எனக்கு வயது நாற்பத்தொன்று. மதுபானத் தொழிற்சாலையில் எட்டுமணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்யும் நிலை எனக்கு. நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. கால்கள் வலுவிழந்து துவண்டுவிடுகின்றன. உடல் பலவீனமாக உணர்கிறேன். இது ஒருவகையான வாத நோய் என்கிறார்கள். இது ஏற்படுவது எதனால்? எப்படிக் குணப்படுத்திக் கொள்ளலாம்?
-சௌந்தர்யா, சென்னை.
வாதம் எனும் உடல்தோஷம், தன் இயல்பான இருப்பிடங்களில் அதிகரித்தாலும் அல்லது அதன் இயல்பான சஞ்சாரப் பாதை வேறு காரணங்களால் அடைக்கப்பட்டாலும் சீற்றமாகி, உடல் முழுவதும் சரியாகச் சஞ்சரிக்க முடியாமல் பல நோய்களை உண்டாக்கும். வாத தோஷத்தை அதிகரிக்கும் சிறப்புக் காரணங்களாகப் பின்வரும் செயல்கள் மற்றும் உணவுகளைக் கூறலாம்.
தன்னுடைய உடல் வலிமைக்கு மீறி உழைத்தல் - இது அநேகமாக உங்களுக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.
அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தல்.
அதிகமான உடலுறவு, உயரமான இடங்களிலிருந்து விழுதல் அல்லது அடிபடுதல்.
நீண்ட தூரம் ஓடுதல், அதிக வேலையினால் உடலைக் களைப்படையச் செய்தல்.
அதிக தூரம் நடந்து பயணம் செய்தல், திடீரென உயரமான இடங்களில் ஏறி இறங்குதல், இரவு முழுவதும் கண் விழித்திருத்தல்.
கனமான சுமைகளைத் தூக்குதல்.
யானை, குதிரை, ஒட்டகம் போன்றவற்றில் நீண்ட நேரம் பயணம் செய்தல்.
கசப்பு, துவர்ப்பு, கார்ப்புச் சுவையுள்ள உணவுகளை அதிகம் உண்ணுதல், உலர்ந்த, குளிர்ந்த லேசான (எளிதில் செரிக்கும்) உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல், உலர்ந்த கீரைகள், உலர்ந்த இறைச்சி, வரகு, உளுந்து அல்லாத சில பருப்பு வகைகள், கொள்ளு, சாமை, உடைத்த தானியங்கள், பயறு, மசூர், பட்டாணி, சிறு பட்டாணி போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல், ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் - சில நாள்கள் மிக அதிகம், சில நாள்கள் குறைவு, நீண்ட நேரம் பட்டினி இருத்தல், அஜீர உணவின் மேல் மீண்டும் உணவு உட்கொள்ளுதல்.
கவலை, பயம், தூக்கம் போன்ற மனநிலைகள், மாதவிடாய் உதிரப்போக்கு, மலம், சிறுநீர், வாந்தி போன்ற இயற்கை வெளியேற்றங்களின் அதிக இழப்பு. இவை அனைத்தும் வாதத்தை அதிகரித்து உடல் வறட்சி, நடுக்கம், வலி, மூட்டு இறுக்கம், நரம்பு நோய்கள் போன்ற பல வாதங்களுக்குக் காரணமாகின்றன.
நீங்கள் அதிக நேரம் நின்றுகொண்டே வேலை செய்வதால், இடுப்பு முதல் கால் பாதம் வரை ஏற்படும் நரம்புகளின் பலஹீனம், தடைகளின் இறுக்கத்தால் கால்கள் துவண்டு விடுகின்றன. இந்நிலையில் தசைகளின் இறுக்கம் குறையவும், தசைகளுக்குப் புத்துணர்ச்சி அளித்து நெய்ப்பூட்டி வேதனையைக் குறைக்க உள்மருந்தாகவும் மேல் பூச்சாகவும் உளுந்து பயன்படுகிறது.
ஆயுர்வேத மூலிகைத் தைலமாகிய 'மஹாமாஷ தைலம்' மேல் தேய்த்துக்குளிக்க இதமாக இருக்கும். உளுந்தையும் கொள்ளையும் வேக வைத்து அதன் கஷாயத்தால் வலி, பலவீனமான தசைகளில் ஒத்தடம் கொடுப்பது, கால் நரம்பு, தசைகளுக்கு வலுவைக் கூட்டும்.
நீங்கள் காலையில் கொள்ளும் அரிசியும் சேர்த்துக் காய்ச்சிய கஞ்சியைக் குடிக்கவும். நல்ல பசி, உடல் பலம், வீரிய வளர்ச்சி சுறுசுறுப்பு தரும். இடுப்பு வலி, தொடை வலி, முதுகு வலி, நெற்றிப்பொட்டு வலி, கால்மூட்டு, கனுக்கால் வலி, சயாடிகா (கால் நரம்பு வலி), உதாவர்த்தம் - வாயு கீழ் நோக்கிச்செல்லாமல் மேல் நோக்கிச் சென்று ஏற்படும் வயிற்று உப்புசம், மலச்சிக்கல், வயிற்றுவலி, கிரஹணி-செரிமானக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மாறிமாறி வருதல் போன்றவற்றை நீக்கச் சிறந்த மருந்துகள் பண்டைய கிராமங்களில் வழக்கத்திலிருந்தது.
அதன் விவரம்: நல்லெண்ணெய், பசு நெய், இஞ்சிச்சாறு, நார்த்தங்காய்ச் சாறு ஆகியவற்றை சம அளவில் கலந்து அதனுடன் மூன்று சிட்டிகை சுக்குப் பொடி அல்லது வெல்லம் சேர்த்து உட்கொள்ளுதல். இதை நீங்கள் பயன்படுத்தி குணமடையலாம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









