

ஓர் ஆண்டில் மாறும் பருவங்களை மேலை நாட்டினர் இளவேனில், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர்காலம் என்று நான்காகப் பிரித்தனர். நம் தமிழ் முன்னோர் இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனில் காலம் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி) , குளிர்காலம் (ஐப்பசி,
கார்த்திகை), முன்பனிக்காலம் (மார்கழி, தை), பின்
பனிக்காலம் (மாசி, பங்குனி) என்று ஆறு பருவங்களாகப் பிரித்தனர். இளவேனில், முதுவேனில் என்பன கோடைகாலத்தையும், கார் என்பது மழைக்காலத்தையும் குறிக்கும்.
பொருள் தேடியோ, போர் காரணமாகவோ ஒரு குறிப்பிட்ட பருவகாலத்தில் தலைவியைப் பிரியும் தலைவன் ஏதேனும் ஒரு பருவகாலத் தொடக்கத்தில் திரும்பி வந்துவிடுவதாகக் கூறிச்செல்வதுண்டு.
இளவேனில் காலத்தின் வருகை கலித்தொகைப் பாலைத் திணையில் மிகச் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக, 26 முதல் 36 வரையிலுள்ள கலித்தொகைப் பாடல்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
எஃகு இடை தொட்டக் கவின்பெற்ற ஐம்பால்போல்
------
ஆன்றவர் அடக்கம்போல்
அலர்ச்செல்லாச் சினையொடும்
------
துயர்அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே
(கலித்தொகை- 32)
ஒழுங்காக கத்தரிக்கப்பட்டதும் மேகம்போன்று அழகுடையதுமான இளமங்கையின் கூந்தல்போல மடிப்புகளுடன் ஆற்றின் ஈரமணல் தோற்றமளிக்
கிறது.
ஒருமுறை பார்த்தால், மீண்டும் பார்க்கத் தூண்டும் பெண்களின் நடனம்போல, பூத்துக் குலுங்கும் அழகிய மரக்கொம்புகளும் மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன. இதுபோன்ற சிறப்புகளோடு இளவேனில் பருவம் வந்திருக்கிறது.
மன்உயிர் ஏம்உற மலர்ஞாலம் புரவுஈன்று
பல் நீரால் கால்புனல் பரந்து ஊட்டி
---------
கரி பொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின் வாடி
எரி பொத்தி என் நெஞ்சம் சுடுமாயின் எவன் செய்கோ?
---------
கண்உறு பூசல் கை களைந்தாங்கே
(கலித்தொகை-34)
ஆறுகளில் நீர்வற்றி இடைவெளிகளுடன் ஓடுவது அழகாக இருக்கிறது. ஆற்றில் நீர்வற்றிய காலத்தில் ஆற்றங்கரை மரங்கள் பூக்களை உதிர்த்து ஆற்றை
நிரப்பியுள்ளன. இளவேனில் பருவம் வந்துவிட்டது. திரும்பிவருவதாக சொன்ன தலைவன் வரவில்லையே என்று தலைவி தனது துன்பத்தை வெளிப்படுத்தும்
பாடல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.