கடவுச்சீட்டுகள் (பாஸ்போர்ட்) முடக்கப்படுவதாலும், தடையில்லாச் சான்று வழங்க மறுப்பதாலும் இடிந்தகரை சுற்றுவட்டார இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் புகார்மனு அளிக்கப்பட்டுள்ளது.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் தலைமையில், திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த இடிந்தகரை சுற்றுவட்டார கிராம மக்கள் அளித்த மனு:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டத்தின் போது எங்கள் பகுதி மக்களின் மீது போடப்பட்ட உண்மைக்கு மாறான வழக்குகளின் அடிப்படையில், இடிந்தகரை, கூத்தங்குழி, கூட்டப்புளி, கூடங்குளத்தைச் சேர்ந்த பலரது கடவுச்சீட்டுகள் முடக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்து வந்து இறங்கியதும் பலரது கடவுச்சீட்டுகள் விமான நிலையத்திலேயே பறிக்கப்பட்டுள்ளன. புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் பலரிடம் அவர்கள் மீது வழக்குகள் இருப்பதாகக் கூறி காவல் துறையினர் தடையில்லாச் சான்றிதழ் வழங்க மறுக்கிறார்கள். இதனால் பலர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல குடும்பங்கள் போதிய வருமானமின்றி தவித்து வருகிறார்கள்.
இந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு சில அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் வேறு வழிகளில் கடவுச்சீட்டு பெற கணிசமான பணத்தை மக்களிடம் பெரும் சூழல் உள்ளது. எங்கள் மீது போடப்பட்டுள்ள 213 வழக்குகளைத் திரும்பப் பெற்றுள்ள தமிழக அரசு மீதமுள்ள வழக்குகளையும் திரும்பப் பெறுவதோடு, எங்கள் பகுதி மக்களுக்கு தங்குதடையின்றி கடவுச்சீட்டு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எஸ்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூடங்குளம் அணுஉலையை மட்டுமன்றி நாடு முழுவதுமான அணுசக்தி கொள்கையை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். கடந்த 6 மாதங்களில் இருமுறை பல்வேறு பிரசார பயணங்களை மேற்கொண்டுள்ளோம். பிரசார பயணத்தின்போது பல மொழிகளில் அணுசக்தியின் தீமையை விளக்கும் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து விநியோகித்துள்ளோம். கூடங்குளம் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட 140 வழக்குகள் இதுவரை திரும்பப் பெறப்படாமல் உள்ளன.