வேனல் காலத்தில் நண்பகல் வேளையில் சாலையோரம் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் ஆகியவற்றின் பிம்பங்கள் நமக்கு முன்னால் தரையில் தோன்றுவதைப் பலரும் பார்த்திருப்போம். அது, சாலையில் நீர் இருந்து அந்நீரில் அப்பிம்பங்கள் தெரிகின்றன என்னும் தோற்றத்தை ஏற்படுத்தும். ஆனால், அருகில் சென்று பார்த்தால் அப்படி எதுவும் இருக்காது. நீரும் இல்லை, பிம்பமும் இல்லை என்று ஆகிவிடும். பாலைவனத்தில் நடந்தோ, ஒட்டகத்திலோ செல்வோருக்கும் இதுபோன்ற காட்சிகள் அடிக்கடித் தோன்றுவதுண்டு. இப்பொய்த் தோற்றத்தைத்தான் 'கானல் நீர்' என்று சொல்கிறோம்.
இதற்கு ஓர் அருமையான சொல் சங்க இலக்கியத்தில் இருக்கிறது.
" ---- ---- கனைகதிர்
ஆவி அவ்வரி நீர்என நசைஇ
மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலை"
(அகநானூறு, பாடல் 327)
அது ஒரு கோடைக்காலம். தலைவன், பொருள் தேடிச் செல்லும் பொருட்டுத் தலைவியைப் பிரிந்து செல்வதை எண்ணி அலைபாயும் மனதுடையவனாகத் தலைவன் விளங்குகிறான். அவன் செல்லவேண்டிய பாலை வழியின் பண்பைப் பற்றியும் எண்ணிப் பார்க்கிறான். அவன் செல்லவேண்டிய வழியில் நீர் அலையடிப்பது போலத் தோற்றம் காட்டும். அதனை உண்மை என்று நம்பி விலங்குகள் விருப்பமுடன் ஓடிவந்து ஏமாற்றம் கொள்ளும். அத்தோற்றக் காட்சியைத்தான் பாடல் 'கனைகதிர் ஆவி' என்று குறிப்பிடுகிறது. கனை என்பதற்கு மிகுந்த என்று பொருள் கொண்டால், கனைகதிர் என்பது மிகுந்த வெப்பத்தைத் தோற்றுவிக்கும் சூரியக்கதிர் என்று பொருள் கொள்ளலாம்.
கானல் நீருக்குக் 'கனைகதிர் ஆவி' என்னும் சங்கத் தமிழ்ச்சொல் எத்தனைப் பொருத்தமுடையது என்பது கானல் நீரின் அறிவியலை அறிந்துகொள்ளும்போதுதான் புரியும். கானல்நீர், ஒளி விலகல் அடிப்படையிலான ஓர் உண்மை நிகழ்வு. அப்படி உருவாகும் பிம்பத்தை, காமிராவிலும் படம்பிடிக்க முடியும் கானல் நீர் 'முழு அக எதிரொலிப்பு' என்னும் ஒளிப்பண்பு அடிப்படையிலானது.
கானல் நீர் இரண்டு வகையானது. ஒன்று கீழ்க்கானல் நீர். உயரத்தில் இருக்கும் பொருளின் பிம்பம் தரையில் தோன்றும். இன்னொன்று மேல் கானல் நீர். பொருள் கீழே இருக்கும். அதன் பிம்பம் மேலே மிதக்கும். மேல் கானல் நீர்ப் பிம்பங்கள் பனி படர்ந்திருக்கும் துருவங்களில் மட்டுமே தோன்றும். நாம் வெப்ப மண்டலத்தில் வசிக்கிறோம் என்பதால் நம்மால் கீழ்க்கானல் நீர் பிம்பங்களை மட்டுமே பார்க்க முடியும்.
கீழ்க்கானல் நீர்
கோடைக்காலப் பகல் பொழுதில் சுட்டெரிக்கும் சூரியக் கதிர்களால் தரை சூடாகிறது. அதனால், தரையை ஒட்டியுள்ள வளிமண்டலக் காற்றும் சூடாகிறது. அப்படிச் சூடாகும் காற்றின் அடர்த்தி குறைகிறது. சூடான காற்றின் மேலடுக்கில் காற்றுக் குளிர்ச்சியாக இருக்கும். அதனால், அதன் அடர்த்தி அதிகமாக இருக்கும்.
