எஸ்.எஸ். ஜவஹர்
பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் என்பது குறித்து நாம் பேசும்போதெல்லாம் "கண்ணாடிக் கூரையை உடைத்தல்' என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டது. கல்வி, தொழில், நிர்வாகம், ராணுவம், அறிவியல், அரசியல் எனப் பல துறைகளில் பெண்கள் உயர்ந்த பதவிகளை அடைவதை இந்த உவமை விளக்குவதாகக் கூறப்படுகிறது.
சில குறியீட்டு வெற்றிகளைக் காட்டி பெருமைப்படுவதில் அர்த்தமில்லை; சமூக மற்றும் அரசியல் கட்டமைப்பு மாற்றங்களுக்கான பயணம் தொடங்க வேண்டும். பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஒரு கண்ணாடிக் கூரை போன்ற ஒற்றைத் தடையாக இல்லை; அது பல அடுக்குகளைக் கொண்ட அமைப்பு.
பழைமை மாறாக சமூக மரபுகள் மற்றும் மனநிலை, பொருளாதார சார்புத்தன்மை, பாதுகாப்புக் கவலைகள், அரசமைப்புகளில் இயல்பாகவே நிறைந்துள்ள குறைபாடுகள், அதிகார மையங்களின் மூடப்பட்ட வலையமைப்புகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட சிக்கலான ஒரு புதிர்ப் பாதையாக உள்ளன.
சில பெண்களின் தனிப்பட்ட வெற்றிகளை முன்னிறுத்துவதால் மட்டும் சமத்துவம் உருவாகாது. சாதாரண பெண்களும் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்கள் வரை தன்னம்பிக்கையுடன் பொதுவாழ்க்கைக்குள் நுழைந்து தலைமைப் பொறுப்புகளை ஏற்கக்கூடிய இயல்பான சூழலை உருவாக்குவதில்தான் உண்மையான முன்னேற்றம் உள்ளது. அப்படி அமைந்துள்ள நாடுகளில் பெண்கள் முன்னேற்றம் எவராலும் தடுக்க முடியாது.
இன்றைய இந்தியாவில் கல்வி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், நிர்வாகம், விளையாட்டு, அறிவியல் போன்ற அனைத்துத் துறைகளிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்துள்ளனர். உண்மைதான். இருந்தபோதிலும், அரசியல் பிரதிநிதித்துவம் என்ற துறையில் இன்னும் பெரிய இடைவெளி காணப்படுகிறது.
உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்று பெருமைப்படுகிற போதிலும், பெண்களின் சட்டப்பேரவை, நாடாளுமன்றப் பங்கேற்பு இன்னும் திருப்திகரமான நிலையில் இல்லை.
இந்திய தேர்தல்களை திருவிழா ஆக்கியவர்கள் பெண்கள். தேர்தல் காலங்களில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருன்றனர். பல மாநிலங்களில் பெண்களின் வாக்குப்பதிவு ஆண்களைவிட அதிகமாக இருப்பதையும் நாம் காண்கிறோம். ஆனால், வாக்களிக்கும் அளவுக்கு அரசியலில் அதிகாரப் பகிர்வில் பெண்களுக்கு இடம் வழங்கப்படவில்லை என்பது ஒரு மாபெரும் மக்களாட்சி தத்துவத்தின் முரண்பாடாகும்.
இந்திய மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்களாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாகவே உள்ளது. மாநில சட்டப்பேரவைகளிலும் இதே நிலை தொடர்கிறது. வாக்காளர்களாக பெண்களை அரசியல் கட்சிகள் மதிக்கின்றன; ஆனால், தலைவர்களாகவும், கொள்கை உருவாக்குபவர்களாகவும் அவர்களை ஏற்றுக்கொள்வதில் ஏன் தயக்கம் காட்டுகின்றனர்? என்பது ஆராயப்பட வேண்டும்.
மக்களாட்சி முறையில் பங்கேற்பாளர்களாக மட்டுமே இருக்க வைத்துவிட்டு கொள்கை முடிவெடுக்கும் மையங்களில் போதுமான அளவில் இடம் பெறவில்லை என்பது கண்கூடு.
