92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா யார் நடத்துகிறார்கள்: நடனக் கலைஞர்கள் மத்தியில் குழப்பம் நீடிப்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

News image
Updated On :20 ஜனவரி 2015, 4:57 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கடந்த 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர் நாட்டியாஞ்சலி விழாவை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொதுதீட்சிதர்களே நாட்டியாஞ்சலியை நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இதனால் வருகிற பிப்.17-ம் தேதி தொடங்கவுள்ள நாட்டியாஞ்சலி விழாவை யார் நடத்துகிறார்கள் என்ற குழப்பம் நாட்டியக் கலைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா டாக்டர் கபிலா வாத்ஸ்யாயன், டாக்டர் ஆர்.நாகசாமி, மற்றும் சிதம்பரம் நகரத்தைச் சேர்ந்த சமூகக் கலை உணர்வுடைய ஆர்வலர்கள் ஒரு குழுவாக அமைத்து 1981-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இச்சிறப்பு வாய்ந்த நாட்டியாஞ்சலி விழா 33 ஆண்டுகளாக நாட்டியாஞ்சலி அறக்கட்டளை மூலம் கடந்த 2014-ம் ஆண்டு வரை சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் நடத்தி வருகின்றனர். நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதனையடுத்து இந்த ஆண்டு (2015) முதல் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் உலகப்புகழ் பெற்ற நாட்டிய அஞ்சலி, பரதநாட்டிய நிகழ்ச்சியை தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் என்ற பெயரில் கோயில் பொதுதீட்சிதர்களே நடத்த முடிவு செய்து அறிவித்துள்ளனர். நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியன்று தொடங்கி 9 நாட்கள் நடத்துவது என்றும், கோயில் விதிமுறைப்படி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நாட்டியாஞ்சலியை நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 33 ஆண்டுகளாக நடனக்கலைஞர்களிடம் எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் நடத்தி வந்த நாட்டியாஞ்சலி அறக்கட்டளையினர், 2015-ம் ஆண்டு நாட்டியாஞ்சலியை கோயிலுக்குள் நடத்த அனுமதி கோரி பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதரிடம் கடிதம் அளித்துள்ளனர். இதுவரை தீட்சிதர்கள் தரப்பில் நாட்டியாஞ்சலி கமிட்டிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கோயில் பூஜைகள் முடிவுற்றவுடன் இரவில் நாட்டியாஞ்சலி நடைபெறக்கூடாது என பொதுதீட்சிதர்கள் காரணத்தை தெரிவித்து, தாங்களே நடத்துவதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஏற்கனவே நடத்தி வரும் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுவினர் முதல் மகாசிவராத்திரி அன்று தவிர மற்ற நான்கு நாட்களும் இரவு 10 மணிக்கு மேல் நாட்டியாஞ்சலியை தாங்கள் நடத்தவில்லை எனக்கூறி அனுமதி கோரி பொதுதீட்சிதர்களிடம் அண்மையில் மீண்டும் ஒரு கடிதத்தை அளித்துள்ளனர்.

இந்நிலையில் பொதுதீட்சிதர்களின் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் இந்த ஆண்டு நாட்டியாஞ்சலி நடத்தப்போவதாக விளம்பர பதாகை வைத்தும், விழா நடத்துவதற்கு உபயதாரர்கள் கோரியும் அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர். இதனால் நாட்டியாஞ்சலியை யார் நடத்துகிறார்கள் என்ற குழப்பம் நடனக்கலைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.