சூரியனிலிருந்து வரும் கதிர்கள், குளிரான அடர்மிகு காற்றடுக்கிலிருந்து, சூடான அடர்குறை காற்றடுக்கினுள் ஊடுருவுகிறது. அதனால் ஒளிக்கதிர் விலகல் அடைகிறது. நமது பார்வைக் கோணத்தைச் சார்ந்து, படுகோணம், மாறுநிலைக் கோணத்தைவிட அதிகமாக இருக்கும்போது, கதிர்கள் முழு அக எதிரொலிப்பிற்கு உள்ளாகிறது. அதாவது, ஒளிக்கதிர்கள், மேல் நோக்கி வளைந்து, ஏறத்தாழ 180 டிகிரியில் திரும்பிவந்து நமது கண்களை அடைகிறது.
அதனால் சூரியனின் பிம்பம், சாலையில் தண்ணீர் இருந்தால் எப்படித் தெரியுமோ, அதுபோலவே தெரிகிறது. ஆனால், அருகில் சென்று பார்க்கும்போது பிம்பம் மறைந்துவிடும், தண்ணீரும் இருக்காது. இப்படி, உயரத்தில் இருக்கும் பொருள்களின் பிம்பங்கள், தரையில் தெரிவது கீழ்க்கானல் நீர் எனப்படுகிறது. கீழ்க்கானல் நீர்ப் பிம்பம், பொருளுக்குக் கீழ், தலைகீழாகத் தோன்றும்.
கானல் நீர் நிகழ்வில், பிம்பத்தை ஏற்படுத்துவது சூரியனின் ஒளிக்கதிர். அதற்குக் காரணமான இருவேறு அடர்த்திகொண்ட காற்றடுக்குகளை உருவாக்குவது சூரியனின் வெப்பக்கதிர். அறிவியல் அடிப்படையில், கானல் நீர் என்பதை விடவும், கனைகதிர் ஆவி என்பது எத்தனைப் பொருத்தமானது என்பது புரிகிறது அல்லவா?
நடைப்பயிற்சியில் ஓர் உரையாடல்
இது கோடை விடுமுறைக்காலம் என்பதால் காலை நடைப்பயிற்சியில் எனது பேரனும் அவ்வப்போது இணைந்துகொள்வான். அப்படி ஒருநாள் நடைப்பயிற்சியில் நாங்கள் நடந்து செல்லும் சாலையின் இருமருங்கிலும் உள்ள மரங்களின் பெயர்களை அவனுக்குச் சொல்லிக்கொண்டே வந்தேன். அப்போது அவன் இரண்டு கேள்விகளைக் கேட்டான். முதலாவது கேள்வி இம்மரங்களுக்குப் பெயர் வைத்தவர்கள் யார்? இக்கேள்விக்கு என்னால் உடனடியாக பதில் சொல்ல முடிந்தது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழ் முன்னோர்தான் இப்படிப் பெயர் வைத்தார்கள் என்றேன்.
இரண்டாவதாக இது வாகை மரம், இது வேப்பமரம் என்பது போன்று எப்படிப் பெயர் வைத்தார்கள் என்று கேட்டான். அக்கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. காலம்காலமாக அடுத்தடுத்தத் தலைமுறைக்கு இப்படியான பெயர்கள் கடத்தப்பட்டு வருகின்றன. தாவரங்கள், விலங்குகள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், மனிதர்கள் மட்டுமல்லாமல் மலை, ஆறு, அருவி, கடல், ஓடை, ஏரி, குளம் , உணவு, உடை, தொழில் என்றெல்லாம் எத்தனை எத்தனைப் பெயர்கள். தமிழ் முன்னோர்கள் எத்தனை ஆயிரம் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது சங்க இலக்கியம் வாசிப்பவர்களுக்குப் புரியும். ஆனாலும் எப்படிப் பெயர் வைத்தார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ள வழி இல்லை.
என்றாலும், கனைகதிர் ஆவி என்பது காரணப் பெயர் என்றே நான் புரிந்துகொள்கிறேன். காரணம், கனைகதிர் என்பது மிகுந்த வெப்பத்தைக் கொண்ட சூரியக்கதிரைக் குறிக்கின்றது. மிகுந்த சூரிய வெப்பம் கோடையில்தான் பெரிதும் தோன்றும். மிகுந்த வெப்பம் காரணமாகத் தரையை ஒட்டிய காற்று சூடாகி மேல் எழுகிறது. வெப்பத்தால் காற்று ஆவியாகிறது என்றும் கொள்ளலாம். இது கானல் நீர் பற்றிய அறிவியல்.
