/

மக்களாட்சியின் தேக்க நிலை!

உலகில் மக்களால் வரவேற்கப்படும் ஓர் ஆட்சி முறை என்றால் அது மக்களாட்சிதான். காரணம், மக்கள் நினைத்தால் ஆட்சியாளரை மாற்றிவிடலாம் என்பதற்காகத்தான்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 5:51 am IST

இன்றைய அரசியல் சூழலில் மக்களாட்சி என்ற சொல் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாக இருந்தபோதும் பாமரன் தொடங்கி, அரசியல்வாதிவரை அந்தச் சொல்லின் ஆழம், மகத்துவம் அறிந்து பயன்படுத்துகிறார்களா என்பது சந்தேகம்தான்.

இன்னொரு நிலையில், இந்த மக்களாட்சி முறையாகப் பயன்படுத்துவதற்குப் பதில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுவிட்டது என்ற வாதமும் இன்று பெரிய அளவில் அறிவுத் தளத்தில் முன்வைக்கப்படுகிறது.

நம் சமூக, அரசியல் செயல்பாடுகளில் பெரும்பாலானவை மக்களாட்சிக்கு எதிரானவை என்ற விவாதமும் ஆய்வாளர்களால் வைக்கப்படுகிறது. மக்களாட்சி தோல்வியைச் சந்திக்கிறது என்ற ஒரு விவாதமும் வைக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள தொடர் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் வருகின்றன. அவையும் மக்களாட்சி தேங்க ஆரம்பித்துவிட்டது என்றுதான் கூறுகின்றன.

உலகில் மக்களால் வரவேற்கப்படும் ஓர் ஆட்சி முறை என்றால் அது மக்களாட்சிதான். காரணம், மக்கள் நினைத்தால் ஆட்சியாளரை மாற்றிவிடலாம் என்பதற்காகத்தான். மக்களாட்சி என்ற கருத்தியலில் குறையில்லை. மாறாக, குறை அதை இயக்கும் மனிதர்களிடம்தான் இருக்கிறது. இதில் இரு வகைகள் உண்டு. ஒன்று, இந்த மக்களாட்சியை அறியாமையில் இயக்குவது. இரண்டு, இதை சுயநலம் கருதி தவறாக இயக்குவது.

உலகில் இந்த இரண்டாவது நிலையில் மக்களாட்சியை இயக்கித்தான் மக்களாட்சியை தாழ்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் என்று படம் பிடித்துக் காண்பிக்கிறது இந்த ஆய்வறிக்கைகள். இதற்கு "விடெம் 2026' அறிக்கை ஒரு சான்று. மக்களாட்சிக் கோட்பாளர்கள் அனைவரும் கூறுவது, மனித இனத்துக்கு மக்களாட்சி என்பது பெருங்கொடை. அதைத் தந்ததே மக்கள்தான். மக்கள் தியாகம் செய்து போராடிப் பெற்றதுதான் மக்களாட்சி. அதை உணர்ந்து மக்களாட்சியைக் கைக்கொண்டால், எந்த ஆட்சிமுறையும் தராத நன்மையை பெரும்பான்மை மக்களுக்குத் தரும்.

இன்று நாம் செயல்படுவது பிரதிநிதித்துவ மக்களாட்சியில்; இந்த பிரதிநிதித்துவ மக்களாட்சியும் குறைகள் நிறைந்தவைதான். காரணம், இதன் இயக்கம் என்பது இதை இயக்குபவர்களின் கையில் இருப்பதால். அதே நேரத்தில், இன்று இதைவிட நமக்கு வேறு ஒரு நல்ல அமைப்பு இல்லாததால் இதைச் சிறந்ததாக நாம் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் கோட்பாட்டாளர்களின் கருத்து.

ஒரு சமூகத்தில் மக்களாட்சி சிறப்பாகச் செயல்படுகிறதென்றால் அதற்கு ஆட்சியாளர்கள் மட்டுமே காரணம் அல்ல. அதில் மக்களுக்கும் பங்கு உண்டு. மக்களின் பங்கேற்பு அதன் தரம் உயரும்போது மக்களாட்சியின் தரமும் உயரும். ஆகையால்தான் மக்களாட்சிச் செயல்பாடுகளில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தையும் பங்கேற்பு ஜனநாயகத்தையும் ஒருங்கிணைப்பதில் நாம் பெறும் பயனை பெரும்பான்மை மக்களுக்குப் பெற்றுத் தரமுடியும் என்று மக்களாட்சி நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரதிநிதித்துவ மக்களாட்சியில் செய்ய முடியாத மக்கள் நலத் திட்டங்களை பங்கேற்பு மக்களாட்சி மூலம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உலகில் உருவாகியுள்ளது.

