
இது அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் வழக்கு - உச்ச நீதிமன்றம் - ANI
புது தில்லி: உச்ச நீதிமன்றம் அரசியல் மேடையல்ல, உங்கள் சண்டைகளை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று முதல்வர், அமைச்சர்களுக்கு எதிராக திமுக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை, முதல்வர் ஜோசப் விஜய் நேரில் சந்திப்பதற்கும், கரூர் சம்பவம் குறித்து முதல்வர், அமைச்சர்கள் பேசுவதற்கும் எதிராக திமுக தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, கருர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், தவெகவினர், அதனை திசை திருப்பும் வகையில் பேசி வருகிறார்கள் என்று திமுக தரப்பில் கூறப்பட்டது.
இதனைக் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்கள் பேசினால் நீங்களும் பேசுங்கள் என்று கருத்துத் தெரிவித்தது.
மேலும், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் விஜய், கரூர் சென்று, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தால், இந்த வழக்கில் சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கும் என்று திமுக வழக்குரைஞர் கூறியதற்கு, உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முதல்வர் விஜய் பெயர் குற்றஞ்சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. பிறகு, அவர் குற்றஞ்சாட்டப்பட்டவர் என்று திமுக எவ்வாறு நீதிமன்றத்தில் சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு, முதல்வர் மாநில மக்களிடம் பேசுவதை எவ்வாறு நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியது.
முதல்வரின் பயணத்தை நீதிமன்றம் எவ்வாறு முறைப்படுத்த முடியும்? நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்திப்பது எவ்வாறு சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக அமையும்? என்றும் திமுகவிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
உச்ச நீதிமன்றம் அரசியல் மேடையல்ல, உங்கள் சண்டைகளை நீதிமன்றத்துக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி, முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற அறிவுறுத்தியது. இல்லையென்றால், மனு தள்ளுபடி செய்யப்படும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, திமுகவின் கோரிக்கையை ஏற்று, மனுவை திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
This is not a political stage; keep your squabbles outside Supreme Court
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






