமுரயா போஸ் என்றேகூட ஜப்பானிய மக்கள் அழைத்தனர். ராஷ் போஸின் சீடராக, அவரிடமிருந்து இந்திய தேசிய ராணுவத்தையும் அதன் கொடியையும் ஆளுகையையும் பெற்றுத் தொடர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ்.
இது பண்டைய கால உறவு; பாரம்பரியமாகத் தொடர்கிற உறவு; இன்றும் என்றும் இனிவரும் காலங்களிலும் பின்னிப் பிணைந்து பீடுநடை போடும் உறவு.
கட்டுரையாளர்:
செம்மொழி தமிழாய்வு
மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








