புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலைமறியல்

பழனி அருகே உடுலை சாலையில் நாகூர் பிரிவில் பாலாறு பொருந்தலாறு அணையின் இடதுபிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
Updated On :13 மார்ச் 2015, 3:02 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே உடுலை சாலையில் நாகூர் பிரிவில் பாலாறு பொருந்தலாறு அணையின் இடதுபிரதான வாய்க்காலில் தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலேயே பெரிய அணையாக பழனி பாலாறு–பொருந்தலாறு அணை விளங்கி வருகிறது.   கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பருவமழை தவறியதால் இந்த அணையை நம்பியிருந்த விவசாயிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகினர். இந்நிலையில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது.  இதுமட்டுமின்றி பழனி பகுதியில் உள்ள குதிரையாறு, தேக்கந்தோட்டம் உள்ளிட்ட அணைகளும், குளங்கள், கண்மாய்களும் நிரம்பியதால் விவசாயிகள் தங்களது பணியை முழு வீச்சில் துவங்கினர். பாலாறு–பொருந்தலாறு அணையின் இடது பிரதான வாய்க்கால் பாசனம் மூலமாக கலையமுத்தூர், நெய்க்காரபட்டி, சித்திரைக்குளம், தாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த 12 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.  இந்நிலையில் மேற்கண்ட பகுதிகளுக்கு பாசனத்துக்காக வினாடிக்கு 75கனஅடி நீர் வீதம் 130 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறையினர் அறிவித்த நிலையில் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாக கூறி தற்போது தண்ணீர் திறப்பை நிறுத்தி விட்டனர். 

இதனால் வெள்ளிக்கிழமை நூற்றுக்கணக்கான விவசாயிகள் திரண்டு பழனி-உடுமலை சாலையில் நாகூர் பிரிவில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.  இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து விவசாயிகள் தரப்பில், கடந்த 3 ஆண்டுக்கு பிறகு விவசாய பணிக்கு கடன்வாங்கி  செலவு செய்து  நிலக்கடலை, மக்காச்சோளம், தட்டை போன்றவை பயிரிட்டுள்ளோம். 130 நாட்கள் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 90 நாட்களே திறந்து விட்ட நிலையில் தற்போது தண்ணீர் விடமுடியாது என கூறுகின்றனர். பயிர்கள் வாடி வருகிறது.  கிணறு வைத்துள்ளவர்கள் மோட்டாரில் தண்ணீர் ஓட்டி செடியை காப்பாற்றுகின்றனர். ஆனால் சண்முகநதி ஆற்றில் குடிநீருக்கு என்ற பெயரில் அதிக அளவு நீரை விவசாயத்துக்காக திறந்து விட்டுள்ளனர். இதனால்  ஆற்றோர பாசன விவசாயிகள் இரண்டாம் போக விவசாயத்தை துவக்கிவிட்ட நிலையில் நாங்கள் ஒருபோகம் கூட எடுக்கவில்லை என்றனர்.

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி., சண்முகசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் முருகன் ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணலாம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.