மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!ஈரான் மீதான தாக்குதல்கள் நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்பு
/

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல்வலி நீங்க...

உடல்முழுவதும் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலி, இடுப்பு வலி, முதுகுவலி, கழுத்துவலி, தசைவலி, நரம்புவலி, வாத வலி போன்றவற்றுக்கு ஆயுர் வேதத்தில் சிறந்த கஷாயம் எது?

News image
Updated On :2 ஆகஸ்ட் 2026, 4:59 pm IST

உடல்முழுவதும் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலி, இடுப்பு வலி, முதுகுவலி, கழுத்துவலி, தசைவலி, நரம்புவலி, வாத வலி போன்றவற்றுக்கு ஆயுர் வேதத்தில் சிறந்த கஷாயம் எது? அதன் மூலிகைகள், பயன்கள், உட்கொள்ளும் முறை, உணவு முறை ஆகியவற்றைக் கூறவும்.

-தனபால், சேலம்.

பாவபிரகாசம் எனும் ஆயுர்வேத நூலில், ஏழு மூலிகை மருந்துகளின் கலவையானது சிறந்த உடல்வலி நிவாரணியாகச் செயல்படும் என்று காணப்படுகிறது. அது பற்றிய விவரம்:

ராஸ்னா (சித்தரத்தை), குடூசீ (சீந்தில் கொடி), ஆரக்வதம் (சரக்கொன்றை), தேவதாரு, கோக்ஷூரம் (நெரிஞ்சில் விதை), ஏரண்டமூலம் (ஆமணக்குவேர்) மற்றும் புனர்நவா (மூக்கரட்டை) ஆகிய ஏழு மூலிகைகளையும் சமஅளவில் எடுத்து கஷாயம் தயாரித்து, அதனுடன் சுக்குப்பொடியைச் சேர்த்துக் குடித்தால் வாத நோய்கள், மூட்டுவலி, தசைவலி, உடல் வலி போன்றவை விரைவாகக் குறையும். இந்தக் கஷாய மருந்து தயாரிக்கப்பட்டு தற்சமயம் விற்பனையிலும் உள்ளது.

1. ராஸ்னா (சித்தரத்தை) - வலியை நீக்கும் சிறந்த மூலிகை.

2. குடூசீ (சீந்தில் கொடி) - உடல் அழற்சியைக் குறைக்கும்.

3. ஆரக்வதம் (சரக்கொன்றை ) - உடலில் தேங்கியுள்ள உட்புறக் கழிவுகளை வெளியேற்றும்.

4.தேவதாரு - வாதத்தைச் சமப்படுத்தும்.

5. கோக்ஷýரம் (நெரிஞ்சில் விதை) - மூட்டுகளுக்குப் பலம் தரும்.

6. ஏரண்ட மூலம் (ஆமணக்கு வேர்) - நரம்பு மற்றும் மூட்டு இறுக்கத்தைக் குறைக்கும்.

7. புனர்நவா (முக்கரட்டை) - வீக்கத்தைக் குறைத்து சிறுநீரை சீராக்கும்.

இதனுடன் சுக்குப் பொடி சேர்ப்பதால், செரிமானம் மேம்பட்டு மருந்து விரைவாக உடலில் செயல்படுகிறது.

சயாடிகா எனும் கீழ் இடுப்பிலிருந்து கால் பின்புறமாகச் செல்லும் நரம்புவலி, தசைப் பிடிப்பு உபாதை, வீக்கத்துடன் கூடியவலி, கீல்வாதம், முதுமை காரணமாக மூட்டுத் தேய்மானம் போன்ற உபாதைகளிலும் இதனைப் பயன்படுத்தலாம்.

விற்பனையிலுள்ள கஷாயத்திலிருந்து 15 மில்லி லிட்டர் எடுத்து 60 மில்லி லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிடலாம். இந்த மருந்தை உட்கொள்ளும் காலத்தில் வெந்நீர், முருங்கைக் கீரை, பூண்டு, இஞ்சி, சீரகம், வெந்தயம், நல்லெண்ணெய், பாசிப்பருப்பு, சிறு தானியங்கள் பயன்படுத்தலாம்.

இரவில் தயிர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், அதிகம் எண்ணெய்யில் பொரித்தவை, பேக்கரி உணவுகள், காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை அதிகமுள்ள மாமிச உணவு போன்றவை தவிர்க்கப்படவேண்டியவை.

வாழ்க்கை முறை: தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். உடல் எடையைக் கட்டுப்படுத்துங்கள். குளிரூட்டப்பட்ட அறையில் நீண்ட நேரம் இருக்க வேண்டாம். அதிக நேரம் ஒரே இடத்தில் உட்காரவேண்டாம். மருத்துவரின் ஆலோசனையுடன் எண்ணெய் மசாஜ் மற்றும் வியர்வையை உருவாக்கும் வெந்நீர் ஒத்தடம் அல்லது நீராவிக்குளியல் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பாரம்பரியமாகப் பயன்படுத்தப்பட்டு வரப்படும் இந்தக் கஷாய மருந்து வலியை மட்டும் தற்காலிகமாக மறைப்பதற்கல்ல; வாத சம நிலையை ஏற்படுத்தி, அழற்சியையும் வீக்கத்தையும் குறைத்து, மூட்டுகளின் இயல்பான செயல்பாட்டை மேம்படுத்தித் தருகிறது. சரியான உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்தினால் நீண்டகால நன்மை கிடைக்கும் .

க்ஷýரபலா சொட்டு மருந்து, கந்த தைலம், மஹாராஜ பிராசரணி தைலம், தான்வந்திரம் சொட்டுமருந்து, பலாதைலம், சஹசராதி, ஆவர்த்தி தைலம் போன்ற மருந்துகளை இந்தக் கஷாயத்துடன் ஒன்றிரண்டு மருந்துகளைச் சேர்த்துச் சாப்பிட, விரைவான நிவாரணம் கிடைக்க உதவுகின்றன. இவை அனைத்தும் விற்பனையிலுள்ள மருந்துகளே.

(தொடரும்)

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.