இன்றைய உலகில் பிரதிநிதித்துவ மக்களாட்சியுடன் அதாவது நாடாளுமன்ற - சட்டப்பேரவை செயல்பாடுகளுடன் உள்ளாட்சிச் செயல்பாடுகளை இணைக்க எண்பதுக்கும் அதிகமான நாடுகளில் உள்ளாட்சியை அரசாகவும் காத்திரமான மக்கள் இயக்கமாகவும் உருவாக்கி அதில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்தனர்.

இந்த அறிவார்ந்த செயல்பாட்டைப் புரிந்து செயல்படுத்தும் நாடுகள் உலகில் எண்ணிக்கையில் அதிகம் இல்லை. ஏன் இந்தியா கூட உள்ளாட்சியை அரசாக மாற்ற அரசமைப்புச் சாசனத்தையே திருத்தியது. இருந்தபோதும், கேரளத்தைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் அந்த நிலையில் மக்கள் பங்கேற்பை உறுதி செய்ய இயலவில்லை மாநில அரசுகள்.

அதே நேரத்தில் நாம் எங்கு நம் மக்களாட்சியைத் தொடங்கினோம் என்ற வரலாற்றைப் புரட்டினால் நம் தலைவர்கள் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையுடன் இந்த பிரதிநிதித்துவ மக்களாட்சியை

இந்தியாவில் செயல்படுத்தினார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவுக்கு அதிபர் முறையைக் கொண்டு வராமல், நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்டு வந்தது எதற்கென்றால் ஒரு கூட்டுத் தலைமையில் ஓர் அரசு செயல்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன்தான்.

இன்று நம் நாட்டில் செயல்படும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கையை வைத்தும், அவற்றின் செயல்பாடுகளை வைத்தும் இந்தக் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த மக்களாட்சியை சிதிலமடையச் செய்கின்றன என்ற விவாதம் முன்னெடுக்கப்படுகிறது.

ஆனால், நாம் சுதந்திரம் அடைந்தவுடன் நம் மக்களாட்சியை நிறுவ முயன்றபோது பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பல்வேறு விதமான கட்சிகள் செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசியலை உருவாக்கும் எனக் கட்சிகள் வளர தடையின்றி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

பலவிதமான கட்சிகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டன. அவை அனைத்தும் பக்குவத்துடன் இயங்க முடிந்தது. கொள்கைகள், கோட்பாடுகளில் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு பக்குவப்பட்ட ஓர் அரசியல் கலாசாரத்தில்தான் அந்த அரசியல் செயல்பாடுகள் நடந்தேறின. பல்வேறு அரசியல் கட்சிகள் இந்தியாவில் செயல்பட வாய்ப்பைத் தந்தபோது அரசியல் மேம்பாட்டைப் பற்றி ஆய்வு செய்த ஜீன் பிலாண்டல் இந்தப் பார்வையையும் அணுகுமுறையும் வெகுவாகப் பாராட்டினார்.

அடிப்படையில் மக்களாட்சி என்பது கருத்து வேற்றுமையில்தான் மேம்படும். அது உண்மைத் தன்மையில், ஆரோக்கியமான, சூழலில் நடைபெற வேண்டும். அதற்கு ஓர் அரசியல் திறன், பக்குவம் அரசியல்வாதிகளுக்கு இருக்க வேண்டும். வேறுபட்ட கருத்துகள் கொண்ட அரசியலில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு வேற்றுமையில் ஒற்றுமை காண பக்குவத்தில் செயல்படும் ஒரு கலாசாரம் தேவை. அது சுதந்திரம் அடைந்தபோது இருந்தது.

எவ்வளவு வேறுபாடுகள் கட்சிகளுக்குள் கருத்தில் இருந்தபோதும் தேசத்தின் அரசியலோ, சட்டப்பேரவை, நாடாளுமன்ற செயல்பாடுகளோ சீர்குலையக் கூடாது. கருத்துகள் பரிமாற பரிபூரண ஒத்துழைப்புத் தேவை. அதே நேரத்தில் முடிவுகள் எடுக்கும்போது முரண்பாட்டை உடன்பாடாக்க ஒரு பக்குவம் தேவை. அதைச் செய்து கொண்டிருந்தனர் நம் அரசியல் கட்சித் தலைவர்கள். காரணம் அன்று நாடு, நாட்டு மக்கள்தான் பிரதானமாக அவர்களின் வாதங்களில் வெளிப்பட்டன.