இந்த நிலைக்குக் காரணம் பெண்களின் ஆர்வக் குறைபாடு அல்லது திறன் குறைபாடு அல்ல. மாறாக, அரசமைப்பின் கட்டமைப்பு குறைபாடுகளே முக்கியக் காரணிகளாக உள்ளன. அரசியல் பாரம்பரியம், பொருளாதார வளம் உள்ளவர்கள். பண பலம் மற்றும் பின் புலம் இல்லாத ஒரு சாதாரண ஆனால் சக்தி வாய்ந்த பெண்ணுக்கு அரசியல் உலகுக்குள் நுழைவதே இன்றைக்கும் பெரும் சவாலாக உள்ளது.
தேர்தல் செலவுகள், அரசியல் கட்சிகளின் உள்கட்டமைப்பு, பழகிப்போன ஆண் ஆதிக்க கலாசாரம் மற்றும் பாதுகாப்புக் கவலைகள் ஆகியவை அவர்களின் பாதையை மறைக்கின்றன.
இந்த நிலையை மாற்றுவதற்கு ஆழமான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் தேவை. பெண்களுக்கு அரசியல் இடஒதுக்கீடு வழங்குவது அவசியமான ஒரு படியாகும். ஆனால், அது நீண்டகால அரசியல் விவாதங்களிலும் நிர்வாகத் தடைகளிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது.
சமத்துவம் என்பது மக்களாட்சியின் அடிப்படை மதிப்பு என்றால், பெண்களின் அரசியல் பங்கேற்பும் உடனடியாக உறுதி செய்யப்பட்டு உரிமையாகக் கருதப்பட வேண்டும்.
அதே நேரத்தில், இடஒதுக்கீடு வெறும் பெயரளவிலான பிரதிநிதித்துவமாக மாறக் கூடாது. பெண்களின் பெயரில் ஆண்கள் அதிகாரம் செலுத்தும் நிலை உருவாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர் தேர்வு முறையிலும் அடிப்படையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு கட்சியும் குறிப்பிட்ட சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற சட்டபூர்வ கட்டாயம் கொண்டுவரப்படலாம். கட்சிகள் அடிமட்டத்தில் இருந்து பெண் தலைவர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட வேண்டியிருக்கும். இது வெறும் தேர்தல் உத்தியாக அல்லாமல், அரசியல் கலாசார மாற்றமாக மாறும்.
மேலும், அரசியல் களத்தில் பணமும் பலமும் செலுத்தும் தாக்கத்தைக் குறைப்பதும் மிகவும் முக்கியம். அதிக செலவுகள், மிரட்டல் அரசியல், வெறுப்பூட்டும் பேச்சுகள் போன்றவை சாதாரண குடிமக்களை அரசியலிலிருந்து விலகச் செய்கின்றன. அவ்வாறான செயல்கள் பெண்களுக்கு இன்னும் பெரிய தடைகளாக அமைந்து விடுகின்றன.
பொதுமக்களும் மகளிருக்கெதிரான செயல்பாடுகளைக் கண்டிக்கும் வகையில் வாக்களிக்கத் தொடங்கினால், பல நல்ல மாற்றங்கள் தானாக ஏற்படும். பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை சமூக விரோத சக்திகளாக பார்க்க வேண்டும். சட்டம் செய்ய முடியாததை ஒரு சமுதாயம் செய்துவிடும்.
தேர்தல் நிதி முறையில் வெளிப்படைத்தன்மை, செலவு வரம்புகளை கடுமையாக அமல்படுத்துதல், பெண்களை அவமதிக்கும் அரசியல் பேச்சுகளுக்கு எதிராக தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை விமர்சனம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் அவசியமான சீர்திருத்தங்களாகும்.
அரசியல் முடிவுகள் பல நேரங்களில் அதிகாரபூர்வ கூட்டங்களுக்குப் பின்னர் பெண்கள் பற்கேற்க முடியாத சூழலில் எடுக்கப்படுவது ஒரு வகை புறக்கணிப்புதான். இரவு நேர சந்திப்புகள், தனிப்பட்ட வலையமைப்புகள், மூடிய அறை ஆலோசனைகள் போன்ற இடங்களில் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்லை. குடும்பப் பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு சவால்கள் காரணமாக அவர்கள் இவ்வாறான அதிகார வட்டாரங்களில் பங்கேற்க முடியாமல் போகிறது. எனவே, முடிவெடுக்கும் செயல்முறைகளை வெளிப்படையாகவும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் மாற்றுவது காலத்தின் தேவையாகும்.