இன்னொரு கோணத்திலும் இதனை அணுகலாம். உண்மையில் இல்லாமல், ஆனால் இருப்பதுபோலத் தோற்றம் காட்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டவற்றில் ஆவியும் ஒன்று. மக்கள் பேய், பிசாசுகள் போன்று கண்ணுக்குத் தெரியாதவற்றை ஆவி என்று குறிப்பிடுவது வழக்கம். ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அவரது ஆவி பிரிந்துவிட்டது என்று சொல்வது உண்டு அல்லவா? கண்ணால் பார்க்க முடியவில்லை என்றாலும் உடலில் தங்கியிருக்கும் வரையிலும் உயிர் என்பது உண்மைதான். ஆனால் மரணத்திற்குப் பிறகான ஆவி என்பது இல்லாமல், இருப்பதுபோலத் தோற்றம் காட்டுவது. அந்த வகையிலும் இருப்பதுபோலத் தோற்றம் காட்டும் கானல் நீருக்கு 'கனைகதிர் ஆவி' என்னும் சொல் மிகவும் பொருத்தமுடையதுதான்.
கானல் நீருக்குத் 'தேர்' என்றும் மற்றொரு சொல் மற்றொரு அகநானூற்றுப் பாடலில் உள்ளது.
"கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங்கு அறியாது தேர்மருங்கு ஓடி
அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்"..
(அகநானூறு, பாடல் 29)
பொருள் தேடிப் பிரிந்து சென்ற தலைவன் கூற்றாக இப்பாடல் வெளிப்படுகிறது. அவன் சென்ற பாலை வழியில் ஆற்றில் நீரின்றித் தவிக்கும் ஓடம் (அம்பி) போலக் கானல் நீரால் ஏமாற்றம் கொள்ளும் யானைகள் நீர்த் தேடி அலையும் காடு என்று தலைவன் குறிப்பிடுகிறான். இங்குத் 'தேர்' என்பது கானல் நீரைக் குறிப்பதாகும்.
"நன்றுமன் வாழி தோழி தெறுகதிர்
ஈரம் தைத்த நீர்அறு நனந்தலை
அழல்மேய்ந்து உண்ட நிழல்மாய் இயவின்
வறல்மரத்து அன்ன கவைமருப்பு எழிற்கலை
அறல்அவிர்ந் தன்ன தேர்நசைஇ ஓடி
புலம்புவழிப் பட்ட உலமரல் உள்ளமொடு
மேய்ப்பிணைப் பயிரும் மெலிந்துஅழி படர்குரல்
அருஞ்சுரம் செல்லுநர் ஆட்செத்து ஓர்க்கும்"
(அகநானூறு, பாடல் 395)
பொருள் தேடிப் பிரிந்த தலைவன் பயணிக்கும் பாலை வழியின் கொடுமைகளைத் தலைவி தோழிக்குச் சொல்லும் பாடல் கோடைக்காலம். காடெங்கும் சூரியன் சுட்டெரிக்கிறது. மரங்கள் எல்லாம் பசுமையின்றி காய்ந்துபோனதால் நிழல் இல்லை. காய்ந்த புல்லைத் தின்ற ஒரு கலைமான் (ஆண்மான்) வரிவரியாய்க் கிடக்கும் மணலைப்போன்று தோற்றம் காட்டும் 'தேரைக்' கண்டு நீர் என நம்பி ஓடோடி வருகிறது. அருகில் சென்றால் நீர் மாயமாக மறைந்துவிட்டது. ஆம், அது கானல் நீர். ஏமாற்றம் அடைந்த கலைமான் வருத்தமுற்ற குரலில் தனது பெண்மானை அழைக்கும். அந்த வழியாகச் செல்வோருக்கு அக்குரல் மனிதர்களின் குரல் போன்றே ஒலிக்கும்.
இப்பாடலில் 'தேர்' என்னும் சொல் கானல் நீரைக் குறிப்பதாக உள்ளது. பொதுவாகத் தேர் என்னும் சொல் நிலையாமையையும், பொய்த் தோற்றத்தையும் குறிப்பதற்கும் பண்டைக் காலத்தில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. எனக்கு இந்த இடத்தில் ஓர் ஒப்பாரிப் பாடல் ஞாபகம் வருகிறது. அப்பாடலில், இறந்தவர் உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊர்தியைத் 'பூந்தேர்' என்று அழைக்கிறார்கள். இங்குத் தேர் என்பது வாழ்வின் நிலையாமையைக் குறிக்கிறதோ என்னும் எண்ணமும் ஏற்படுகிறது.
அறிவியலாளர்களும் சங்க இலக்கியம் ஏன் படிக்க வேண்டும் என்பதற்கு இந்தக் 'கனைகதிர் ஆவி' என்னும் சொல் ஒரு சான்று. ஆங்கிலத்தில் அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தேடும் அறிஞர்கள், சரியான தமிழ்ச்சொல் கிடைக்காதபோது சங்க இலக்கியத்தில் தேடலாம்.
This article discusses the science of mirages in Sangam literature.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











