ஆசனவாயில் எனக்கு ரத்தக் கசிவு ஏற்படுகிறது. அதற்கு கரணைக்கிழங்கு லேகியம் சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று என் உறவினர் கூறுகிறார். அது சரியா? வெறும் உணவுப்பொருளாகிய கரணைக்கிழங்கு எப்படி மருந்துப் பொருளாக வேலை செய்யும்? இந்தக் கிழங்கு பற்றிய விவரங்கள் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
-நடராஜன், திருப்பத்தூர்.
மூலநோயில் கருணை காட்டும் கரணைக்கிழங்கு சொரி, சிரங்கு, நமைச்சல், ஊறல் போன்ற சரும நோய்களுக்கு கருணை காட்டாது. சமைக்காமல் இந்தக் கிழங்கை விண்டு வாயால் போட்டுவிட்டால், அலர்ஜி என்ற பயங்கர நிலையை ஏற்படுத்தி, சரும நோய்களைப் பெரிதுபடுத்திவிடும். ஆனால் இதற்குரிய சிறப்பு, ஆசனவாயிலுள்ள மூல முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து, மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்திவிடும்.
அனுபவமுள்ள நம் முன்னோர், ஒருமாதம் வரை வேறு எந்த உணவையும் சாப்பிடாமல் கரணைக்கிழங்கு மாத்திரம் வேகவைத்து, அப்படியே உணவாகச் சாப்பிட்டு, அதனால் ஏற்படும் நாவறட்சிக்கு மோர் குடித்து, பூரண குணம் அடைந்துள்ளனர்.
அதிலுள்ள கார்ப்புச் சுவையும் சூடான வீர்யமும் இச்செயலைச் செய்கின்றன. அதிலுள்ள துவர்ப்புச்செயல் ரத்தக்குழாய்களைச் சுருங்கச் செய்யும். ஆனால், ரத்தம் நீர்த்து ரத்தக் குழாய்களின் பலவீனத்தால் மேல்நோக்கியோ கீழ் நோக்கியோ அடிக்கடி ரத்தக்கசிவு ஏற்படுபவர்களுக்கு இது கெடுதியைத் தரும். மூலமுளைத் தடையால் ரத்தப்போக்கு உள்ள உங்களைப் போன்றவர்களுக்கு மாத்திரம் இது அதிகம் நன்மை தருகின்றது.
ஆயுர்வேத நூல்களில் கரணைக்கிழங்கு பற்றிய விவரங்கள் நிறைய உள்ளன. வீக்கத்தைக் குறைப்பதும், வலியை நிறுத்துவதும் இதன் முக்கியக் குணங்கள். ருசி, பசி, ஜீரணசக்தி, கீழ் வாயுவைத் தன் வழியே வெளிப்படுத்துவது. குடலில் கிருமி சேராமல் உணவு அழுகாமல் வெளியேற்றுவது. மூல முளையைச் சுருங்க வைத்து, வேதனையையும் தடையையும் குறைப்பது. கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுவது இவை எல்லாம் இதன் குணங்கள்.
இத்தனை நல்ல குணங்கள் இருக்கிறதே என்று நினைத்து அதிக அளவில் சாப்பிடுவதால், தானும் ஜீரணமாகாமல் மற்றவைகளின் ஜீரணத்தையும் தடை செய்து, வயிற்றில் உப்புசத்தை அதிகப்படுத்துவது இதன் கெட்ட குணம்.
கரப்பான், சொரி, சிரங்கு முதலிய சாதாரண தோல் நோய் உள்ளவர்களிலும் குஷ்டம், படை, மேக ஊறல் போன்ற கடும் நோய்களிலும் ரத்தத்தில் பித்தக் கலப்பை அதிகமாக்கி தடிப்பு, அரிப்பு இவைகளை அதிகப்படுத்திவிடும்.
வயிற்று வலி, சீதபேதி உள்ளவர்கள் கரணைக்கிழங்கை புட்டவியாக வேகவைத்து, உலர்த்தி, இடித்துத் தூளாக்கி, கஞ்சி வைத்துக் குடிக்க அவை குணமாகிவிடுவதுடன் குடல் வேக்காளத்தையும் குறைத்துவிடும்.
கிழங்கை அரைத்து நெய், தேன் சேர்த்து முழங்கால் பூட்டுகளில் ஏற்படும் வீக்கம் ஆகியவற்றில் பூச வீக்கம் வடியும். தோல் மென்மையாக உள்ளவருக்கு பூச்சு லேசாகவும், தடிமனாக உள்ள தோலில் கனமாகவும் பூசுவது நல்லது. அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் பூச்சை அகற்றி விடவேண்டும்.
ஆயுர்வேதத்தில் கரணைக் கிழங்கு லேகியத்துக்கு 'வனசூரணாதி லேகியம்' என்று பெயர். தற்சமயம் விற்பனையிலுள்ளது. இது முக்கியமாக மூலநோய், அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளில் பயன்படுகிறது. குடலில் செயல்பாட்டை மேம்படுத்தி, செரிமான சக்தியைத் தூண்டுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
காட்டுசேனைக்கிழங்கு, மோர், நெய், வெல்லம், கொடுவேலி, சுக்கு, மிளகு, தேன் போன்ற மூலப்பொருள்களால் இம்மருந்து தயாராவதால் நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்தவேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நீண்டகால நோய்களுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்துவது பாதுகாப்பானது.
உணவில் அதிக காரம், மிளகாய், மசாலா, எண்ணெய்யில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், அதிக தேநீர், காபி, மது மற்றும் புகையிலையைத் தவிர்க்கவும்.
மாறாக, முழு தானியங்கள், கீரை, காய்கறி, பழங்கள், ஊறவைத்த உலர் திராட்சை, அத்திப்பழம் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்க்கவும். போதுமான அளவு தண்ணீர், மோர், இளநீர் அருந்தவும்.
திரிபலைக் குடிநீரை அருந்தவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல்வலி நீங்க...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: சோடியம் பைகார்பனேட் குறைந்தால்...

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாத நோய் குணமாக...
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பிராஸ்டேட்டை சமாளிக்க...
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



