போலீஸாரால் தேடப்பட்டு வந்த அசரப்அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த ஏப்.20-ம் தேதி முதல் தங்கியிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப்அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மத போதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மத போதர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் தில்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.