வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தமிழர்கள் தனித்த போக்கினர்!

News image

கோப்புப்படம்.

Updated On :8 ஜூலை 2026, 4:09 am IST

தமிழ்நாட்டு அரசியலில் மிகப் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது! குப்பனுக்கு மாற்று சுப்பன்; சுப்பனுக்கு மாற்று குப்பன் என்னும் திகட்டிப் போன அரசியல் முற்றுப் பெற்று பெற்றுவிட்டது! மூன்றாவது கட்சி ஆட்சிக்கு வந்து விட்டது!

இந்தியாவெங்கும் ஒரு கட்டத்தில், காங்கிரசு சரியச் சரிய, அந்த இடங்களைப் புதிதாகத் தோன்றிய மாநிலக் கட்சிகள் கைப்பற்றிக் கொண்டன!

மாற்றுக் கட்சிகள் பெரும்பாலும் சாதி அடிப்படையில் முளைத்தவை! தமிழ்நாடு மட்டுமே விதிவிலக்கு!

உத்தரப் பிரதேசத்தில் முலாயம்சிங் யாதவ் தன் சமூகத்தோடு முசுலீம்களை இணைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தார்!

அதே உ.பி.யில் அவருக்கு மாற்றாக உருவெடுத்த எண்ணிக்கை வலிமையுடைய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாயாவதி, அதே முசுலீம்களையும், ஓரளவு கணிசமான பார்ப்பனர்களையும் இணைத்துக் கொண்டு, யாதவர்களுக்கு மாற்றாக ஆட்சி அமைத்தார்!

எண்ணிக்கை வலிமையுடைய தாழ்த்தப்பட்ட மாயாவதிக்கு, எண்ணிக்கை வலிமை குறைந்த உயரிய பார்ப்பனர்கள் உள்ளடங்கிப் போகும் நிலை ஏற்பட்டதற்குக் குடியாட்சி முறையே காரணம்!

இரண்டாயிரம் ஆண்டுகளாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் விழிப்பு நிலையில் கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி ஆட்சிக் கட்டிலை அடைய முடிந்ததற்குக் காரணம், குடியாட்சியின் எண்ணிக்கை வலிமை நிலைப்பாடுதான்! அது எண்ணிக்கை வலிமை ஒன்றுக்கு மட்டுமே வசப்படும்! வருணாசிரம வரிசையை ஏற்பதில்லை!

வடக்கே நிகழ்ந்த இந்தப் பெரும்பான்மைச் சாதிகளின் கூட்டணியை முன் மாதிரியாகக் கொண்டு, தமிழ்நாட்டில் இராமதாசு தன்னுடைய பெரிய சமூகத்தை முன்னிறுத்தி, பிற சமூகங்களை இணைத்து ஓர் ஆட்சி முறையை உருவாக்க முயன்றது, தொடக்க நிலையிலேயே எழும்ப மறுத்து விட்டது!

அதற்கு மிகப் பெரிய காரணம் தமிழ்நாட்டில் வெள்ளைக்காரன் காலத்திலேயே அடித்தளம் அமைத்து விட்ட மொழி, இன அடிப்படையிலான சிந்தனைதான்!

அந்த உணர்வு வீறு கொண்டு எழ முடிந்ததற்குக் காரணம் தமிழின் கடைசி அறுநூறு ஆண்டு அடிமை நிலைதான்! அந்தக் காலகட்டத்தில் திருக்குறள் கூடப் படிக்கப்படாத, தேடப்படாத நூலாக இருந்தது!

பெரும்பான்மையான மாநிலங்களில் அடித்தளம் இல்லாத ஊழலில் புழுத்து வடியும் சாதிக் கட்சிகள் வெளியேற்றப்பட்டு, மீண்டும் தேசியம் குறிப்பாக பா.ச.க. கொடி கட்ட முடிகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் 1967-இல் வெளியேற்றப்பட்ட காங்கிரசு இன்று வெறும் ஐந்து இடங்களாகச் சுருங்கி விட்டது. பா.ச.க. வெறும் ஓர் இடம்! இவை ஓரங்கட்டப்பட்டு அரை நூற்றாண்டாகி விட்டது! கண்ணுக்கெட்டிய தொலைவு வரை இவற்றிற்குப் புனர்வாழ்வு இருப்பதாகத் தெரியவில்லை!

