/

பழனி அருகே கணவன்,மனைவியை கட்டிப்போட்டு 100பவுன் நகை, ரூ.35 ஆயிரம் கொள்ளை.

பழனி அருகே முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் கணவன், மனைவியை கட்டிப்போட்டு விட்டு 100பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை திருடி தப்பி சென்றனர்.

News image
Updated On :6 மே 2014, 5:23 am

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே முகமூடி கொள்ளையர்கள் கத்தி முனையில் கணவன், மனைவியை கட்டிப்போட்டு விட்டு 100பவுன் நகைகள், ரூ.35 ஆயிரம் ரொக்கத்தை திருடி தப்பி சென்றனர்.

 பழனி அருகே தாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன்(40).  திமுக பிரமுகரான இவர் பைனான்சியர் ஆவார்.  மேலும், ஏராளமான விளைநிலங்களுக்கும் உரிமையாளர் ஆவார்.  இவரது மனைவி இந்திராணி(35).  இவர்களுக்கு நிவந்திதா(13), அனுந்திதா(10) என்ற இரு மகள்கள் உள்ளனர்.  கார்த்திகேயன் தாளையத்திலேயே சரவணா ஆட்டோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.  தாளையத்திலேயே தோட்டத்தில் பங்களா கட்டி அங்கேயே கார்த்திகேயன் வசித்து வருகிறார்.  கோடைவிடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் கார்த்திகேயன் மகள்கள் இருவரும் உறவினர் வீட்டுக்கு வெளியூர் சென்றுவிட்டனர். 

 இந்நிலையில் திங்கள்கிழமை இரவு கார்த்திகேயனும், இந்திராணியும் அவர்களுக்கு சொந்தமான குவான்ட்ரோ காரில் இரவு 10 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளனர்.  காரைவிட்டு இறங்கியவுடன் இருட்டில் மறைந்திருந்த இருநபர்கள் கையில் கத்தியுடன் அவர்களை நெருங்கி வந்து வீட்டுக்குள் கடத்தி சென்றுள்ளனர்.  அப்போது அங்கு மறைந்திருந்த மேலும் ஐந்து நபர்கள் வந்து சேர்ந்தனர்.  அனைவரும் முகமூடியுடன் குல்லா அணிந்திருந்துள்ளனர்.  கையில் கையுறை அணிந்திருந்த அனைவரும் கத்தி வைத்திருந்தனர்.  இந்திராணியையும், கார்த்திகேயனையும் முகமூடி திருடர்கள் சேலையால் கையை பின்புறம் கட்டி வாயில் துணி வைத்து அடைத்தனர்.  செல்போன்களை பறித்த பின்னர் நிதானமாக வீட்டில் இருந்த அனைத்து அறைகளில் இருந்த நகைகள், ரொக்கம் ஆகியவற்றை திருடிய திருடர்கள், இந்திராணியின் நகைகளையும் கழட்டுமாறு கூறியுள்ளனர்.  அப்போது இந்திராணி சுமார் ஐந்து பவுன் மதிப்புள்ள தாலிக்கொடியை கழற்ற முயன்றபோது திருடர்கள் வேண்டாம் என தெரிவித்துள்ளனர். திருடவந்த அனைவரும் முடிந்த அளவு சைகையிலேயே பேசியுள்ளனர்.  சுமார் 100 பவுன் நகை, ரொக்கம் ரூபாய் முப்பத்தையாயிரத்தை திருடிய பின் வீட்டை வெளியே பூட்டிய திருடர்கள் கார்த்திகேயனின் குவான்ட்ரோ காரிலேயே திருடிய பொருட்களுடன் தப்பியுள்ளனர்.  சுமார் ஒருமணி நேரம் போராட்டத்துக்குப் பின் கைகட்டை அவிழ்த்த கார்த்திகேயன் உறவினர்களை பார்த்து சாமிநாதபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திண்டுக்கல் எஸ்பி., ஜெயச்சந்திரன் தலைமையில் டிஎஸ்பி., சண்முகசுந்தரம், ஆய்வாளர்கள் புகழேந்தி, சேகர் உள்ளிட்ட ஏராளமானோர் வந்து சேர்ந்தனர்.  திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் டிஎஸ்பி., செல்வராஜ் தாமஸ் தலைமையிலான குழுவினர் வந்திருந்து தடயங்களை சேகரித்தனர்.  மோப்பநாய் லிண்டோ வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்நிலையில் கொள்ளையர்கள் தப்பி சென்ற கார் பழனி பேருந்து நிலையத்தில் அனாதையாக நின்றிருப்பது தெரியவந்ததால் போலீஸார் வாகனத்தை கைப்பற்றி பழனி டவுன் காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.  சம்பவம் குறித்து கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் சாமிநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகேயன் பைனான்ஸ் நடத்தி வருவதால் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் காரணமாகவும் இச்சம்பவம் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் மேற்கொண்டுள்ளனர்.

 பழனியில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.  குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.  ஒவ்வொரு கொள்ளை சம்பவங்களின் போதும் பொதுமக்களையே எச்சரிக்கையாக இருக்கும்படி மட்டுமே காவல்துறை அறிவுறுத்தி வருகிறது.  பழனி பேருந்து நிலையம் பகுதியில் பல கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில் பேருந்து நிலையம் பகுதியில் கண்காணிப்பு கேமராவை காவல்துறை நிர்வாகம் அமைக்காமல் உள்ளது.  பழனி பேருந்து நிலையம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டாலே பெருமளவு குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.