தமிழ் அறவியற் சிந்தனையாளரான திருவள்ளுவருக்கும் சமணத் தீர்த்தங்கரர்களுள் ஒருவரான மகாவீரருக்கும் இடையே மிகுந்த கருத்தொற்றுமைகள் காணப்படுகின்றன; ஒப்பிட்டுக் காணும் போது அவை மனத்தைச் சிலிர்க்கச் செய்கின்றன.
இன்றைய பிகார் மாநிலத்தில் குந்தக்கிராம் என்ற வறண்ட நிலத்தில் பிறந்தவர் வர்த்தமான மகாவீரர். வர்த்தமானன் என்பதற்கு "வளத்தைக் கொண்டுவந்தவன்' என்பது பொருள். வர்த்தமானர் "மெளனம் பூண்ட அதிசயக் குழந்தை' என்று அழைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
பிறருக்குத் துன்பம் தராமல் இருப்பதே வாழ்வின் குறிக்கோள் என்று கொண்டவர் வர்த்தமானர். மகாவீரர், மக்கள் யுத்தங்களில்லாமல், சண்டை சச்சரவுகளில்லாமல், போட்டி பொறாமைகளில்லாமல் எவ்வுயிருக்கும் தீங்கிழைக்காமல் ஒரு புல்லுக்கும் வலிக்காமல் வாழ்வதெப்படி என்ற தேடலை மேற்கொண்டு தவம் செய்தார்.
அதில் அவர் கண்டடைந்ததுதான் அகிம்சை என்ற கோட்பாடு. அக் கோட்பாடு பின்னாள்களில் உலகம் முழுவதிலும் செல்வாக்குப் பெற்றது. வள்ளுவப் பெருமான்
இன்னா எனத்தான் உணர்ந்தவை
துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். (குறள் 316)
என்றும்
தன்உயிர்க்கு இன்னாமை தானறிவான்
என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். (318)
என்றும் கூறும் கருத்துகள் மகாவீரருடைய
சிந்தனைகளை ஒத்தவை என்பது புலப்படும்.
மகாவீரர் நீண்ட காலம் தவமிருந்து கண்ட உண்மைகள் பல. நற்காட்சி, நல்லறிவு, நற்செயல் போன்றவை மனித இனத்தை வாழ வைக்கும் என்று கண்டு கூறினார் மகாவீரர். காண்பதை மனத்தில் ஏற்றுக் கொள்ளுதல்; நல்லனவற்றையே காணுதல் நற்காட்சியாகும்.
வள்ளுவர்
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. (352)
என்று காண்பதில் குற்றமற்ற தன்மையை
வற்புறுத்தினார்.
நல்லறிவு என்பதை "சமய ஞானம்' என்று மகாவீரர் குறிப்பிட்டார். நன்மை, தீமைகளைப் பகுத்து அறிதல் மனிதன் பெறவேண்டிய அறிவு என்று வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிவு அற்றங்காக்கும் கருவி செருவார்க்கும்
உள்ளழிக்கலாகா அரண். (421)
என்றும்
அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடையரேனும் இலர். (429)
என்றும் வள்ளுவர் அறிவின் தேவையை வற்புறுத்துகிறார்.
நல்ல செயல்கள் என்பதில் வள்ளுவர் குறிப்பிடும் கொல்லாமை, கள்ளாமை, அவாவின்மை, பொய்யாமை முதலான பல அறங்கள் இடம் பெறுகின்றன. இவற்றை உண்மையாகக் கடைப்பிடிப்பதே "மகாவிரதம்' என மகாவீரரால் கூறப்படுகிறது. இந்த விரதங்கள் மனிதனின் மனத்தைப் பக்குவப்படுத்துகின்றன என்று மகாவீரர் குறிப்பிடுகிறார்.
அன்பு செய்வதே சிறந்த தவம் என்று மகாவீரர் குறிப்பிடுகிறார். வள்ளுவர் அன்புடைமை என்ற அதிகாரத்திலும் பிற பல இடங்களிலும் அன்பின் மேன்மையையும் உயிர்களைச் சமமாகக் கருத வேண்டிய தேவையையும் வற்புறுத்திக் கூறுகிறார்.
உண்மை பேசுவதே சிறந்த அறம் என்பதை சந்தேகத்துக்கிடமின்றி கூறுகிறார் வள்ளுவர்; அந்தக் குறட்பா
யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை
எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. (300)
என்று அமைகிறது.
அகிம்சை எனப்படும் உயர் பண்புக்கு தலையாய எதிரி வஞ்சகம் ஆகும். சிறு கோபத்தை மனத்துள் வைத்து அதனைப் போற்றி வளர்த்து எதிரியை அழித்துத் தானும் அழிந்துபோதல்.
இந்தப் பண்பைப் பலரிடமும் இன்று காணலாம்; மகாவீரர் வஞ்சம் எனும் பண்பை வன்மையாகக் கண்டிக்கிறார்.
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான் அறி குற்றப்படின்? (272)
இற்றை நாள்களில் மிகப் பெரும் சமூகக்
குற்றமாகக் காணப்படுவது ஒருவன் பிறர் பொருளைக் கவர எண்ணுவதாகும்; மகாவீரர்
அஸ்தேயம் எனப்பட்ட இம்மனப் போக்கைத் தமது உபதேசங்களில் வன்மையாகக் கண்டிக்கிறார். வள்ளுவர் பல குறட்பாக்களில் இக்கருத்தை ஏற்று மொழிகிறார்.
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து
ஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. (281)
என்ற பா பிறர் பொருள் மீது ஆசை வைப்பதன் தீமை குறித்து அமைந்தது.
மனித இனத்தையே பூண்டோடு அழிக்கும் வல்லமை கொண்ட பண்பு கோபம் ஆகும். கோபத்தைப் பற்றி ஆய்வு செய்த மகாவீரர் நான்கு வகையான கோபங்கள் பற்றிக் கூறி அவற்றைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகிறார். அனந்தனுபந்தி கோபம், அப்பிரத்யாக்னி கோபம், பிரத்யாக்கினி கோபம், சமஜவலன கோபம் என்ற நான்கு வகைகளைப் பற்றிக் கூறுகிறார்.
அனந்தானுபந்தி கோபம் என்பது பாறையில் ஏற்பட்ட பிளவு போல மறையாமல் இருப்பது. அப்பிரத் யாக்னி கோபம் என்பது பூமியில் ஏற்பட்ட வெடிப்புப் போல தண்ணீர் பட்டதும் வெடிப்பு மறைந்துவிடுவதைப் போல மாறும் தன்மையது.
சாம்ஜவலன கோபம் என்பது நீரில் கிழித்த கோடு போல உடனேயே மறைந்து விடுவது. மகாவீரர் கோபத்தின் தன்மைகளைக் கூறி அவற்றைக் களைய வேண்டும் என்று கூறுகிறார்.
இந்தக் கருத்தை நன்கு மனத்துட் கொண்ட வள்ளுவப் பெருமான்
தன்னைத்தான் காக்கின் சினம்காக்க;
காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம். (305)
என்று கடுமையாக எச்சரிக்கை செய்கிறார். திருக்குறளின் வெகுளாமை அதிகாரம் முழுவதும் இத்தகைய நான்மணிகள் ஆகும்.
மனித இனம் நல்வாழ்வு வாழவேண்டும் என்று எண்ணிய வர்த்தமான மகாவீரரும் வள்ளுவப் பேராசானும் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள் என்றாலும் சிந்தனையில் ஒப்புமை உடையவர்கள். எனவே, அவர்களின் கருத்துகளும் ஒப்புமை உடையனவாக இன்றும் திகழ்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







