மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் 5 மணி நேரம் பெய்த வரலாறு காணாத மழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்தது. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து வந்தது. இதற்கிடையே கன்னியாகுமரி கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை நீடித்தது. மாலை 3 மணிக்கு பிறகு மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பலத்த பெய்தது.
தொடர்ந்து 5 மணி நேரம் நீடித்த வரலாறு காணாத மழையால் வறண்டு காணப்பட்ட பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. இதை அடுத்து சேர்வலாறு அணைக்கு விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்தது. திடீரென அதிகரித்த நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்தது.
இடைவிடாமல் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி மற்றும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்பட பல்வேறு பகுதியில் விடிய விடிய மழை நீடித்தது.
பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): புதன்கிழமை காலை நிலவரப்பபடி பாபநாசம் கீழ் அணையில் அதிகபட்சம் 408, பாபநாசம் அணையில் 300, சேர்வலாறு அணையில் 85, மணிமுத்தாறு அணையில் 266.4, கடனாநதி அணையில் 200, ராமநதி அணையில் 190, கருப்பாநதி அணையில் 82, குண்டாறு அணையில் 72, அடவிநயினார் அணையில் 56, வடக்குபச்சையாறு அணையில் 120.8 பதிவாகி இருந்தது.
இது தவிர திருநெல்வேலியில் 52 மி.மீ மழையும், பாளையங்கோட்டையில் 94.6 மி.மீ மழையும், மூலக்கரைபட்டியில் 68 மி.மீ மழையும், தென்காசியில் 94.3 மி.மீ மழையும், செங்கோட்டையில் 70 மி.மீ, ஆய்க்குடியில் 45.8 மி.மீ மழையும், களக்காட்டில் 120.8 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 225.2 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 152 மி.மீ மழையும்,
கன்னடியன் அணைக்கட்டில் 255 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 72 மி.மீ மழையும், நான்குனேரியில் 174.4 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 224.6 மி.மீ மழையும், திருவைகுண்டத்தில் 81.4 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
நீர்மட்டம் உயர்வு: புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடி உயர்ந்து 40.10 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 4905.81 கனஅடி நீர்வரத்து இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 32 அடி உயர்ந்து 79.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு சுமார் 4,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 63.60 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1327 கனஅடி நீர்வரத்து இருந்தது.
கடனாநதி அணைக்கு விநாடிக்கு 1250 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 35 அடி உயர்ந்து 60.00 அடியாக இருந்தது. ராமநதி அணைக்கு விநாடிக்கு 419 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 32 அடி உயர்ந்து 57.00 அடியாக இருந்தது. இதேபோல் கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 13 அடி உயர்ந்து 37.08 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 160 கனஅடி நீர்வரத்து இருந்தது. குண்டாறு அணைக்கு விநாடிக்கு 90 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 12 அடி உயர்ந்து 27.22 அடியாகவும் இருந்தது. அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 46 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 12.25 அடி உயர்ந்து 30 அடியாக இருந்தது.
அருவிகளில் வெள்ளம்: நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழையால் பாபநாசம் பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. பாணதீர்த்த அருவியில் கடும் வெள்ளம் ஏற்பட்ட போதிலும் அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. மணிமுத்தாறு அருவியில் வெள்ளம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அகஸ்தியர் அருவியில் வெள்ளப் பெருக்கு இருந்த போதிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
அணைகள் மூடல்: பலத்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டன. எனினும் பாபநாசம் கீழ் அணை, பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்ததால் தாமிரவருணி ஆற்றில் 3,000 கனஅடி தண்ணீர் செல்வதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வு: திடீரென பெய்த மழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் இம்மாவட்டத்தில் நீடித்த குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. குடிநீர் தட்டுபாடு எழாத வகையில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.