ரா. பரத்குமார்
திருக்குறளைவிட நாலடியார் காலத்தால் பிற்பட்டது; சமண முனிவர் பலரால் எழுதப்பட்டது; பதுமனார் என்பவரால் தொகுக்கப்பட்ட ஒரு தொகுப்புநூல்; திருக்குறளுக்கு அடுத்த சிறந்த நீதிநூலாகப் போற்றப்படுவது; இதில் திருக்குறளின் தாக்கம் மிகுந்திருப்பதைப் பல பாடல்களால் அறியலாம்.
சான்றாகத் திருக்குறளின் "நீத்தார் பெருமை' என்னும் அதிகாரத்திலுள்ள ஒரு குறட்பாவும் நாலடியாரின் "பெரியாரைப் பிழையாமை' என்னும் அதிகாரத்திலுள்ள ஒரு பாடலும் ஒரே கருத்தை அறிவுறுத்துவனவாக இருப்பதுடன், அந்தக் குறட்பாவின் கருத்துக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாகவும் அந்தப் பாடல் அமைந்திருப்பதைக் காணலாம்.
திருக்குறளின் அறத்துப்பாலின்கண் உள்ள முதல் இயலான பாயிரவியலில் மூன்றாவதாக அமைந்திருக்கும் அதிகாரம் "நீத்தார் பெருமை' என்பதாகும். இந்த அதிகாரம் எல்லாவற்றையும் கடந்த முனிவரது பெருமைகளை அல்லது சான்றோரது பெருமைகளை எடுத்துரைக்கிறது. இதிலுள்ள பத்துக் குறட்பாக்களும் நீத்தார் (பெரியோர்) என்போர் யாவர்?, அவர்தம் செயல்பாடுகள் யாவை?, அவர்தம் குண
நலன்கள் யாவை?, அவர்களிடத்தில் நாம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? என்பனவற்றை எடுத்துரைத்துக்கின்றன.
அதேபோல் நாலடியாரின் பொருட்பாலின்கண் உள்ள முதல் இயலான அரசியலில் 17-ஆவது அதிகாரமாக அமைந்துள்ள "பெரியாரைப் பிழையாமை'யில் உள்ள பாடல்களும் அவ்வாறே அமைந்துள்ளன.
குணமென்னும் குன்றுஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. (குறள் 29)
என்னும் குறட்பா நற்குணம் என்னும் குன்றின்மீது ஏறி நின்ற சான்றோர் பெருமக்கள் (நற்குணங்கள் நிறைந்த பெரியோர்) எளிதில் கோபம்கொள்ளார். எப்போதாவது கோபம் கொண்டார்களேயானால் அந்தக் கோபத்துக்குக் காரணமானோர், தம்மைக் காத்துக்கொள்வது அரிதானது என்கிறது.
சான்றோர் கோபம்கொள்ளுமாறு நடந்துகொள்ளக்கூடாது என்றும் அதன் விளைவு தாங்கிக்கொள்ள இயலாததாகிவிடும் என்றும் எடுத்துரைக்கிறது வள்ளுவம். சான்றோர் கோபம்கொண்டால் என்னவாகும் என்பதை மலைநாட்டுக்குச் சொந்தக்காரன் ஒருவனுக்கு எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது நாலடியார்.
"பொறுப்பர்' என்றெண்ணிப் புரைதீர்ந்தார் மாட்டும்
வெறுப்பன செய்யாமை வேண்டும்; வெறுத்தபின்
ஆர்க்கும் அருவி அணிமலை நன்னாட!
பேர்க்குதல் யார்க்கும் அரிது
(நாலடியார் 161)
என்னும் பாடல் ஆரவாரமுடைய அருவிகள் நிறைந்த, அழகிய மலைநாட்டுக்குச் சொந்தக்காரனே! எதைச் செய்தாலும் பொறுத்துக் கொள்வார் என்று நினைத்துக் குற்றமற்ற சான்றோரிடத்தில், அவர் வெறுக்கும்படியான செயல்களைச் செய்யாமல் இருக்கவேண்டும். அவ்வாறு அவர் வெறுத்தாரெனில் (கோபம் கொண்டாரெனில்), அதனால் வரும் துன்பத்தைப் போக்கிக்கொள்ள யாராலும் முடியாது என்கிறது.
'நல்லவர்கள் வாயில் விழுபவர்கள் நன்றாக இருக்கமாட்டார்கள்' என்பது இன்றைக்கு மக்கள் பழமொழிபோல் பயன்படுத்தும் தொடராகும்.
நல்லவர்களைத்தான் வள்ளுவம் "நீத்தார்' என்கிறது
நாலடியார் 'பெரியார்' என்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணிலாடும் முன்றில்

நீர் அருந்தினால் பலன்கள்

பள்ளிக்கூடம் போகலாமா?

வடிவேல் எறிந்த வான்பகை - நூல் அறிமுகம் | விமர்சனம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