மக்களின் வறுமை, அறியாமை, வசதிகள் அற்ற சூழல், மக்களின் ஒற்றுமை என்பதுதான் அரசியல் செயல்பாடுகளின் பின்புலமாக இருந்தது. அடுத்து அது ஒரு தியாக காலம். அன்று அவர்களுக்கு அரசியல் என்பது பெரும் பதவி பிடித்து பெரும் பணம் சேர்த்து சுகபோக வாழ்வு என்பது அடிப்படையாகக் கொண்டு பெரும்பான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் செயல்படவில்லை. எனவே, எவ்வளவு வேற்றுமைகள் உடன்பாடற்ற நிலையில் விவாதங்கள் நடந்தபோதும் அரசியல் நாகரிகம் குலையவில்லை.

இந்தியாவில் இவ்வளவு கட்சிகள் தோன்றி, வளர்ந்து, வியாபித்து, சுருங்கி காணாமல் போன வரலாறும் உண்டு. அந்த வரிசையில் இன்று இன்னும் பல கட்சிகள் உள்ளன. இதற்கு மக்களாட்சி என்ற ஒற்றைச் சொல்தான் காரணம்.

ஆனால், இன்று நடக்கும் மக்களாட்சி என்பது முரண்பட்ட நிலையில் உள்ளது என்பதைத்தான் நம்மால் பார்க்க முடிகிறது.

அரசியல் கட்சிகள் கொள்கைகளில், கோட்பாடுகளில் வேறுபட்டு ஒரு பக்குவமான அரசியலை முன்னெடுப்பதற்குப் பதில், மக்களாட்சிக்குப் புறம்பான வன்மம், வன்முறை நிறைந்த, பக்குவமற்ற, சுயநலம் தேடும், சுகபோக வாழ்க்கை நோக்கும் சுயநல அரசியலாக இருப்பதுதான் இன்றைய மக்களாட்சியின் அலங்கோலம்.

இன்று பொருளாதார நிலையில் நாம் உயர்ந்துள்ளோம்; வறுமையைக் குறைத்துள்ளோம்; தொழில்நுட்பத்தைப் பெருக்கியுள்ளோம். ஆனால் நேர்மையில், அறத்தில், உண்மையில், பக்குவத்தில் நாம் தாழ்ந்து விட்டோம்.

மக்களாட்சியில் உடன்பாட்டை உருவாக்குவதும், பக்குவத்தை உருவாக்குவதும், மக்களைத் தயார் செய்வதும்தான் அடிப்படைப் பணிகள். இன்று இதற்கு நேர் எதிர்திசையில்தான் நம் கட்சிகள் சென்று கொண்டுள்ளன. இதை யார் சரி செய்வது, எப்போது என்ற கேள்விக்குப் பதில், மக்களைத் தயார் செய்வதுதான முதன்மைப் பணி. மக்களாட்சிக்குத் தேவையான புரிதலை, அறிவாற்றலை, உளவியலை மக்களிடம் உருவாக்குவதுதான் மிக முக்கியமான பணி.

அதற்கு குடிமக்கள் கட்சிகளைக் கடந்து குடிமக்களாக அரசியல் கட்சிகளையும், அரசையும் கண்காணிக்க செயல்பட வேண்டும். காரணம் குடிமக்கள்தான் உச்சநிலை அதிகாரம் படைத்தவர்கள். அரசு அதிகாரத்தை நாடாளுமன்றத்திலிருந்தோ சட்டப்பேரவையிலிருந்தோ பெறவில்லை. மாறாக, மக்களிடமிருந்துதான் பெறுகிறது. இந்தக் கருத்தை 20 ஆண்டுகள் மக்களிடமும், மக்கள் தலைவர்களிடமும் மகாத்மா காந்தி கூறி வந்ததாக அவரே பதிவு செய்துள்ளார்.

இன்றைய மக்களாட்சியில் நாம் எதிர்கொள்ளும் இந்த தேக்கநிலையை சமாளிக்க வேண்டும். இதற்கு புதுத் தொழில்நுட்பமோ, புதிய சட்டமோ தேவை இல்லை. இதற்குத் தேவை ஒரு மக்கள் தயாரிப்பு. மக்களுக்கான அரசியல் எது? அதை எப்படி கட்சி அரசியலிலிருந்து வேறுபடுத்திச் செய்வது என்பதை அறிந்து மக்களைத் தயார் செய்ய வேண்டும். இந்தப் பணிதான் இன்று குடிமக்களாக அறிவார்ந்த பொதுக் கருத்தாளராக நாம் செய்ய வேண்டிய பணி.

கட்டுரையாளர்:

பேராசிரியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.