இந்தியா என்பது பல மொழிகளும் இனங்களும் உள்ள நாடு என்பது தேசியத் தலைவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது! ஒரு நாள் உடைந்து போகும் என அஞ்சினர்!

இந்த அச்சம் நேருவுக்கு மிகுதியாக இருந்தது! அதனால் மொழி வழி மாநிலங்களாக இல்லாமல், தென்னாடு முழுவதையும் ஒன்று சேர்த்து தட்சிணப் பிரதேசமாக ஆக்கி விடலாமா என்று சிந்தித்தார்!

பயங்கரமான குறும்புக்காரர் இராசாசி. அதை இராசாசி ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, அண்ணாவுக்கும் "நீங்கள் கேட்கும் திராவிட நாடுதான் தட்சணப் பிரதேசம்' என்று அதை ஏற்கும்படி பரிந்துரைக்கவும் செய்தார்!

ஆனால் காமராசர் தமிழ்நாடு தனித்தன்மையுடையது என்று நம்பியவரில்லை! இந்தியா என்பது ஒரே நாடு; அவருக்கு மாநிலப் பிரிவினைகள் நிருவாக வழி சார்ந்தவை! அவ்வளவுதான்!

ஆனால், வெள்ளைக்காரனால் நாம் பெற்ற நன்மை, நாம் யார் என்பதை நமக்கு உணர்த்தினான்!

மாக்சுமுல்லர் ஆரியத்தை, வடமொழியை, அதன் மாட்சிமைகளை சான்றுகளுடன் தூக்கி நிறுத்தினார்! அன்னி பெசன்ட் அடையாறில் தியாசபிகல் சொசைட்டி வைத்து, ஆரிய மேம்பாட்டை எடுத்துச் சொல்லி விழிப்பூட்டினார்!

ஏற்கெனவே ஓர் அளவில் தாக்கம் செலுத்திய ஆரியம், தேச அளவில் தன் தலைமையை நிறுவ அது உதவியது!

அதே காலகட்டத்தில் கால்டுவெல் திருநெல்வேலியில் இருந்து, திராவிட மொழிகளை ஆராய்ந்தார்! அவருடைய ஆராய்ச்சி தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பியது! வீறு கொள்ளச் செய்தது!

சிந்து சமவெளி நாகரிகம் என்பது திராவிடர்களின் நாகரிகம் என்னும் ஆராய்ச்சியும் வெளிப்பட்டிருந்தது!

ஆரிய மொழியில் இருந்து வட இந்திய மொழிகள் பிறந்தன என்பது போல், தமிழிலிருந்து தென்னாட்டு மொழிகள் பிறந்தன என்னும் உண்மை வெளிப்படுத்தப்பட்டது !

சூரிய நாராயண சாத்திரி என்னும் பார்ப்பனர் மறைமலை அடிகளுக்கு ஆசான்! தனித் தமிழ் இயக்கத்தின் தந்தை ஓர் ஆரியர்! உ.வே. சாமிநாத ஐயர் தமிழைக் கரையானின் வாயிலிருந்து காத்துத் தந்தார்! சமக்கிருதக் கலப்பின்றித் தமிழை எழுதும் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது!

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர், வ.சுப.மாணிக்கம், பெருஞ்சித்திரனார் ஆகியோர் தமிழின் தூண்கள் ஆயினர்!

வடநாட்டு மொழிகளெல்லாம் சமக்கிருதம் பெற்ற மொழிகள்; தென்னாட்டு மொழிகளெல்லாம் தமிழ் பெற்ற மொழிகள்!

தமிழின் மேன்மை புலவர்களிடமிருந்து, மக்கள் தளத்திற்கு வர அண்ணாவே பெரிதும் காரணம்!

மேடையில் பேசப்பட்ட கொச்சைத் தமிழ் வழக்கை இலக்கிய நடை வழக்காக்கினார் அண்ணா!

