பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சிதம்பரம் வெடிகுண்டு சம்பவம்: ரெளடி கோஷ்டிகளுக்குள் மோதலுக்காக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்

ரெளடி கோஷ்டிகளுக்குள் மோதிக் கொள்வதற்க்காக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சிதம்பரம் வீட்டில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :15 மே 2014, 8:07 am

ஜி.சுந்தரராஜன்

ரெளடி கோஷ்டிகளுக்குள் மோதிக் கொள்வதற்க்காக வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதாக சிதம்பரம் வீட்டில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிதம்பரம் மாரியப்பாநகர் 2-வது தெற்கு குறுக்குத்தெருவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் பன்னீர்செல்வம் என்பவரது வீட்டின் தரைதளத்தில் உள்ள இடதுபுறத்தில் உள்ள பகுதியை அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரியும் அருள்பிரசாத் (34) என்பவருக்கு வாடகைக்கு வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (மே.3) காலை 10.40 மணிக்கு அருள் வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் நாகல்நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் (34) படுகாயமுற்றார். அந்த வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் வெடிகுண்டு, யுஎஸ்ஏ முத்திரை பதித்த 6 எம்எம் துப்பாக்கி, சீனா செல்போன், அரிவாள்கள் மற்றும் டைரி, சிம்கார்டுகள், பான்கார்டுகள் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன. படுகாயம் அடைந்து சிதம்பரம் ராஜா முத்துயா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன்ராம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்காக மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம்,  அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த சுரேந்திரன் (33), திருவாரூர் மாவட்டதைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (25), சிதம்பரம் அண்ணாமலைநகர் திருவக்குளத்தில் கறிக்கடை வைத்துள்ள பட்டாபிராமன் (25)  ஆகியோரை கைது செய்து தனி. தனியே விசாரணை நடத்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

போலீஸார் விசாரணையில் ரெளடி கோஷ்டிகளுக்குள் ஏற்பட்ட மோதலில், எதிர்கோஷ்டியைச் சேர்ந்த அண்ணன், தம்பியை கொலை செய்ய வெடிகுண்டுகள் தயாரித்தது தெரியவந்துள்ளது. சிதம்பரம் அண்ணாமலைநகரைச் சேர்ந்த பிரபல ரெளடி மண்ரோடு சந்திரன் விபத்தில் இறந்தார். இவரது தம்பி ஹரிக்கும், அண்ணாமலைநகர் ஆம்புலன்ஸ் குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதமாக மாறியது. கடந்த மாதம் ஹரி மற்றும் சிலர், ஆம்புலன்ஸ் குமார் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று கொலைமிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ் குமார் தம்பி ராஜேஷ் மற்றும் ஆதரவாளர்கள் ஹரியை தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து ஹரி, மண்ரோடு சந்திரனின் கூட்டாளி சுரேந்திரனிடம் தன்னை ஆம்புலன்ஸ் குமார் தீர்த்துக்கட்டிவிடுவார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுரேந்திரன், திண்டுக்கல் ரெளடி மோகன்ராமை வரவழைத்து வெடிகுண்டுகள் தயாரித்து ஆம்புலன்ஸ் குமார் மற்றும் அவரது தம்பி ராஜேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் சுரேந்திரன், திண்டுக்கல் ரெளடி மோகன்குமார், திருவாரூர் சந்தோஷ்குமார், திருவக்குளம் பட்டாபிராமன் ஆகியோரை மாரியப்பாநகரில் உள்ள பல்கலைக்கழக ஊழியர் அருள்பிரசாத் வீட்டில் தங்க வைத்து வெடிகுண்டுகள் தயாரித்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக வெடிகுண்டு வெடித்து திண்டுக்கல் ரெளடி மோகன்ராம் படுகாயமுற்றது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.