அரசியல் பிரதிநிதித்துவம் பொருளாதார சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாகும். பொருளாதார வலிமை இல்லாமல் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியாது. குடும்பத்தின் பொருளாதார ஆதரவின்மீது சார்ந்திருக்கும் பெண்கள் பொதுவாழ்க்கையில் சுதந்திரமாகச் செயல்படுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறைந்த வட்டிக் கடன்கள், தொழில் தொடக்க உதவிகள், சொத்துரிமை பாதுகாப்பு போன்ற நடவடிக்கைகள் பெண்களின் தன்னம்பிக்கையையும் சுயநிலையையும் வலுப்படுத்தும். பெண்களின் பாதுகாப்பும் அவர்களின் முன்னேற்றத்திற்கான அடிப்படை நிபந்தனையாகும்.
பாதுகாப்பான பொதுப் போக்குவரத்து, தெரு விளக்குகள், கண்காணிப்பு வசதிகள், விரைவான நீதிமுறை நடவடிக்கைகள் ஆகியவை பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தை உறுதி செய்யும். ஒரு பெண் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடிந்தால்தான் சமூக வலையமைப்புகளை உருவாக்கவும், பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவும், தலைமைப் பொறுப்புகளை ஏற்கவும் முடியும்.
அதேபோல், அரசின் பட்ஜெட் திட்டமிடலிலும் பெண்களின் தேவைகள் மையமாகக் கருதப்பட வேண்டும். சுகாதாரம், குழந்தைகள் பராமரிப்பு, கல்வி, தொழில் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும்போது பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதுடன், அவர்கள் பொதுவாழ்க்கையில் பங்கேற்கும் வாய்ப்புகளும் விரிவடைகின்றன.
தேர்தல் காலங்களில் பெண்களை வாக்கு வங்கிகளாக மட்டும் பார்க்காமல், அவர்களின் முழுமையான முன்னேற்றத்தை உறுதி செய்யும் கொள்கைகளை வடிவமைப்பதே உண்மையான மக்களாட்சி முறையிலான பொறுப்பாகும்.
பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது ஒரு நலத் திட்ட நடவடிக்கையோ அல்லது அரசியல் கருணையோ அல்ல; அது மக்களாட்சியின் முழுமையை எட்ட உறுதி செய்யும் அடிப்படை பணி ஆகும்.
மக்கள்தொகையின் பாதியை முடிவெடுக்கும் அமைப்புகளுக்கு வெளியே வைத்திருக்கும் எந்த மக்களாட்சி முறையும் முழுமையானதாக இருக்க முடியாது. தலைமைப் பொறுப்புகளை பெண்கள் ஏற்கும்போது அவர்கள் வெறும் பங்கேற்பாளர்களாக மட்டுமல்ல, ஆட்சியின் தன்மையையே மாற்றக்கூடிய சக்தியாக மாறுகின்றனர்.
இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி பெண்களின் முழுமையான பங்கேற்புடன் மட்டுமே சாத்தியமாகும். சிலர் சாதனை படைப்பதைக் கொண்டாடுவது அவசியம் என்றாலும், அதைவிட முக்கியமானது அனைத்துப் பெண்களுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழலை உருவாக்குவதாகும்.
பெண்களின் அதிகாரமயமாக்கல் என்பது தனிநபர் வெற்றிக் கதைகளின் தொகுப்பல்ல; அது சமத்துவமான, நியாயமான மற்றும் உயிர்ப்புமிக்க மக்களாட்சியை உருவாக்கும் தேசிய இயக்கம் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடும்ப வன்முறை மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரச்னைகள்: விரிவாக விசாரிக்க நாடாளுமன்ற குழு முடிவு
அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!

தில்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு மகளிா் காவல் நிலையம் போதாது: தேவேந்தா் யாதவ்

மெனோபாஸ்: பெண்களே பேசத் தயங்குவதற்குக் காரணம்? செய்ய வேண்டியது என்ன?
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