தமிழனை உயிர்ப்பித்த இயக்கங்கள் இரண்டு! ஒன்று பக்தி இயக்கம்; நிகரற்ற திருமூலன், போற்றுதலுக்குரிய திருநாவுக்கரசர் ஆகியோர் பக்தி இலக்கியத்தின் மூல நாயகர்கள்!

பிறப்பால் குறைந்த நந்தன் வாழும் முறையால் வணங்கத்தக்க நாயன்மார் ஆகலாம் என்னும் மாபெரும் செய்தியை அந்த இயக்கம் வெளிப்படுத்தி பிறப்பால் உயர்வு தாழ்வின் மீது கட்டப்பட்ட "சாதியின் ஈரக் குலையை' அறுத்து, வாழும் முறையாலேயே உயர்வு- தாழ்வு வரும் என்னும் மாபெரும் வாழ்க்கை முறையை நிலைநிறுத்தியது பக்தி இயக்கம்! அதன் பிறகும் சாதி இருந்தது; ஆனால் அது தன்னுடைய நச்சுப் பல்லை இழந்துவிட்டது!

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளின் கீழ் சாதிகள் கொடி கட்டி ஆட்சி புரிந்தன! சாதிகள் எங்கே முன்னேறின? தலைவர்கள்தாம் முன்னேறினர்!

பக்தி இயக்கம் சாதித்ததைச் சாதி ஒழிப்புப் பேசிய பெரியார் சாதிக்கவில்லை! ஆனால், பெரியாரால் திராவிட இனம் விழிப்படைந்தது என்பதால் அவர் பெரியார்தான் என்பது வேறு!

திராவிட இயக்கம் நம் காலத்தது! தமிழை உயிர்ப்பித்தது! இந்தியை எதிர்த்தது!

இந்தியாவை உருவாக்கிய இரண்டு நாகரிகங்களில் தமிழ் நாகரிகம் ஒன்று! இன்னொன்று வேத நாகரிகம்!

பக்தி இயக்கம், திராவிட இயக்கம்; இந்த இரண்டுதான் தமிழனை வீறு கொள்ளச் செய்த இயக்கங்கள்!

திராவிட இயக்கத்தின் வேகத்தால் முனிவர் இராசாசி குறைத்து மதிக்கப்பட்டார்; காமராசரின் ஆட்சியை 1967-இல் அது அடித்துக் கொண்டு போய் விட்டது!

அப்படிக் காலத்தின் போக்கைத் திருத்தி உருவாக்கிய திராவிட இயக்கம், கடந்த ஐம்பதாண்டுகளில் ஊழலில் மூழ்கித் திளைத்து, பிறந்த நோக்கத்தை இழந்து விட்டது. மலத்தில் புரள்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் புரண்டது!

தமிழனைத் தமிழனே சுரண்டுவதற்கா திராவிட இயக்கம் வேண்டும்?

இப்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து சட்டப்பேரவையின் அமைப்பே மாறி விட்டது!

வட இந்தியா முழுவதும் ஒரு கொள்கையும் இல்லாமல் சாதி- மதக் கூட்டணிகளின் வழியாக ஆட்சி செலுத்திய மாநிலக் கட்சிகள் மண்ணைக் கவ்வ, அவர்களின் மீது தேசியக் கட்சியான

பாரதிய சனதா கட்சி குதிரை ஏறி, ஆரோகணித்துப் பவனி வரும்போது, தமிழ்நாட்டில் மட்டும் எந்தத் தேசியமும் நுழைய முடியவில்லையே! ஏன்?

ஒரு திராவிடத்திற்கு இன்னொரு திராவிடம் மாற்று என்னும் அரை நூற்றாண்டு முறையை, "ஊழலுக்கு ஊழல் மாற்றாகாது' என்று தமிழ் மக்கள் மாற்றிய நிலையில், புதுக் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைதான் என்றாலும், ஒரு மாநிலக் கட்சியைத் தேர்வு செய்து, தேசியக் கட்சிகள் இரண்டையும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பிய தமிழர்கள் தனித்த போக்கினர்!

கட்டுரையாளர்:

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.