/

பழனியில் பள்ளிவாகனங்கள் அதிகாரிகளால் ஆய்வு

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளில் குழந்தைகளையும், மாணவ, மாணவியரையும் பள்ளிக்கு அழைத்து வர

News image
Updated On :20 மே 2014, 11:45 am

என்.​ அங்​கு​பாபு

பழனியில் பள்ளி வாகனங்கள் பல்வேறு துறை அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.  இப்பள்ளிகளில் குழந்தைகளையும், மாணவ, மாணவியரையும் பள்ளிக்கு அழைத்து வர பள்ளிவாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.  தற்போது கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

பழனியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் கொண்டுவரப்பட்டு அவை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது.  ஆய்வினை வட்டாரபோக்குவரத்து அலுவலர் அமிர்தஈஸ்வரன் தலைமையில் கோட்டாட்சியர் சுந்தர்ராஜ், டிஎஸ்பி., சண்முகசுந்தரம், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி, பழனி கல்வி மாவட்ட அலுவலர் கலையரசி, ஆய்வாளர்கள் வீரகாந்தி, மகேந்திரன் உள்ளிட்டோர் செய்தனர்.  பள்ளி வாகனங்களில் உள்ள இருக்கைகள், பாடப்புத்தகங்கள் வைக்கும் ரேக், அவசர வழி ஆகியன ஆய்வு செய்யப்பட்டது.  பல்வேறு வாகனங்களிலும் இருக்கைகள் சேதம், அவசரவழி திறக்காதது போன்ற குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. 

இதுபோன்ற பல்வேறு குறைகள் உள்ள ஆறுவாகனங்கள் குறைகள் சரிசெய்து வர பணிக்கப்பட்டது.  மேலும், வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, முதலுதவி கருவி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளதா என்பதும் கண்காணிக்கப்பட்டது.  மாவட்ட அளவில் முதல் முதலாக பழனியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் போது வட்டாரபோக்குவரத்து அலுவலர் அமிர்தஈஸ்வரன் தெரிவித்ததாவது, வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குறைகள் கண்டறியப்பட்டு சரிசெய்து மீண்டும் கொண்டுவர பணித்துள்ளோம்.  பள்ளிகள் திறக்கும்முன்பு இந்த ஆய்வுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக செய்யப்படுகிறது. பள்ளி வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர், குழந்தைகளை ஏற்றிவிடும் அட்டெண்டர் ஆகியோரது சான்றிதழ்கள், நடத்தை குறித்து கேட்டறியப்படும். 

மேலும், வாகனத்தின் சான்றுகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.  முக்கியமாக குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக சுமார் 29 செ.மீ உயரத்தில் நகரும் வகையிலான படிக்கட்டு அமைக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  மேலும், பழனியில் உள்ள ஆட்டோக்களின் பர்மிட்டுகள் ஆய்வு செய்யவும், அதிக குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களை கண்காணிக்கவும் உத்திரவிடப்பட்டுள்ளதாகவும், குழந்தைகள் பாதுகாப்பில் பெற்றோர்களும் அக்கறை மேற்கொண்டால் ஆட்டோக்களில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் பயணிப்பதை தவிர்க்கலாம் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.