5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

திருக்குறளில் வழிபாட்டுக் குறிப்புகள்

கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது திருக்குறள். எனினும், அந்த நூலில் 'கடவுள்' என்னும் சொல் இல்லை. சமயங்கள், சமயக்கணக்கர் பற்றிய பேச்சில்லை.

News image
Updated On :53 வினாடிகள் முன்பு

கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது திருக்குறள். எனினும், அந்த நூலில் 'கடவுள்' என்னும் சொல் இல்லை. சமயங்கள், சமயக்கணக்கர் பற்றிய பேச்சில்லை.

திருக்குறளில் காணப்பெறும் வழிபாட்டுக் குறிப்புகள் பக்தி இலக்கியங்களில் இடம்பெறும் பான்மையைக் காணலாம்.

அகர முதல எழுத்தெல்லாம்... என்று தொடங்குகிறது குறள். இதை ஏற்று, 'அகர முதலானை அணிஆப்ப னூரானை' (ஆப்ப.5) என்று சம்பந்தரும், 'அகர முதலின் எழுத்தாகி நின்றாய்' (நெல்.அரத்.7) என்று சுந்தரரும் இறைவனைப் போற்றுகின்றனர்.

அடுத்து, 'கற்றதனால் ஆயபயன் என்கொல்' என்னும் குறளைத் தழுவி, 'கற்றாங்கு அவன் கழல் பேணினர்' (508) என்று திருவாசகமும், 'கற்றார், கண்ணற்கு ஆளன்றி ஆவரோ' (3387) என்று திருவாய்மொழியும் அமைதல் காண்க, இக்குறளில் உள்ள '(வால்) அறிவன்' என்பதும் பக்தி இலக்கியங்களில் ஆட்சி பெற்றுள்ளது.

அடுத்து, 'வேண்டுதல் வேண்டாமை இலான்' (4) என்று குறள் இறைவனைச் சிறப்பிக்கிறது. இதையே 'வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை' என்று அப்பர் தேவாரமும் (திருவாவடு. 9),

'கொள்கை கொளாமை இலாதான்

எள்கல் இராகம் இலாதான்' (2734)

என்று திருவாய்மொழியும் பேசுகின்றன.

'இறைவன் அடியை இடைவிடாது சிந்திப்பவர்க்கு யாண்டும் இடும்பை இல' (4) என்பதும் மேற்காட்டிய குறள்கூறும் கருத்தேயாகும்.

'எங்கும் ஏத்திநின்று இன்புறும் அடியரை

இடும்பை வந்தடையாவே' (கடிக்குள.3)

என்பது சம்பந்தர் தேவாரம்.

'சாரா ஏதங்கள்' (3718) எனத் தொடங்கும் திருவாய்மொழியும் இக்கருத்தையே வலியுறுத்துகிறது.

ஏழாம் குறளில் இறைவனைக் குறித்து வரும் 'தனக்குவமை இல்லாதான்' என்பது, 'ஓர் உவமன் இலி' (வினாவிடை. 10) என அப்பர் தேவாரத்திலும், 'ஈடும் எடுப்பும் இல் ஈசன்' (2732), 'தன் ஒப்பார் இல்லப்பன்' (3257) எனத் திருவாய்

மொழியிலும் எதிரொலிக்கக் கேட்கலாம்.

'அறவாழி அந்தணன்' (8) என்று குறள் கூறுவதை, 'வள்ளல் அறவாழி நாதன் மலரடியை' என்று திருவெம்பாவையும், 'அறவனை ஆழிப்படை அந்தணனை' (2741) என்று திருவாய்மொழியும் குறிப்பிடுகின்றன.

'இறைவனை நினைவற நினைந்தவரே பிறவிப் பெருங்கடலைக் கடந்தவராவர்' எனப் பத்தாம் குறளில் கூறப்பட்டிருக்கும் கருத்து, பக்தி இலக்கியங்களில் அதிகமாகவும் அழுத்தமாகவும் பேசப்படுதல் காணலாம்.

'பிறவிப் பெருங்கடல் நீந்திய பெய்வளையாய்' என்று திருவெம்பாவையும் 'புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே' (2864) என்று திருவாய்மொழியும் பாடுதல் காண்க.

