பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மதுக்கொள்கையை மாற்றக் கோரி ஜன.21ல் தமிழ்நாடு கள் இயக்கம் உண்ணாவிரதம்

தமிழகத்தில் மதுக்கொள்கையை மாற்றக்கோரி வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி சென்னையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்கம்

News image
Updated On :14 ஜனவரி 2015, 12:24 pm

என்.​ அங்​கு​பாபு

தமிழகத்தில் மதுக்கொள்கையை மாற்றக்கோரி வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி சென்னையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது.

பழனி அடிவாரம் பட்டக்காரர் மடத்தில் தமிழ்நாடு கள் இயக்கத்தின் நிர்வாகக்குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மக்கள் வாழ்வுரிமைக் குழு செயலாளர் கண்ணபிரான் வரவேற்புரை வழங்கினார். பொறுப்பாளர்கள் குமாரசாமி, சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு கள் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். பின்னர் நடைபெற்ற பத்திரிக்கை சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது:-

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழை இல்லாது இருந்த நிலையில் தற்போது பெய்த மழையைத் தொடர்ந்து விவசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது சம்பா அறுவடை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அரசு சன்னரக நெல் கொள்முதலுக்கு ரூ.1,470ம், மோட்டா ரகத்துக்கு ரூ.1,410ம் நிர்ணயித்துள்ளது.  வியாபாரிகள் சிண்டிகேட்டால் வெளிச்சந்தையில் நெல்விலை மிகவும் குறைந்துள்ள நிலையில் அரசு கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நாடும் போது அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கினால் மட்டுமே நெல் வாங்கப்படுகிறது. அதை வழங்கினால் மட்டுமே காசோலை வழங்கப்படுகிறது.

கால்நடைகள் குறைந்துள்ளதால் வைக்கோல் வாங்கவும் ஆளில்லை. பல பகுதிகளிலும் நெற்பயிரில் புகையான் தாக்குதலால் விவசாயிகள் நொந்துபோயுள்ள நிலையில் இதுபோன்ற செயல்களை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல கருப்புக்கும் குவிண்டாலுக்கு ரூ.3,500 வேண்டும் என போராடி வரும் நிலையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.2,650 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது அரசு விவசாயிகளிடம் விரோதப்போக்கு காட்டுவது போல உள்ளது.  மத்திய அரசு ரூ.100 அதிகம் செய்து அறிவிப்பு வெளியிட்டாலும் தமிழ்நாட்டில் அது இல்லை.  இதனால் விவசாயிகளுக்கு பொங்கல் பொலிவிழந்து போய் உள்ளது.  இதையெல்லாம் கருத்தில் கொண்டு திருச்சி ஶ்ரீரங்கத்தில் வரும் பிப்ரவரி 13ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார். 

இதற்கான வேட்பாளர் அறிவிப்பு வரும் ஜன.18ம் தேதி சேலம் இலக்குமி அரங்கில் நடைபெறும் கூட்டத்தில்  தெரிவிக்கப்படும். இதற்காக அனைத்து விவசாய சங்கங்கள், பொது அமைப்புகள், போட்டியிடாத அரசியல் கட்சிகளிடம் ஆதரவு கோரப்படும். உலகப் பொதுமறை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.  இதற்காக பாடுபட்டு வரும் மத்திய அமைச்சர்கள் தருண்விஜய், ஸ்மிருதி ராணி ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.  இந்த அறிவிப்பு திருவள்ளுவர் தினத்தில் வரவேண்டுமென எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு இந்திய ராணுவத்துக்கு ஆட்சேர்ப்புக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது போலாகும்.  சவால் நிறைந்த இந்த விளையாட்டுக்கு தடை விதித்தால் போராடும் குணம் இளைஞர்கள் மத்தியில் குறைந்து போகும். ஆகவே ஜல்லிக்கட்டை நடத்த சட்டநடவடிக்கைகளை துரிதப்படுத்த மாநில அரசு முன்வர வேண்டும்.  கேரளாவை பின்பற்றி தமிழகத்திலும் மதுவிலக்கு மற்றும் மதுக்கொள்கை குறித்த கொள்கை மாற்றத்தை அரசு கொண்டுவர வேண்டும். 

இதற்காக வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சுமார் இருநூறு பேர் பங்கேற்கும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.  இந்த போராட்டத்தின் முடிவில் பங்கேற்போருக்கு கேரளாவில் இருந்து தயாரிக்கப்படும் தரமான போதை தராத கள் வழங்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.