/

பழனி அருள்மிகு ரெணகாளியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேகம்

பழனி அருள்மிகு ரெணகாளியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது.

News image
Updated On :4 மே 2014, 12:45 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருள்மிகு ரெணகாளியம்மன் கோயில் மஹாகும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் நடைபெற்றது.

 பழனி புதுதாராபுரம் சாலையில் காவலர்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ரெணகாளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை விநாயகர் வழிபாடு, இறையனுமதி பெறுதலும், மாலையில் முதல்கால பூஜையாக புனிதமண் எடுத்தல், முளைப்பாரி இடுதல், சக்திகலசம் அலங்கரித்தல் ஆகியன நடைபெற்றது.

சனிக்கிழமை காலை இரண்டாம் கால பூஜையாக திருமுறை திருமறை வேதமந்திரங்கள் ஜெபித்தல், அருள்மிகு ரெணகருப்பண்ணசாமிக்கு கண் திறப்பு பூஜையும், மாலையில் மூன்றாம் கால பூஜையாக பழம், அன்னம், தான்யம் மூலிகை பொருள் வேள்வியில் இடுதல், மாலா மந்திரங்கள் ஒப்புவித்தல் ஆகியன நடைபெற்றது. சனிக்கிழமை இரவு மேளதாளம் முழங்க பொன்ஆபரணப்பெட்டி எடுத்து வரப்பட்டது. 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்காம் காலபூஜைகள் நடத்தப்பட்டு நிறைவு வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டது.  யாகசாலையில் பட்டாடைகள் உள்ளிட்டவை பூர்ணாஹூதி செய்யப்பட்டபின் கலசங்கள் கோயிலை வலம் வர செய்யப்பட்டு கோபுரவிமானத்துக்கு கொண்டு வரப்பட்டது.  காலை ஒன்பதரை மணியளவில் கோபுரவிமான கும்பாபிஷேகமும், அதைத் தொடர்ந்து அருள்மிகு ரெணகாளியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது.  யாகசாலை பூஜைகளை குகஶ்ரீ தேவசேனாபதி சுகிசிவம் குருக்கள் தலைமையில் ஏராளமான சிவாச்சார்யார்கள் செய்திருந்தனர். மதியம் சிறப்பு அன்னதானமும், மாலையில் வெள்ளி சிம்மவாகனத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு மணி நேரத்துக்கு போக்குவரத்து ஆர்.எப்.ரோடு வழியாக மாற்றிவிடப்பட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், செண்டைமேளம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   நிகழ்ச்சியில் எம்எல்ஏ., வேணுகோபாலு, நகர்மன்ற தலைவர் வேலுமணி, கந்தவிலாஸ் செல்வக்குமார், காணியாளர் செல்வராஜ், ரெணரீ பொட்டிக் மூர்த்தி, பெரியநாயகியம்மன் அறக்கட்டளை சுந்தரம், தாராபுரம் பெரியசாமி, நகராட்சி கவுன்சிலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.