பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதையில் பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனை ஓட்டம்
பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை துவங்கியது.


பழனி-பொள்ளாச்சி அகலரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தலைமையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை துவங்கியது.
தமிழகத்தின் முதன்மைக் கோயில் நகரான பழனியில் இருந்து பாலக்காடு, ராமேஸ்வரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடந்த 2009ம் ஆண்டு வரையிலும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீட்டர்கேஜ் பாதையை அகலரயில் பாதையாக மாற்றும் பொருட்டு 2009ம் ஆண்டு முதல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சுமார் 350 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டது. பலவருடங்களான ஆமை வேகத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து பொதுமக்களும், அரசியல்வாதிகளும் தொடர்ந்து புகார் செய்ததைத் தொடர்ந்து பணிகள் விரைவுபடுத்தப்பட்டு இந்த ஆண்டு பழனியில் இருந்து திண்டுக்கல் வரையிலான அகலரயில் பாதை பணிகள் மட்டும் முடிக்கப்பட்டு ரயில் இயக்கப்பட்டது. முதல் கட்டமாக பழனியில் இருந்து திண்டுக்கல், மதுரை வரையில் ரயில் இயக்கப்பட்டது. பின்னர் பழனியில் இருந்து சென்னைக்கும், திருச்செந்தூருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டது.
தற்போது அனைத்து ரயில்களும் நல்ல வருவாய் ஈட்டித் தரும் நிலையில் பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான பாதையை விரைவுபடுத்த வேண்டி பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். பழனியில் இருந்து பொள்ளாச்சி வரையிலான 63 கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய, சிறிய பாலங்கள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டு பல்வேறு சோதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில் திங்கள்கிழமை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சத்தீஸ்குமார் மிட்டல் தலைமையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திங்கள்கிழமை முதல் நாளன்று பழனி முதல் உடுமலைப்பேட்டை வரையிலும், செவ்வாய்க்கிழமை உடுமலை முதல் பொள்ளாச்சி வரையிலும் சோதனை ஓட்டம் நடத்தப்படும். செவ்வாய்க்கிழமை மாலை அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின்னர் ரயில் இயக்கும் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
திங்கள்கிழமை சோதனை ஓட்டத்தின் போது தென்னக ரயில் கட்டுமான பொதுமேலாளர் வெங்கிடுசாமி, மதுரை மண்டல மேலாளர் ரஸ்தோகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பழனி ரயில் நிலையத்துக்கு மிட்டல் தலைமையில் வருகை தந்த அதிகாரிகள் ரயில்நிலையத்தில் இருந்த சிக்னல் போர்டுகள் இயக்கத்தை ஆய்வு செய்தனர். பின்னர் அதிகாரிகள் அனைவரும் டிராலியில் பயணம் செய்து சோதனை மேற்கொண்டனர். டிராலி இயக்கப்படும் முன் டிராலிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஆய்வின் போது சுமார் ஒன்பது டிராலிகள் பல்வேறு மட்டத்திலான அதிகாரிகள் உடன் பங்கேற்றனர்.
ஆய்வு குறித்து மிட்டல் தெரிவித்ததாவது, பழனி முதல் பொள்ளாச்சி வரையிலான 63கி.மீ அகலரயில் பாதை பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் இந்த பாதையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். முதல் கட்டமாக திங்கள்கிழமை உடுமலை வரையிலும், செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சி வரையிலும் பாலங்கள், சிக்னல்கள், ரயில்வே லெவல்கிராசிங்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.
செவ்வாய்க்கிழமை அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும், பொள்ளாச்சி-போத்தனூர், பொள்ளாச்சி-பாலக்காடு அகலரயில்பாதை பணிகள் குறித்த அறிக்கை இதுவரை அறியப்படவில்லை என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...