இனி, துறவு என்னும் அதிகாரத்தில் இறைவனைப் பற்றுவதற்கான வழிகாட்டும் வள்ளுவர்,

'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு' (350)

என்கிறார். இக்கருத்து, 'அற்றது பற்றெனில் உற்றதுவீடு' (2690) எனத் திருவாய்மொழியில் இரத்தினச் சுருக்கமாய் அமைதல் காணலாம். எனினும், பரிமேலழகர் இதற்கு முந்திய குறளான,

'பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று

நிலையாமை காணப் படும்' (349)

என்பதற்கு விளக்கம் அளிக்கையில் இத்

திருவாய்மொழியை எடுத்தாண்டிருக்கிறார்.

அடுத்துத் துறவறவியலின் இறுதியில்,

'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்' (370)

என்னும் குறளில் 'பேராவியற்கை' என்பது வீட்டினைக் குறிப்பது எனவும், 'அஃது அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலை' எனவும் விளக்கும் பரிமேலழகர்,

நன்றாய் ஞானம் கடந்துபோய்

நல்லிந்திரிய மெல்லாம் ஈர்த்து,

ஒன்றாய்க் கிடந்த அரும்பெரும் பாழ்

உலப்பிலதனை உணர்ந்துணர்ந்து,

சென்றாங்கின்பத் துன்பங்கள்

செற்றுக் களைந்து பசையற்றால்

அன்றே அப்போதே வீடு

அதுவே வீடு வீடாமே' (3529)

எனத் திருவாய்மொழிப் பாசுரம் முழுவதையும் காட்டி உரையிட்டிருப்பது கருதத்தக்கது.

'புணர்ச்சி மகிழ்தல்' அதிகாரத்தில் 'தன்

காதலியின் மென்தோளில் துயிலுதலைவிடத் திருமாலின் மேலுலகம் இனிதாமோ?' என்று வினவுகிறான் தலைவன்.

'தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு' (1103)

இக்குறள் அமைப்பைச் சற்றே தழுவி, அடியவர்தாம் பெறும் இறை இன்பத்தினும் மாலவன்தரும் மேலுலகம் இனிதாமோ? என்று வினவுகிறார் நம்மாழ்வார்.

'நின்புகழில் வைகும்தம் சிந்தையிலும்

மற்றினிதோ நீ அவர்க்கு

வைகுந்தம் என்றருளும் வான்' (2637)

என்பது அவரின் பெரிய திருவந்தாதி. இதற்கு அடிப்படை திருக்குறள் (1103) என்பது வெளிப்படை. மேலும் 'தாமரைக் கண்ணான்' என்று இக்குறளில் திருமாலைக் குறிக்கும் தொடர்

'புவ்வத்தாமரை புரையும் கண்ணன்' (15:49) என்று பரிபாட்டிலும்,

கண்ணும் கமலம்; கமலமே கைத்தலமும்

மண்ணளந்த பாதமும் மற்றவையே' (2290)

என்பதுபோல ஆழ்வார் பாசுரங்களில்

பலவிடங்களிலும் வருதல் காணலாம்.

மேலும் திருமால் உலகளந்ததை 'அடியளந்தான்' என்று திருவள்ளுவர் குறிப்பதும்

அச்செய்தி ஆழ்வார் பாசுரங்களில் பரக்கப் பேசப்படுவதையும் அறிவோம்.

இவையேயன்றித் தாமரையினாள் (617), செய்யாள் (84), செய்யவள் (167), முகடி (617, 936), தவ்வை (167), காமன் (1197), தெய்வம் (43, 50, 55 முதலான சில குறள்கள்) என வருகிற கடவுள் தொடர்புடைய தொன்மக் குறிப்புகள் சிலவும் திருக்குறளில் காணப்படுகின்றன.

இத்தகைய சான்றுகளைக் கருதியே கடவுள் வாழ்த்தில் காணப்பெறும் வழிபாட்டுக் குறிப்புகள் பல்லவர் காலத்தில் பக்தி மார்க்கம் எழுவதற்கு வழிகாட்டியாய் அமைந்தன என்கிறார் அறிஞர் சோ.ந.கந்தசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.